83 total views, 1 views today
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் பீதியடைந்திருக்கிறார்கள். ஒரு புறம் பொருளாதார மந்த நிலை, மறுபுறம் சுகாதாரத்துறையின் எச்சரிக்கை, அரசு நடைமுறைப்படுத்தியிருக்கும் பொது முடக்கம்.. என மக்கள் சொல்லொணா துயரத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். இந்நிலையில் இவர்களுக்கு உதவு செய்வதற்காக திரைப்பட இயக்குநர் பி ஆனந்த்தின் மனதில் ஒரு திட்டம் உதித்தது. இவர் ‘ஒரு மழை நான்கு சாரல்கள்,’ ‘மௌன மழை,’ ‘பாரதபுரம்,’ ‘நானும் பேய் தான்’,‘ துணிந்து செய் ’.என ஐந்திற்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர்.
இது தொடர்பாக அவர் நம்மிடம் பேசுகையில்,“ நான் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இயக்குநராக பணியாற்றி வருகிறேன். ஐந்து படங்களை இயக்கியிருக்கிறேன். கொரோனா காலகட்டத்தில் மக்கள் படும் துன்பங்களை நேரில் பார்த்து,ஏதேனும் ஒரு வகையில் பயனுள்ள விசயத்தை செய்யவேண்டும் என்று முடிவு செய்து, முகலிவாக்கத்தில் ‘பாபு ஸ்டோர் ’என்ற பெயரில் மளிகை கடை ஒன்றை அண்மையில் தொடங்கினேன்.
பல்பொருள் அங்காடியைத் திறந்து வணிகம் செய்து வந்த இந்த குறுகிய காலக்கட்டத்திற்குள் இந்த மளிகை கடையின் அவசியத்தை உணர்ந்த்தேன். அதாவது வெகுஜன மக்கள் மருத்துவர்களுக்கு அடுத்ததாக என்னைப் போன்ற வியாபாரிகளுடன் தான் அதிகளவில் தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொண்டேன். இவர்களுக்கு தரமான பொருட்களை குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்று நோக்கத்தில், இந்த மளிகைக் கடையைத் தொடங்கியதால், தரமான பொருட்களுக்கான குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறேன். மக்களும் ஓரளவிற்கு ஆதரவு வழங்கி வருகிறார்கள். ஆதரவு மேலும் பெருகவேண்டும் என்பதற்காக பொருட்களின் விலை பட்டியலையும் பொதுமக்களின் பார்வைக்காக வைத்திருக்கிறேன். ஆனால் இப்பகுதியில் சிலர் தரமற்ற பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதன் காரணமாக சில மறைமுக பிரச்சனைகளையும் எதிர்கொண்டு வருகிறேன். இதன்மூலம் சில வியாபாரிகள் கூடுதலாக பலன் அடைந்து வருகிறார்கள். அத்துடன் மூன்றாம் தர பொருட்களையும் விற்பனை செய்கிறார்கள். இதனை தடுக்க வேண்டும். மக்கள் இதுகுறித்த விழிப்புணர்வை பெறவேண்டும்.
திரைத் துறையைப் பொருத்தவரை தற்போது நான் ‘துணிந்து செய்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறேன். இதனிடையே ‘நானும் பேய்தான்’ என்ற பெயரில் இயக்கியிருக்கும் திரைப்படம் வெளியீட்டிற்காக காத்திருக்கிறது.” என்றார்.