Sunday, January 19

பேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்!

Loading

நடிகராக ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து அடுத்தடுத்து படங்கள் கொடுத்து வந்தாலும், அப்படங்களின் மாறுபட்ட கதைக் களங்களில், வேறுபட்ட நடிப்பு மூலம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறார். சமீபத்தில் வெளியாகி வெற்றி நடைபோடும் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் தன் இயல்பான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ஜி.வி.பிரகாஷ், அடுத்து நடிக்கவிருக்கும் பேச்சிலர் படத்தின் மூலம் நடிப்பின் புதிய பரிமாணத்தைத் தொடத் தயாராகியிருக்கிறார்.
விமர்சன ரீதியிலும் வணிக ரீதியிலும் பெரும் வரவேற்பைப் பெற்ற ராட்சசன் படத்தைத் தயாரித்த ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மூலம் ஜி.டில்லி பாபு இப்படத்தைத் தயாரிக்கிறார்.
இயக்குநர் சசியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சதீஷ் செல்வகுமார் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
பேச்சிலர் படம் குறித்து இயக்குநர் சதீஷ் செல்வகுமார் பேசும்போது கூறியதாவது….
கிராமிய மணம் கமழும் காதல் கதையாக உருவாகும் இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். இதற்கு முன் நடித்த எந்த படத்திலும் அவருக்கு இப்படி ஒரு வேடம் அமைந்ததில்லை. இன்னும் சொல்லப் போனால் ஜி.விக்கு பேச்சிலர் திரைப்படம் ஒரு புதிய இமேஜைக் கொடுக்கும் என்று சொல்லலாம்.

கோயமுத்தூரிலிருந்து பெங்களூரு வரும் இளைஞன் ஒருவன், தன் நண்பர்களின் வாழ்க்கை முறைகளால் பெரிதும் கவரப்படுகிறான். இந்த பாதிப்புகள் அவன் வாழ்க்கையை எவ்வாறு தடம் மாற்றுகின்றன என்பதை சுவைபட விவரிக்கும் படம் இது என்றார் சதீஷ் செல்வகுமார்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் பெங்களூரிலும், சில பகுதிகள் சென்னை மற்றும் பொள்ளாச்சியிலும் படமாக்கப்படவிருக்கின்றன. பிரபல மாடல் அழகி திவ்யா பாரதி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் பகவதி பெருமாள், யு டியூப் நக்கலைட்ஸ் புகழ் அருண் குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, இசையமைக்கும் பொறுப்பையும் ஜி.வி.பிரகாஷ் குமாரே ஏற்றிருக்கிறார். சான் லோகேஷ் படத்தொகுப்பை கவனக்க, ஒளிப்பதிவு இயக்குநராகப் பொறுப்பேற்றிருக்கிறார் தேனி ஈஸ்வர்.