Friday, October 31

ஆர்யன்_ விமர்சனம்

Loading

ஆர்யன்_ விமர்சனம்

தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியில் நடிகர் ஒருவரை தொகுப்பாளர் ஷ்ரத்தா ஸ்ரீநாத் பேட்டி எடுக்கிறார்.

அப்போது பார்வையாளர் பகுதியிலிருந்து திடீரென செல்வராகவன் கையில் துப்பாக்கி யுடன் வெளியே வந்து எல்லோரையும் பிணையக் கைதிகளாக்கி மிரட்ட ஆரம்பிக்கிறார்.

அடுத்த ஐந்து நாட்கள் ஐந்து பேரை கொலை செய்ய இருப்பதாகவும்,  முடிந்தால் தடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு, தன் கைத்துப்பாக்கியால் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார்.

இப்படி  ஓர் அசத்தலான காட்சியுடன் துவங்குகிறது ஆர்யன் திரைப்படம்.

செல்வராகவன் கூறியபடி பொதுத் தொலைபேசி பூத்தில் போன் பேசிக் கொண்டிருக்கும்போதே ராணுவ வீரர் மரணமான முறையில் கொல்லப்படுகிறார்.

காவல்துறை தன் பணியை தீவிரப்படுத்துகிறது.
இளம் போலீஸ் அதிகாரியான விஷ்ணு விஷால் களம் இறக்கப்படுகிறார்.

காவல்துறையின் புலனாய்வு தீவிரமாக நடக்கும்போது அடுத்தடுத்து கொலைகளும் நடக்கின்றன.

கொலை செய்யப்படுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு தான் கொலையாகப்போகும் நபரின் பெயர் தெரிய வருகிறது.

கொலைகாரன் காவல் துறையுடன் நடத்தும் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் பரபரப்பாக சென்று கொண்டிருக்கையில் அந்த ஆட்டத்தை விஷ்ணு விஷால் எப்படி முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்கிறார் என்பதுதான் ஆரியன் படத்தின் கதை.

துவக்கத்திலிருந்து இறுதிவரை விறுவிறுப்பாக செல்லும் சஸ்பென்ஸ் திரில்லராக மலர்ந்திருக்கிறது ஆரியன்
திரைப்படம்.

காக்கிச்சட்டை சீருடை கனகச்சிதமாக பொருந்தும் விஷாலுக்கு, அவரது உடல் மொழியும் மிடுக்காக அமைந்திருப்பது பாத்திரத்திற்கு பலம் சேர்க்கிறது.

மானசாவுடனான காதல், திருமணம், மணமுறிவு என்று சென்டிமென்ட் காட்சிகளிலும் ஸ்கோர் செய்து முத்திரை பதித்திருக்கிறார் விஷ்ணு விஷால்.

தொலைக்காட்சி தொகுப்பாளர் வேடத்திற்கு தன் நடிப்பில் நியாயம் செய்திருக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவு படத்தின் பரபரப்புக்கு பெரிதும் துணை நிற்கிறது.

ஜிப்ரானின் பின்னணி இசை படத்துக்கு உயிரோட்டமாக அமைந்து அடுத்த கட்டத்துக்கு படத்தை உயர்த்துகிறது.

கொலை செய்வதற்காக செல்வராகவன் தேர்ந்தெடுத்த ஐந்து நபர்களும், அவர்களைக் கொல்ல அவர் சொல்லும் காரணங்களும் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை என்பதுதான் படத்தின் குறை.

இறந்து போன ஒருவர் ஐந்து பேரை கொலை செய்யப் போகிறார் என்பதே ஆர்வத்தை தூண்டக்கூடிய ஒரு புதுமையான அம்சம்.

கொலை செய்யப்பட இருக்கும் நபரின் பெயரை ஒரு மணி நேரத்திற்கு முன்பு சொல்லி பரபரப்பு ஏற்படுத்தி காவல்துறை அதை எப்படி தடுக்க முயல்கிறது என்பதை விறுவிறுப்பாக சிறையில் சொல்லிய அறிமுக இயக்குனர் பிரவீன் கே பாராட்டுக்குரியவர்.

எத்தனையோ கிரைம் கதைகளை பார்த்து இருந்தாலும் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் வித்தியாசமாக அமைந்த ஆரியன் அனைவரது மனத்திலும் தனி இடம் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.

மதிப்பெண் 4/5