Sunday, October 25

சாலா _ விமர்சனம்

Loading

சாலா _ விமர்சனம்

சென்னையின் டெரர் ஏரியாவாகவே, திரைப்படங்களில் காண்பிக்கப்படும் வடசென்னை ஏரியாதான் இந்தப் படத்தின் கதைக்களமும். இங்கு பல வருடங்களாக பிரபலமாக விளங்கி வருகிறது பார்வதி பார். இதை நடத்தும் தாதாவுக்கு, குடும்பம் இல்லை. ஒரு சமயம், தன்னைக் காப்பாற்றும் சிறுவனை தத்தெடுத்து வளர்க்கிறார். அந்த சிறுவன்தான் சாலா.

வளர்ந்த பிறகும் தனக்கு ஆதரவளித்த பார்வதி பார் உரிமையாளர் அருள்தாஸ் மீது அதே பாசத்துடன் இருக்கிறார் சாலா. மதுக்கூடத்தை  கவனித்துக்கொள்கிறார்.

இந்நிலையில் பார் குறித்து பிரச்சினை ஏற்பட.. வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்று பார் மூடப்படுகிறது. அதைக் கைப்பற்ற இன்னொரு தாதா டீம் முயற்சிக்கிறது. இதனால் மோதல் ஏற்படுகிறது.

இன்னொரு புறம் மதுவை எதிர்த்துப் போராடும் மலர் டீச்சரை காதலிக்கிறார் சாலா.

அவர்கள் காதல் என்ன ஆனது… மலர் டீச்சரின் எண்ணம் நிறைவேறியதா, பார் பிரச்சினை எப்படிச் சென்றது என்பதே மீதிக்கதை.

நாயகன் சாலாவாக அறிமுகமாகி இருக்கிறார் புதுமுகம்தீரன். ஆங்குதோங்கான உடல், சண்டைக் காட்சிகளில் அதிரடி என கவனத்தை ஈர்க்கிறார். காதல் காட்சிகளிலும், தன்னை வளர்த்தவர் மீது பாசம் காட்டுவதிலும் சிறப்பாகவே நடித்து இருக்கிறார்.

நாயகன் சாலாவை வளர்க்கும் தாதாவாக வருகிறார் அருள்தாஸ். வழக்கம்போல் சிறப்பான நடிப்பு. சொந்தம் யாருமற்ற சிறுவர்கள் மீது பாசம் காட்டுவது, எதிர் தரப்பின் மீது ஆவேசம் காட்டுவது என அசத்தி இருக்கிறார்.

நாயகி ரேஷ்மா வெங்கடேஷ் மதுவை எதிர்த்து உக்கிரமாக போராட்டம் நடத்தும் காட்சிகளிலும்,  மதுவுக்கு எதிராக பொங்கி எழுந்து பேசும்போது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

வில்லன்களாக, சார்லர் வினோத். யோகிராம், போலீஸ் இன்ஸ்பெக்டராக சம்பத்ராம் ஆகியோர் கவனத்தை ஈர்க்கிறார்கள்.

தீசன் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். அதே நேரம் பின்னணி இசை அபாரம்.

அரசே சாராயம் விற்பது.. அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு, போலி மதுபான தயாரிப்பு.. அதற்கு காவல்துறையில் சிலரே உதவுவது என பரபரப்பான படத்தை அளித்து இருக்கிறார் இயக்குநர் எஸ்.டி.மணிபால்.

ஆசிரமத்தில் தங்கி படிக்கும் ஆதரவற்ற குழந்தைகள் நாயகனுக்கு ஹெல்மெட் வாங்கி பரிசளிக்கும் காட்சியில் லாஜிக்கே இல்லை. விழிப்புணர்வு என்ற பெயரில் திணிக்கப்பட்ட காட்சி தனியாக தெரிகிறது.

மொத்தத்தில் மற்றும் ஒரு சுமார் ரகப் படம்.