Monday, April 20

பாம் _ விமர்சனம்

Loading

பாம் _ விமர்சனம்

நடிப்பு: அர்ஜூன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர், காளி வெங்கட், நாசர், அபிராமி, பால சரவணன், சிங்கம் புலி

தயாரிப்பு: சுதா சுகுமார்

இசை: டி இமான்

ஒளிப்பதிவு: பிஎம்.ராஜ்குமார்

கதை திரைக்கதை: மணிகண்டன் மாதவன், அபிஷேக் சபரிகிரீசன், விஷால் வெங்கட்

வசனம்: மகிழ்நன் பிஎம்

இயக்கம்: விஷால் வெங்கட்

பி ஆர் ஓ: சதீஷ் (AIM), சிவா

காளக்கண்மாய்பட்டி என்ற கிராமத்தில் வசிக்கும் இரண்டு பிரிவினர் மேல் ஜாதி கீழ் ஜாதி என மோதிக் கொண்டு, காளப்பட்டி மற்றும் கம்மாபட்டி என்று இரண்டு கிராமங்களாக பிரிந்து வசிக்கின்றனர்.

இந்த இரண்டு சமூகத்தினரிடையே எப்போது மோதல் வரும் என்று சொல்ல முடியாது. சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் இருதரப்பும் சண்டையிட்டுக் கொள்வது வழக்கம்.

உயர் போலீஸ் அதிகாரி,கலெக்டர் என்று பலர் வந்தும் இவர்கள் பிரச்சனையை தீர்க்க முடிவதில்லை.

இந்த இரண்டு கிராமத்து சமூகத்தினரையும் ஒன்றிணைக்க முடிவதில்லை.

இந்த சூழலில் நண்பர்களான அர்ஜுன் தாஸும் காளி வெங்கட்டும் இரு கிராம மக்களிடையே ஒற்றுமை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

திடீரென காளி வெங்கட் உயிரிழக்க அவரது உடலை அர்ஜுன் தாஸைத் தவிர வேறு யாராலும் தூக்க முடிவதில்லை.

இறந்த காளி வெங்கட்டின் உடலில் சாமி இறங்கி இருக்கிறது என்று கோவில் பூசாரி கூறி  குறி சொல்கிறார்.

இரண்டு ஊர் மக்களும் அந்த சாமி தங்கள் சாமி தான் என்று சண்டைக்கு ஆயத்தமாகின்றனர்.

இந்த சூழலில் அர்ஜுன் தாஸ் என்ன செய்கிறார்? இரண்டு ஊர் மக்களுக்கும் இடையே உள்ள பிரச்சனை தீர்ந்ததா என்பதுதான் பாம் திரைப்படம்.

ஆர்ப்பாட்டம் இல்லாத யதார்த்தமான நடிப்பில் அசத்துகிறார் அர்ஜுன் தாஸ். சாமியாடியபடி  கழுத்து நரம்புகள் புடைக்க பேஸ் வாய்ஸில் பேசும்போது, அமானுஷ்யத்தையும் ஆன்மீகத்தையும் நம்புபவர்களுக்கு மெய்சிலிப்பை ஏற்படுத்தும்.

‘உயிரைக் கொடுத்து’   நடித்து படுத்தபடியே நடிப்பில் ஜெயித்து விட்டார் காளி வெங்கட்.

அழகு தேவதையாக வரும் சிவாத்மிகா ராஜசேகர், பாத்திரத்தை உணர்ந்து முதிர்ச்சியான நடிப்பையும் வழங்கி இருக்கிறார்.

கலெக்டராக வரும் அபிராமி, அரசியல்வாதியாக வரும் நாசர், ஊர் தலைவராக வரும் சிங்கம் புலி, யூட்யூபராக வரும் பால சரவணன் என்று படத்தில் வரும் அனைவரும் கவனம் ஈர்க்கும்படியான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

கதைக்கும் காட்சிக்கும் ஏற்ற வகையில் கச்சிதமாக ஒளிப்பதிவு  செய்திருப்பவர் பி எம் ராஜ்குமார்.

டி இமான் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது.

மேல் ஜாதி கீழ் ஜாதி மோதலில் ஏற்படும் பிரச்சனைகளை வேறு கதைக் களத்திலும் காட்சி அமைப்புகளிலும் ரசிக்கத் தக்க வகையில் சொல்லி இருக்கிறார் இயக்குனர்விஷால் வெங்கட்.

வித்தியாசமான முறையில் ஜாதி பிரச்சனையை கையாண்ட பாம் திரைப்படம் அனைவரையும் கவரும் என்பதில் ஐயமில்லை.