Thursday, April 16

கேம் ஆப் லோன்ஸ் _ விமர்சனம்

Loading

கேம் ஆப் லோன்ஸ் _ விமர்சனம்

எண்ணற்ற வசதிகளை நமக்குத் தரும் நவீன விஞ்ஞானத்தில், பல அளெகரியங்களும் சில ஆபத்துகளும் இருப்பதை மறுப்பதற்கில்லை.
உலகையே நம் கைக்குள் கொண்டு வரும் கைபேசியில் சூதாட்டம்கூட வந்துவிட்டது. அதேபோல் விரல் அசைவில் கடன் வழங்கப்படுகிறது.
கடன் வாங்குபவரின் திருப்பி செலுத்தும் திறன்பற்றி எல்லாம் சிறிதுகூட ஆய்வு செய்யாமல் உடனடியாக கடன் வழங்கும் செல்பேசி செயலிகள் வரமா?  அல்லது சாபமா?
ஆன்லைன் சூதாட்டம்மூலம் ஒருவன் எப்படி பணத்தை இழந்து, கடன்களைப் பெற்று அதை அடைக்க முடியாமல் சிக்கி சீரழிவதை அழகாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்யும் அருமையான படமாக வந்திருக்கிறது ‘கேம் ஆப் லோன்ஸ்’. வேலையை இழந்து வருமானமின்றி வீட்டில் இருக்கும் விஷ்வா, வேலைக்குச் செல்லும் தன் மனைவிக்கு உதவியாக வீட்டு வேலைகளை செய்கிறான்.
சூதாடும் பழக்கமுள்ள விஷ்வா ஆன்லைன் செயலி மூலம் பணம் கடன் வாங்குகிறான்.
இந்தப் பணத்திற்கு வட்டி, வட்டி போட்ட குட்டி என்று ஏராளமாக சேர்ந்து அவன் கழுத்தை நெரிக்க தொடங்குகிறது.
இந்த கடன் தொகையை வசூலிக்க இரண்டு பேர் அவன் வீட்டுக்கு வருகிறார்கள்.
  அந்த இருவரும் என்ன பேசி விஷ்வாவை மூளை சலவை செய்கிறார்கள்?
விஷ்வாவை எதற்குத் தூண்டுகிறார்கள் என்பதுதான் ‘கேம் ஆப் லோன்’ படத்தின் கதை.  படம் முழுக்க ஒரே ஒரு வீடு மூன்று கதாபாத்திரங்கள் மட்டுமே இருந்தாலும் சற்றும் அலுப்பு தட்டாத வகையில் காட்சிகளை படமாக்கியதற்காக ஒளிப்பதிவாளர் சபரிக்கு ஒரு மலர்ச்செண்டு.

குறைந்த செலவில் இப்படி ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படத்தை உருவாக்கியதற்காக இயக்குனர் அபிஷேக் லெஸ்லியை தாராளமாகவே பாராட்டலாம்.

ஆனாலும் இரண்டு முக்கியமான கேள்விகளுக்கு இயக்குனர் என்ன பதில் சொல்வார்?

 முதல் கேள்வி: ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் இன்சூரன்ஸ் பணத்தை எந்த நிறுவனமும் கொடுக்காது. கடன் கொடுத்தவர் எப்படி இன்ஷூரன்ஸ் பணத்தை பெற முடியும்?

அடுத்த கேள்வி: இறந்து போனவரின் நெருங்கிய உறவினர்களுக்குதானே அந்த பணத்தை நிறுவனம் கொடுக்கும்?

யாரோ மூன்றாவது மனிதருக்கு பணம் செல்லும் என்பது கதையின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காண செய்யும் ஒரு ஓட்டை.

இந்த கேள்விகளுக்கு இயக்குனர் என்ன பதில் சொல்வார்?

ஆயினும் சூதாட்டம் குறித்தும் கைபேசி செயலி மூலம் கடன் வாங்குவது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் படம் எடுத்ததற்காக இந்தப் படக்குழுவை தாராளமாக பாராட்டலாம்.

வித்தியாசமான படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்கள் தவறவிடாமல் பார்க்க வேண்டிய படம் ‘கேம் ஆப் லோன்ஸ்’.

மதிப்பெண் 4/5