219 total views, 1 views today
சரியான திட்டமிடலும், மிகச்சிறப்பான செயல்பாடும் ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது. பாலக்காடு, பொள்ளாச்சி, தாய்லாந்து என பல இடங்களுக்கு பயணித்து படப்பிடிப்பு செய்தது ஒட்டுமொத்த குழுவுக்கும் மிகப்பெரிய சவாலான செயல்முறையாக இருந்தது. மொத்த படக்குழுவும் இப்போது படப்பிடிப்பை முடித்த திருப்தியில் இருக்கிறார்கள்.
“ஆம் உண்மையிலேயே பல்வேறு இடங்களில், குறிப்பாக அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பை நடத்தியது மிகப்பெரிய சவாலாக இருந்தது. சில விஷயங்களை காகிதங்களில் கதையில் எழுதும்போது நன்றாக இருக்கும், ஆனால் படப்பிடிப்பில் எதிர்பாராத அனுபவங்களை சந்தித்தது, தாண்ட முடியாத பெரிய தடையாக இருந்தது. குறிப்பாக, யானையுடன் நடித்த நாயகன் ஆரவ்விற்கு இது கடினமாக இருந்தது. அவர் படப்பிடிப்புக்கு முன்பே யானையுடன் நட்பாக இருந்த போதிலும், முற்றிலும் எதிர்பாராத விஷயங்கள் இருந்தது. காடுகளில் வழுக்கும் பாறைகள் மற்றும் தரைகள் இன்னொரு தடங்கலாக இருந்தது. இருப்பினும், படப்பிடிப்பை சிறப்பாக முடித்து விட்டு வந்திருப்பதால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்” என்றார் இயக்குனர் நரேஷ் சம்பத்.
தயாரிப்பாளர் எஸ்.மோகன் கூறும்போது, “படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகளை உடனடியாக ஆரம்பித்து, செய்து கொண்டு இருக்கிறோம். கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.
எஸ்.மோகன் தயாரித்திருக்கும் இந்த ராஜபீமா திரைப்படம் வணிக அம்சங்கள் கலந்த, மனித, விலங்கு முரணை பேசும் ஒரு படமாக உருவாகியிருக்கிறது. ஆஷிமா நர்வால் நாயகியாக நடித்திருக்கிறார். ஓவியா ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதோடு, ஆரவ் உடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியிருக்கிறார்.