Friday, October 23

போகி _ விமர்சனம்

Loading

போகி _ விமர்சனம்

உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியிருக்கும் திரைப்படம் போகி.

எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாத மலை கிராமம் ஒன்று.

அங்கு வசிக்கும் மக்கள் யாருக்கேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால்கூட, தூளி கட்டி படுக்க வைத்து பல கிலோ மீட்டர்கள் கீழே இறங்கி அடிப்பகுதியில் உள்ள நகரத்தில் தான் சிகிச்சை அளிக்க வேண்டும்.

இந்தப் பின்னணியில் தன் தங்கை சுவாசிகாவை நகரத்தில் உள்ள கல்லூரியில் படிக்க வைத்து டாக்டராக்கி தனது மலைவாழ் மக்களுக்கு சேவை செய்ய நினைக்கிறார் நபி நந்தி.

ஆனால் விதி இந்த அண்ணன் தங்கை வாழ்க்கையில் விளையாடி விடுகிறது.

ரகசிய கேமராக்கள் மூலம் பெண்களை ஆபாசமாக படம் பிடித்து வெளிநாடுகளுக்கு விற்கும் கூட்டத்தின் வக்கிரமான காம வியாபாரத்திற்கு பலியாகிறார் சுவாசிக்கா.

தங்கையின் மீது உயிரையே வைத்திருக்கும் அண்ணன் நபி நந்திக்கு இந்த உண்மை தெரிய வர, சமூக விரோத கும்பலை அவர் எப்படி பழி வாங்குகிறார் என்பதுதான் போகி திரைப்படம்.

தங்கை மீது பாசம் காட்டும் காட்சிகளில் சென்டிமென்ட் நடிப்பால் நம்மை கவரும் நபி நந்தி, ஆக்சன் காட்சிகளில் அதிரடி காட்டுகிறார்.

நண்பன் நபி நந்திக்கு உதவும் வேடத்தில் நடித்திருக்கும் சரத்தும் கவனம் ஈர்க்கிறார்.

ரப்பர் பந்து படத்திற்கு பிறகு சுவாசிகாவுக்கு கிடைத்திருக்கும் நிறைவான வேடம். அதை சிறப்பாகவே செய்திருக்கிறார்.

புதிய நடிகர்கள் எல்லாம் சிறப்பாக நடித்திருக்கும் இப்படத்தில் அனுபவிக்க நடிகரான வேல ராமமூர்த்தி உயர் போலீஸ் அதிகாரி வேடத்தை உப்பு சப்பு இல்லாமல் அபத்தமாக செய்திருக்கிறார்.

இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பிரதேசங்களில் அழகை ராஜா சி.சேகரின் கேமரா அப்படியே அள்ளிக் கொண்டு வந்திருக்கிறது.

துவக்க காட்சிகளில் என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என்று புரியாமல் செல்லும் கதையோட்டத்தில் கவனம் செலுத்தி எடிட்டர் சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பை செய்து இருக்கலாம். என்ன காரணத்தாலோ தவறிவிட்டார்.

பூனம் கவுர் ஒரு பாடலுக்கு வந்து கவர்ச்சி நடனம் ஆடி விட்டுப் போகிறார்.

நவீன தொழில்நுட்ப யுகத்தில் நினைத்த இடத்தில் எல்லாம் கேமராவை மறைத்து வைத்து, அந்தரங்கத்தை படமாக்கி காசு பார்க்க நினைக்கும் கயவர்களிடமிருந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நினைத்த போகி படக்குழுவினரை தாராளமாக பாராட்டலாம்.

ஆனால் அதை சரியான முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்து இருக்கிறார்களா என்பது கேள்விக்குறிதான்.