![]()
டியூட் _ விமர்சனம்
தனது மாமன் மகள் மமீதா பைஜூ மற்றும் நண்பர்களுடன் இணைந்து ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் பிரதீப் ரங்கநாதன்.
பள்ளியில் படிக்கும் போது ஒரு பெண்ணை காதலித்து தோல்வி அடைந்த பிரதீப், கல்லூரி காலத்திலும் ஒரு காதல் தோல்வியை சந்தித்திருக்கிறார்.
மமிதா தன் காதலை பிரதீப்பிடம் சொல்லும்போது “சிறு வயது முதலே ஒன்றாக வளர்ந்த உன் மீது எனக்கு காதல் வரவில்லை…” என்று சொல்லி நிராகரித்து விடுகிறார்.
இதனால் மனமுடைந்த மமீதா பிரதீப்பை விட்டு விலகி வேறு ஊருக்கு சென்று விடுகிறார்.
மமிதா பிரிந்து சென்ற பிறகுதான் அவர் மீது உள்ள காதல் பிரதீப் ரங்கநாதனுக்கு புரிய வருகிறது.
உடனே தன் மாமன் சரத்குமாரிடம் சென்று விஷயத்தை சொல்ல, இதற்காகவே காத்திருந்தது போல் தடபுடலாக அவர் திருமண ஏற்பாடுகளை செய்கிறார்.
ஆனால் திரும்பி வரும் நமீதா தன் காதலரையும் அழைத்து வந்து பிரதீப்புக்கு அதிர்ச்சி கொடுப்பதுடன், காதலனை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்.
இந்த காதல் முக்கோணத்திற்கு ஏற்பட்ட முடிவு என்ன? என்பதுதான் டியூட் படத்தின் கதை.
முதல் இரண்டு படங்களையும் வெற்றிப் படங்களாகக் கொடுத்த பிரததீப் மூன்றாவது படத்தையும் எல்லோரும் ரசிக்கும் வகையில் கொடுத்து ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்று இருக்கிறார்.
சின்ன சின்ன ஒன் லைனில் அசத்தி, திரையரங்கையே கலகலக்க வைக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இதுதான் அவரது பாணி என்றாகி விட்டது.
மமிதா பைஜூவும் வெறும் அழகு பொம்மையாக வந்து செல்லாமல், உணர்ச்சிகரமான காட்சிகளில் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி கவனம் ஈர்திருக்கிறார்.
மாமன் வேடத்தில் வரும் சரத்குமார் அமைச்சராக இருந்தாலும் ஜாதி வெறி பிடித்தவராகவும், ஜாதி பெருமைக்காக மகளாக இருந்தாலும் தங்கையாக இருந்தாலும் கொல்ல தயங்காதவராகவும் பலமான வேடத்தில் பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி முத்திரை பதிக்கிறார். நகைச்சுவை காட்சிகளிலும் சோபிக்க தவறவில்லை சரத்குமார்.
படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருப்பது சாய் அபயங்காரின் இசைதான்.
அதிரச் செய்யும் தன் இசையால் அரங்கத்தையே ஆட்டம் போட வைத்து விடுகிறார் சாய் அபயங்கார்.
நிகேத் பொம்மியின் வண்ணமயமான ஒளிப்பதிவு படத்தை இன்னும் ஒரு படி மேலே உயர்த்துகிறது.
குறிப்பாக துவக்க காட்சியில் மணப்பெண்ணின் தாலியை அறுத்துவிட்டு, பிரதீப் நடத்தும் கல்யாண கலாட்டாக்களை அழகாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
படம் முழுவதும் இழையோடும் மெலிதான நகைச்சுவை ரசிக்கும்படி அமைந்திருக்கின்றன.
“புனிதமான தாலியையே அறுத்தவன் தானே நீ…. “என்று பிரதீப்பை முன்னாள் காதலி குற்றம் சுமத்த, அப்போது அவளது கணவர் வந்து “தாலியை கழட்டி படுக்கையிலேயே வைத்து விட்டு வந்து விட்டாயே…” என்று சொல்லுவது அட்டகாசமான நகைச்சுவை.
இளம் தலைமுறையை மட்டுமல்ல எல்லோரையும் கவரும் கொண்டாட்டமான திரைப்படம் டியூட்.
மதிப்பெண்3.5/5


