![]()
கஜா புயலால் பாதிக்கப்பட்ட கார்காவயல் கிராமத்தை நடிகர் விஷால் தத்தெடுத்திருப்பதாக மூன்று நாட்களுக்கு முன் ஒரு செய்தி ஊடகங்களில் பரப்பப்பட்டது. மகாபலிபுரம் அருகில் வசிக்கும் யாராவது ஒருவர் இந்த செய்தியை, சிற்பக் கலைஞர் ஒருவரை வைத்து அங்குள்ள பாறையில் செதுக்கி வைத்துக் கொண்டால் பிற்காலத்தில் விஷால் தத்தெடுத்த கிராமம் எந்த அளவுக்கு முன்னேறியிருக்கறது என்று பார்ப்பதற்கு வசதியாக இருக்கும்.
விஷால் இதுபோல் ஏற்கெனவே பல அறிவிப்புகளை வெளியிட்டு அது செயல் வடிவம் பெறாததே நாம் இப்படி எழுதுவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.
திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என்ற முறையில் பல திரைவிழாக்களில் பேசும்போது போகிறபோக்கில் பல வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டுப் போவது விஷாலின் வழக்கம்.
ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சத்தில் இருந்த சமயம், ஒரு திரைப்பட விழாவில் பேசும்போது இனி திரையரங்குகளில் விற்கப்படும் ஒவ்வொரு டிக்கட்டிலிருந்தும் ஒரு ரூபாய் வீதம் சேகரித்து விவசாயிகள் நலனுக்கு கொடுக்கப்படும் என்று பேசி பலத்த கைத்தட்டல்களை அள்ளினார்.
தயாரிப்பாளர் படத்தைத் தயாரிக்கிறார். விநியோகஸ்தர் மூலமோ அல்லது நேரடியாக தயாரிப்பளர் எக்ஸிபிட்டரிடம் ஒப்பந்தம் செய்து வெளியிடுவன் மூலமோ படம் பார்வையாளர்களைச் சென்றடைகிறது.
கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்க விஷால், இது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் இதர அமைப்புக்களுடனும் பேசி முன்னதாக முடிவு செய்திருக்க வேண்டாமா விஷால்? எடுத்துக்கொடுக்க திட்டமிட்டது யாருக்குப்போகவிருக்கும் ஒரு ரூபாய்? தயாரிப்ளாருக்கு போகவிருந்த ஒரு ரூபாயா? அல்லது விநியோகஸ்தரின் ஷேரிலிருந்தா? அல்லது திரையரங்க உரிமையாளரின் கள்ளாப் பெட்டியிலிருந்தா?
தனது முடிவுக்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்கள், விநியோகஸ்தர்கள் சங்க உறுப்பினர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அங்கம் வகிக்கும் இதர தயாரிப்பாளர்கள் ஒத்துக்கொள்வார்களா என்று யோசிக்காமல் எவ்வளவு புெரிய பொறுப்பிலிருந்து கொண்டு எப்படி குழந்தைத்தனமாக பேசுகிறார் பாருங்கள்?
இதேபோல் மீத்தேன் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வந்தபோது நடந்த ஒரு விழாவில் பேசிய விஷால், “என் எதிரே பத்து பதினைந்து கேமராக்கள் படப்பதிவு செய்து கொண்டிருக்கின்றன. எனவே இங்கு பேசுவது நாடு முழுவதும் உள்ள மக்களை உடனே சென்றடையும். மீத்தேன் போராட்டத்தில் நானும் தீவீரமா இறங்க நாளை சென்னையிலிருந்து புறப்படுகிறேன்” என்று அறிவித்தார். ஆனால் அடுத்த நான்கைந்து நாட்களிலும் விஷால் சென்னையில் இருந்தபடி தன் வழக்கமான வேலைகளை கவனித்துக் கொண்டு திரைவிழாக்களில் பங்கு பெற்றபடியும்தான் இருந்தார்.
எனவே இப்போது மகாபலிபுரம் கல்வெட்டில் தேதி போட்டு செதுக்கி வைத்துக்கொண்டால் நான்கைந்து வருடங்களுக்குப் பிறகு சரி பார்க்க வசதியாக இருக்கும் என்பதால்தான் இந்த யோசனை.
மகாபலிபுரம் கல்வெட்டில் தன் வாக்குறுதி பதிக்கப்பட்டிருக்கிறது என்பதற்காகவாவது விஷால் ஏதாவது நல்லது செய்தால் மகிழ்ச்சிதான்.

