Tuesday, September 29

‘அஷ்டகர்மா’ – விமர்சனம்

Loading

‘அஷ்டகர்மா’ – விமர்சனம்

பேய் பிசாசு பில்லி சூன்யம் இதெல்லாம் உண்மையா பொய்யா….

ஒரு சிலர் மக்களின் மூட நம்பிக்கைகளைப் பயன்படுத்தி தாங்கள் பணம் சம்பாதிக்கச் செய்யும் தந்திரமா என்ற கேள்விகள் எல்லோருடைய மனதிலும் இருக்கும்.

நம்பிக்கை உள்ளவர்கள் என்றுமே இவற்றை நம்பியபடிதான் இருப்பார்கள். நம்பிக்கை இல்லாதவர்கள் என்றுமே நம்ப மாட்டார்கள்.

பேய் பிசாசு என்றெல்லாம் எதுவுமில்லை. பில்லி சூன்யம் என்பது ஏமாற்று வேலை என்று நினைக்கும் மனோதத்துவ டாக்டர் ஒருவருக்கே இது போன்ற அமானுஷ்ய அனுபவங்கள் ஏற்பட்டால் என்ன ஆகும் என்பதுதான் அஷ்டகர்மா படத்தின் ஒன்லைன்.

பகுத்தறிவுக்கு ஒவ்வாத விஷயங்கள் தனக்கே நடக்கும்போது அதை அந்த மருத்துவர் எப்படி எதிர்கொள்வார் என்பது சுவையான சம்பவங்கள் மூலம் அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

கதாநாயகியை எப்போதும் ஏதோவொரு பிரச்சனை துரத்திக்கொண்டே இருக்கிறது. அலசி ஆராய்ந்தால், அவரது குடும்பத்தில் ஒருவர் வைத்த செய்வினைதான் காரணம் என்பதும், செய்வினை வைத்தது ஏன் என்பதும் தெரியவந்து அதிர்ச்சியூட்டுகிறது.

தன்னைச் சுற்றும் செய்வினையிலிருந்து மீண்டுவர அவர் என்ன செய்தார் என்பதே கதை… கதாசிரியர் ஒருவர் காகிதத்தில் எழுதும் கதை அப்படியே நிஜமாக நடப்பதும், அமானுஷ்யமான அந்த வீட்டில் ஏதோ ஒரு சக்தி இருந்துகொண்டு எல்லோரையும் பயமுறுத்துவது என காட்சிகளை நன்றாக பயன்படுத்திக்கொண்டு திகிலூட்டியிருக்கிறார் இயக்குநர் விஜய் தமிழ்செல்வன்.

மனோதத்துவ மருத்தவராக நடித்திருக்கும் சி.எஸ்.கிஷனுக்கு இதுதான் முதல் படம். புதுமுகம் முதல் படத்திலேயே பாஸ் மார்க் வாங்கியிருப்பது சிறப்பு. கிஷன் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார்.

ஷிரிதா சிவதாஸ், நந்தினி ராய் ஆகியோரும் தங்கள் பாத்திரங்களை உணரந்து நடித்திருக்கின்றனர். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு படத்துக்கு பலம் சேர்க்கிறது. குறிப்பாக திகில் காட்சிகளில் தன் முத்திரையைப் பதிக்கிறார் ஒளிப்பதிவாளர்.

டி.ஆர். எழுதி பாடிய பாடல் ஒன்றும் படத்தில் இருக்கிறது என்றாலும் காதையும் கவரவில்லை. கருத்தையும் கவரவில்லை. டி.ஆரிடம் இன்னும் சிறப்பான பாடலை வாங்க இயக்குநர் ஏனோ தவறிவிட்டார்.

வேதத்திலேயே பேய் பிசாசு பில்லி சூன்யம் பற்றி குறிப்பட்டிருப்பதாக படத்தில் சொல்லியிருப்பது எந்த அளவு உண்மை எனத் தெரியவில்லை. திகல் பட ரசிகர்களைக் கவரும் இந்த அஷ்டகர்மா.

மதிப்பெண் 3/ 5