![]()
பிபி 180_ விமர்சனம்
மீனவ சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதுடன், மதிப்பிற்குரியவராகவும் வலம் வரும் பாக்கியராஜின் மகள் விபத்து ஒன்றில் சிக்கி இறந்து போகிறார்.
பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பிரேதத்தை போஸ்ட் மார்டம் செய்யாமல் தன்னிடம் கொடுத்து விடும்படி பாக்யராஜ் கேட்க, அதற்கு அரசு மருத்துவரான தன்யா ரவிச்சந்திரன் “கொலை தற்கொலை விபத்து ஆகியவற்றில் இறந்தவர்களை பிரேத பரிசோதனை செய்த பிறகுதான் கொடுக்க முடியும்” என்று சொல்லி மறுத்துவிடுகிறார்.
கொலை பாதக செயல்களுக்கு அஞ்சாத தாதா டேனியல் பாலாஜியின் உதவியை பாக்கியராஜ் நாட, அவரது மிரட்டலுக்கும் அடிபணியாத தன்யா பிரேத பரிசோதனை செய்து விடுகிறார்.
அந்தப் பிரேத பரிசோதனையில் இன்னும் ஒரு அதிர்ச்சிகரமான செய்தியும் பாக்கியராஜுக்கு தெரிய வருகிறது.
டேனியல் பாலாஜி தன்னை போனில் மிரட்டுவதை பதிவு செய்து அதை போலீசுக்கு புகாராகவும் கொடுத்து விடுகிறார் டாக்டர் தன்யா.
இதைத் தொடர்ந்து போலீஸ் கமிஷனர், டேனியல் பாலாஜியை அழைத்து கடுமையாக எச்சரிக்கை விடுத்து அசிங்கப்படுத்தி விடுகிறார்.
இதனால் கடும் கோபம் அடையும் டேனியல் பாலாஜி தன்யாவை கொல்ல துடிக்கிறார்.
தன்யா அவரிடமிருந்து தப்பித்தாரா?
இறுதியில் டேனியல் பாலாஜிக்கு ஏற்பட்ட முடிவு என்ன? என்பதுதான் பிபி 180 படத்தின் கதை.
இதுவரை வந்த பெரும்பாலான படங்களில் கதாநாயகியாக பொம்மை போல் வந்து போகும் வேடங்களையே செய்து வந்த தன்யா ரவிச்சந்திரனுக்கு திறமையை வெளிப்படுத்தும் அற்புதமான வாய்ப்பு இந்தப் படத்தில்தான் கிடைத்திருக்கிறது.
அதை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டு முத்திரை பதிக்கும் வகையில் நடித்து நம் நெஞ்சில் நிறைகிறார் தன்யா ரவிச்சந்திரன்.
காசிமேடு ரவுடியாக வரும் டேனியல் பாலாஜிக்கு கோபம் கொப்பளிக்கும் கண்களும், ஆணையிட்டு அடிபணிய வைக்கும் அட்டகாசமான குரலும் வெகுவாக ஒத்துழைத்து அந்த பாத்திரத்தை மெருகேற்றி இருக்கிறது.
டேனியல் பாலாஜியின் அக்கிரமங்களை கட்டுப்படுத்த முடியாமலும், அவரது ஆணைகளுக்கு அப்படியே இணங்க முடியாமலும் தினறும் அரசியல்வாதியாக வெகு சிறப்பாக நடித்திருக்கிறார் அருள் தாஸ்.
நோயாளிகளிடம் அன்பு காட்டும் மருத்துவராக அறிமுகமாகி, நீதி நேர்மையுடன் செயல்பட்டு நியாயமான காரியங்களை மட்டுமே செய்யும் ஒரு பெண், எப்படி ஒரு கொடூரமான தாதாவையே “வாடா… வந்து பாரு… பார்த்துக் கொள்ளலாம்…” என்று சவால் விடும் அளவுக்கு செல்வது மிக நேர்த்தியான திரைக்கதை மூலம் அழகாக திரையில் கட்டமைத்திருக்கிறார் இயக்குனர் ஜே பி.
ஜிப்ரான் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றன.
அரக்கனைப் போல் வலம் வந்த வில்லன் டேனியல் பாலாஜிக்கு இறுதியில் நாயகி தன்யா ரவிச்சந்திரன் கொடுக்கும் தண்டனை அற்புதம்.
அக்கிரமங்களை அஞ்சாமல் செய்யும் கொடூரனாக இருந்தாலும், அவன் முடிவில் இறக்க வேண்டும் என்று சொல்லாமல், திருந்த வேண்டும்_திருத்தப்பட வேண்டும் என்று சொல்லும் இந்த படத்தின் மையக்கரு அற்புதம்.
இதற்காகவே இயக்குனருக்கு ஒரு பாராட்டு விழாவை நடத்தலாம்.
வித்தியாசமான கதைக்களத்தில் விறுவிறுப்பான முறையில் உருவாக்கப்பட்ட பிபி 180 திரைப்படம் அனைவரையும் கவரும் என்பதில் ஐயமில்லை.
மதிப்பெண்4/5


