![]()
சரண்டர் _ விமர்சனம்
சென்னையில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் ரைட்டர் ஆக பணியாற்றும் லால் விரைவில் ஓய்வு பெற இருக்கிறார்.
அதே நிலையத்தில் பயிற்சி உதவி ஆய்வாளராக தர்ஷன் பணியாற்றுகிறார்.
தேர்தலுக்கு மிகச் சில நாட்களே இருக்கும் நிலையில், காவல்துறை அறிவுறுத்தலின்படி உரிமத்துடன் கூடிய துப்பாக்கிகளை சொந்த உபயோகத்திற்காக வைத்திருப்பவர்கள் காவல் நிலையத்தில் சரண்டர் செய்து வருகின்றனர்.
நடிகர் மன்சூர் அலிகான் அதுபோல் தன் துப்பாக்கியை சூளைமேடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறார்.
யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் துப்பாக்கி திடீரென காணாமல் போகிறது.
தேர்தல் செலவுக்காக லோக்கல் தாதா ஒருவர் மூலம் அனுப்பப்படும் 10 கோடி ரூபாய் பணம் காணாமல் போகிறது.
இந்த இரண்டு விஷயங்களும் எந்த புள்ளியில் இணைகின்றன என்பதை இயக்குனர் கௌதமன் கணபதி விறுவிறுப்பான திரைக்கதை மூலம் வித்தியாசமான திரில்லராக திரையில் வடித்திருக்கிறார்.
காணாமல் போன துப்பாக்கி கிடைத்ததா?
10 கோடி ரூபாய் பணத்தை எடுத்தது யார்? என்ற சஸ்பென்ஸ் படத்தின் இறுதி வரை மிக அழகாக கொண்டு செல்லப்படுகிறது.
பயிற்சி உதவி ஆய்வாளர் புகழ் வேடத்தில் கச்சிதமாக பொருந்துகிறார் தர்ஷன்.
அவரது உயரமும், உடல் மொழியும் அந்த பாத்திரத்துக்கு வெகுவாகவே ஒத்துழைக்கின்றன.
“எனக்கு ஒரு மகன் இருந்திருந்தால் என்னை அடித்தவர்களை தட்டிக் கேட்பான் இல்லையா…?” என்று மது அருந்திக் கொண்டிருக்கும்போது மற்ற காவலர்களிடம் லால் கேட்பது நெகிழ வைக்கும் காட்சி.
திருச்சியில் இருந்து துப்பாக்கி வாங்குவதற்காக சென்னைக்கு வரும் முனீஸ்காந்த் அண்ட் கோ நகைச்சுவை ரசிக்க வைக்கிறது.
மையேந்திரனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம் என்று சொல்ல வேண்டும்.
விக்னேஷ் படிஷாவின் பின்னணி இசை படத்துக்கு உயிரோட்டமாக அமைந்திருக்கிறது.
துப்பாக்கியை களவாடியது யார் என்று தெரிந்த பிறகும் அதில் மேகசினை லோட் செய்தது யார் என்றெல்லாம் நீடித்துக் கொண்டே போவது சற்றே அலுப்பை தருகிறது.
அயோக்கியத்தனம் செய்ய அஞ்சாத அரசியல்வாதிகளும், ஊழலுக்கு ஒத்துழைக்கும் காவல்துறையினரும் கை கோர்த்து இருப்பதை வித்தியாசமான முறையில் படமாக்க முயன்றிருக்கும் படக்குழுவுக்கு பாராட்டுதல்கள்.
விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லரான சரண்டர் படத்தை அனைவரும் கண்டு ரசிக்கலாம்.
மதிப்பெண்3.5/5






