விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில், சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் ‘ராவண கோட்டம்’

0

 435 total views,  1 views today

நேட்டிவிட்டி பின்னணியில் உருவாகும் திரைப்படங்கள் எப்போதும் யதார்த்த சினிமாவின் ஆதாரமாக அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு பிராந்தியத்திலும் தனித்துவமான கலாச்சாரம், ரசனை மற்றும் பாரம்பரிய காரணிகள் உள்ளன. இந்த அம்சங்களை கொண்டு உருவாகும் சில திரைப்படங்களை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்க்கிறார்கள். அத்தகைய படங்களை உருவாக்க சில இயக்குனர்கள் எப்போதுமே முயல்கிறார்கள். அந்த வகையில் தற்போது ‘மதயானைக் கூட்டம்’ புகழ் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் ‘ராவண கோட்டம்’ என்ற படத்தை இயக்குகிறார்.

மிகவும் புகழ் பெற்ற தொழிலதிபர் திரு.கண்ணன் ரவி, கண்ணன் ரவி குரூப் சார்பில் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக தனது பயணத்தைத் துவங்குகிறார்.

தனது முதல் தயாரிப்பு குறித்து கண்ணன் ரவி கூறும்போது, “வெளிநாட்டிலேயே அதிக காலத்தை செலவழித்த எனக்கு, இந்திய மண்ணின், குறிப்பாக தமிழ்நாட்டின் உள்ளார்ந்த மண் சார்ந்த மதிப்புகளை வலியுறுத்துகின்ற திரைப்படங்கள் மீது அதிக விருப்பம் உண்டு. நான் திரைப்படங்களை தயாரிக்க முடிவு செய்த போது, ​​அத்தகைய ஒரு திரைப்படத்தை தயாரிக்க ஆவலோடு இருந்தேன். அது என் சொந்த ஆர்வத்தின் காரணமாக மட்டும் அல்லாமல், தமிழ்நாட்டின் மண் சார்ந்த விஷயங்களை வெளிப்படுத்தும் ஒரு முயற்சி. இந்த சூழ்நிலையில் தான் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் அவர்களை நான் சந்தித்தேன். அவர் ஒரு கதையை சொன்னார். உண்மையில் நான் தேடிக்கொண்டிருந்த விஷயங்களுக்கு பொருத்தமான ஒரு கதையாக அது இருந்தது” என்றார்.

சாந்தனு பாக்யராஜ் நாயகனாக நடிப்பதை பற்றி அவர் கூறும்போது, “நாயகனை தேர்ந்தெடுக்கும்போது ​​தனிப்பட்ட இமேஜ் உடைய ஒரு நட்சத்திர நடிகரை நடிக்க வைக்க விரும்பவில்லை, மாறாக மண்ணின் மைந்தனாக, கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக எல்லோராலும் எளிதாக ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒருவராக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அதில் சாந்தனு நடிப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி” என்றார்.

இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இது குறித்து கூறும்போது, “மதயானைக் கூட்டம் வெளியான போது படத்துக்கு கிடைத்த வரவேற்பும், எனக்கு கிடைத்த பெயரும் மிகவும் மகிழ்ச்சி அளித்தது. அதே நேரத்தில், நான் அடுத்த படத்திற்கு அவசரப்படவில்லை. எனக்கு கிடைத்த பெயரை தக்க வைத்துக் கொள்வதில் கவனமாக இருந்தேன். தென் தமிழ்நாட்டில் சில காலம் பயணித்து ஆய்வுகள் மேற்கொண்டேன்.

சாந்தனு பாக்யராஜ் அவரது அர்ப்பணிப்புக்காக அறியப்பட்டவர். தான் ஏற்றுக் கொள்ளும் கதாபாத்திரத்திற்கு தயாராக மிகவும் கடுமையாக உழைப்பவர். அவர் இந்த படத்துக்கு தயாராவதற்காக கடந்த சில மாதங்களாக, பாரம்பரிய வேட்டி, சட்டையுடனே இருக்கிறார். மேலும் ராமநாதபுரத்தின் பேச்சு வழக்கில் தான் உரையாடுகிறார். நகரத்து பையனாக இருந்து, கிராமத்து பையனாக தோற்றம் உட்பட அனைத்திலும் மாறிய அவரை பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. அவர் நடிப்பிலும் இதே போல சிறப்பாக செயல்படுவார் என்று நான் நம்புகிறேன். ராவண கோட்டம் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது.

நாயகனை போலவே, கிராமத்து பேச்சு வழக்கு, தோற்றம், உடல் மொழி ஆகியவற்றை சிறப்பாக செய்யும் ஒரு நாயகியை தேடி வருகிறோம். அப்பாவிதனம் மற்றும் குருட்டு தைரியம் கலவையாக கொண்ட ஒரு குணாதிசயம் தான் நாயகியினுடையது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். சிறப்பான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறோம். அவற்றை உரிய நேரத்தில் அறிவிப்போம்” என்றார் இயக்குனர் விக்ரம் சுகுமாரன்.

Share.

Comments are closed.