இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே கணேஷ்!

0

 576 total views,  1 views today

தகுதியின் அடிப்படையில் எல்கேஜி படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றியால் மொத்த படக்குழுவும் மிகவும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். ரசிகர்களின் வாய்மொழி விளம்பரத்தால் நாளுக்கு நாள் தியேட்டர்களும், காட்சிகளும் அதிகரித்து வருகின்றன. ரசிகர்களிம் அபரிமிதமான வரவேற்பால் மொத்த குழுவும் மகிழ்ச்சியில் இருக்கும்போது, ஒரு ஆச்சரியமான விஷயம் அரங்கேறி இருக்கிறது. தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே கணேஷ் இயக்குனர் கே.ஆர்.பிரபுவுக்கு ஒரு கார் மற்றும் குழுவில் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் ரூபாயை பரிசளித்தார். இதை ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான ரவி வர்மன் தன் கைகளால் வழங்கினார். நிச்சயமாக, இந்த மகிழ்ச்சியான உணர்ச்சிமயமான கொண்டாட்ட நிகழ்வு தான் உண்மையான வெற்றி விழா. 
 
நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இது குறித்து கூறும்போது, “ஒருவரையொருவர் மனதார நம்பியது தான் எங்களை இந்த அன்பான கொண்டாட்டத்தில் ஒன்று சேர்த்திருக்கிறது. இந்த பரிசுகளை தாண்டி, டாக்டர் ஐசரி கணேஷ் சாரின் இந்த அன்பு தான் எங்களை அவருடன் ஆத்மார்த்தமாக இணைத்திருக்கிறது. இறுதியில் அவர் திரைப்படத் துறைக்குள் நுழைந்ததன் உண்மையான எண்ணம் வணிக ஆதாயத்திற்கானது அல்ல, மதிப்புமிக்க நல்ல சினிமாக்களை உருவாக்குவது தான் என்பதை இது உறுதி செய்திருக்கிறது.
 
இயக்குனர் கே.ஆர்.பிரபு கூறும்போது, “எனக்கு பேச வார்த்தைகளே இல்லை, எந்த ஒரு இயக்குனருக்கும் ரசிகர்களின் இதயங்களை வெல்வது தான் குறிக்கோளாக இருக்கும். இன்று படத்தை பார்க்க குடும்பம் குடும்பமாக மக்கள் தியேட்டருக்கு வருவதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆர்.ஜே.பாலாஜி மற்றும் அவருடைய நண்பர்களின் அற்புதமான கதை, வசனத்தை தியேட்டர்களில் படம் பார்க்கும் ஒவ்வொரும் தங்களுடன் தொடர்புபடுத்தி கொண்டிருக்கிறார்கள் என்பது ரசிகர்களின் கைதட்டல் மூலம் தெளிவாகிறது. எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய டாக்டர் ஐசரி கே.கணேஷ் சாருக்கு ரொம்பவே கடமைப்பட்டிருக்கிறேன். அவர் இந்த படத்தின் மீது நம்பிக்கை வைக்கவில்லையென்றால் இது சாத்தியம் இல்லை” என்றார்.
 
சக்தி ஃபிலிம் பேக்டரி பி.சக்திவேலன் கூறும்போது, “LKGன் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வசூல் தொடர்பான சரியான உண்மைகளை நான் ஏற்கனவே வெளியிட்டிருக்கிறேன். ஒரு விநியோகஸ்தராக, வியாபாரம் மற்றும் விமர்சனம் என இரண்டிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ரசிகர்களுக்கு மிகச்சிறந்த படங்களையே தர வேண்டும் என நினைக்கும் டாக்டர் ஐசரி கே கணேஷ் போன்ற ஒரு தயாரிப்பாளரை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும், அவரது எதிர்கால படங்களிலும் என்னுடன் இணைந்து பணியாற்றுவதாக அவர் உறுதியளித்தது மேலும் ஊக்கம் அளிக்கிறது. ஒரு தெளிவான கருத்தை சொல்லும்போது அதற்கான வரவேற்பு நிச்சயம் கிடைக்கும் என்பதை ஆர்.ஜே. பாலாஜி மற்றும் அவரது குழு நிரூபித்துள்ளது” என்றார்.
 
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரித்த இந்த அரசியல் நையாண்டி திரைப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ராம்குமார், ஜே.கே.ரித்தீஷ் மற்றும் பல நட்சத்திர நடிகர்கள் நடித்திருந்தனர்.

 

Share.

Comments are closed.