![]()
கர _ விமர்சனம்
விவசாயிகள் நிலத்தின் மீது பெற்ற கடன் வட்டி, அபராத வட்டி, இத்யாதி என்று வளர்ந்து அவர்களை மூழ்கடிக்கும் நிலையை ஆழமாக விவரிக்கும் படம் ‘கர என்று சுருக்கமாக ஒரே வரியில் படத்தை விமர்சித்து அதற்கு மகுடம் சூட்டலாம்.
இயக்குநர் விக்னேஷ் ராஜா – தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘கர’, வெறும் திருடன்-போலீஸ் ஆட்டம் மட்டுமல்ல, அதையும் தாண்டிய ஒரு அழுத்தமான அரசியல் பேசும் படம்.
தன்னிடமுள்ள ‘திருடன்’ என்ற கரையைத் துடைக்கப் போராடும் கரசாமி, தன் ஊரையும் குடும்பத்தையும் சூழ்ந்துள்ள கடன் எனும் கரையைத் துடைக்க மீண்டும் திருட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறான். வளைகுடா நாட்டுப் போர் எப்படி இங்கே ஒரு சாதாரண விவசாயியின் டிராக்டர் கடனைப் பாதிக்கிறது என்ற உலகளாவிய அரசியலை, உள்ளூர் த்ரில்லர் பாணியில் கோர்த்த விதம் இயக்குநரின் புத்திசாலித்தனம்.
படத்தின் அச்சாணியே தனுஷ்தான். வசனங்களை விட மௌனத்தாலும், இயலாமையைத் ததும்பும் கண்களாலுமே கதையைத் தாங்கிப் பிடிக்கிறார். குறிப்பாக அந்த வங்கி கொள்ளை காட்சியில், தனுஷின் பதற்றமும் நுணுக்கமான திட்டமிடலும் தியேட்டரில் அனல் பறக்கும் அனுபவம். அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ உணர்ச்சிகரமான இடங்களில் ஈடுகொடுத்து நடித்திருந்தாலும், தந்தை கந்தசாமியாக வரும் கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பில் விஸ்வரூபம் எடுக்கிறார். நிலத்தை இழந்த கதையை அவர் சொல்லும் இடத்தில் தியேட்டரே நிசப்தமாகிறது. வஞ்சகமான வில்லத்தனத்தில் ஜெயராமும், துரத்தும் போலீஸாக சுராஜும் கச்சிதம். கருணாஸ், பிரித்வி பாண்டியராஜன் கூட்டணி ஆங்காங்கே கலகலப்பூட்டுகிறது.
தொழில்நுட்ப ரீதியாகப் படம் மிக நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளது. தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு 90-களின் கிராமத்துச் சூழலையும், இரவில் நடக்கும் கொள்ளைச் சம்பவங்களின் மர்மத்தையும் மிக இயல்பாகப் படம்பிடித்துள்ளது. ஜி.வி.பிரகாஷின் இசையில் ‘கண்ணம்மா ஏ கண்ணம்மா’ பாடல் ஒரு இதமான தென்றல் என்றால், பின்னணி இசை த்ரில்லர் காட்சிகளுக்கு ராக்கெட் வேகம் கொடுக்கிறது. ஸ்ரீஜித் சாரங்கின் எடிட்டிங் இரண்டாம் பாதியின் துரத்தல் காட்சிகளைச் செதுக்கி விறுவிறுப்பைக் கூட்டியுள்ளது.
ஆடுகளம் நரேன் தோன்றும் இடைவேளைக் காட்சியில் தனுஷ் மற்றும் கருணாஸிடம் ஏற்படும் பதற்றம் பார்வையாளர்களுக்கும் கடத்தப்பட்ட விதம் அற்புதம்.
இடைவேளைக் காட்சியில் உள்ள அந்த ட்விஸ்ட் நம்மை அப்படியே நிமிரச் செய்கிறது. இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் பலமான திரைக்கதை படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.
மொத்தத்தில், ‘கர’ தனுஷின் நடிப்பில் மிளிரும் ஒரு தரமான எமோஷனல் த்ரில்லர். திருடனின் வாழ்விலுள்ள கறையைத் துடைக்கும் இந்த முயற்சி, ரசிகர்களின் மனதைக் கறைபடாமல் கவர்ந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.
மதிப்பெண் 4.25/5


