திரை வாழ்க்கையில் ஜொலித்த ஆர்யா சாயிஷா ஜோடி திருமணம் செய்து நிஜ வாழ்க்கையில் இணைந்த பின் மீண்டும் திரையில் ஜோடியாக தோன்ற இருக்கிறார்கள். ஸ்டுடியோ கிரீன் சார்பில் K.E ஞானவேல்ராஜா தயாரிக்கும் ‘டெடி’ படத்தில் ஹீரோ ஆர்யா. ஹீரோயின் சாயிஷா.
ஆர்யாவின் அர்ப்பணிப்பு மிகுந்த நடிப்பிற்கு பெருந்தீனி கொடுக்கும் வகையில் புதியவகை ஆக்சன் திரில்லர் கதையோடு தயாராகி இருக்கிறார் இயக்குநர் சக்தி சவுந்தரராஜன். இவர் ஏற்கெனவே நாணயம், மிருதன், நாய்கள் ஜாக்கிரதை, டிக் டிக் டிக் ஆகிய படங்கள் மூலமாக ரசிகர்களை தன் வசம் ஈர்த்து வைத்திருக்கும் இயக்குநர். இந்த ‘டெடி’ படமும் அவரது டெடி கேஷனில் அசுரப்பாய்ச்சல் பாய இருக்கிறது
இயக்குநரின் ஆளுமைக்கு ஏற்ற தொழில்நுட்ப அணி இருந்தால் தான் அந்தக் கூட்டணி பெரிய வெற்றியடையும். அந்த வகையில் மிகச்சிறப்பான கூட்டணி இது. கேமரா மேனாக ராஜா ரங்கூஸ்கி, பர்மா, ஜாக்சன் துரை ஆகிய படங்களில் கெத்து காட்டிய யுவா. இசை அமைப்பாளராக டி. இமான். இதயங்களை அசைக்கும் ஓசையை கை வசம் வைத்திருக்கும் இசைஞர் அவர். திமிரு பிடித்தவன், காளி படங்களில் சிறப்பான சண்டைக்காட்சிகளை அமைத்த சக்தி சரவணன் ஸ்டண்ட் மாஸ்டராக களம் இறங்க, ஷார்ப்பான எடிட்டிங்கால் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை செறிவாக்கிய எடிட்டர் சிவநந்தீஸ்வரன் எடிட்டராக பணியாற்ற இருக்கிறார். இன்று சென்னையில் பூஜையுடன் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து பல்வேறு நாடுகளில் நடைபெற இருக்கிறது. சொல்லி அடிக்கும் வேட்கையோடு களம் காணும் இந்த டெடி டீம் நிச்சயம் வெற்றி வெடியை அள்ளிக் குவிக்கும் என்கிறார்கள். ஆர்யா சாயிஷா திருமணத்திற்குப் பின் ஒன்றாக நடிக்க வந்திருப்பதால் படத்தின் பலம் கூடியுள்ளது. படத்தில் கூடுதல் எனர்ஜியாக ஆர்யா சாயிஷாவோடு சதிஷ், கருணாகரன் இருக்கிறார்கள்.