ஃபேமிலி த்ரில்லர் படமாக உருவாகும் ‘ரீவைண்ட்’!

0

 641 total views,  1 views today


கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் உருவான ‘காதலுக்கு மரணமில்லை’ படம் மூலம் தமிழ் சினிமாவில்
ஹீரோவாக அறிமுகமான தேஜ், தொடர்ந்து ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’, ‘காந்தம்’ ஆகிய
படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவரது நடிப்பில் ‘மொழிவது யாதெனில்’, ‘விண்ணை தொடு’
ஆகியப் படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

தற்போது நடிப்புடன் இயக்கத்திலும் கவனம் செலுத்தும் தேஜ், குடும்ப த்ரில்லர் ஜானரில் ஒரு படத்தை
இயக்கி ஹீரோவாக நடிக்கிறார்.

‘ரீவைண்ட்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் கன்னடம் என இரு மொழிகளில்
உருவாகிறது. பனரோமிக் ஸ்டுடியோ (Panaromic Studios) நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில்
தேஜுக்கு ஜோடியாக சந்தனா ராகவேந்திரா நடிக்கிறார். இவர்களுடன் தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக
இருக்கும் நடிகர், நடிகைகள் பலர் நடிப்பதோடு, இயக்குநர் கே.பாலச்சந்தர் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட
பழம்பெரும் நடிகர் சுந்தரராஜன் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார். அத்துடன், முக்கிய வேடத்தில்
‘கே.ஜி.எப்’புகழ் சம்பத், கிஷோர் ஆகியோர்ரும் முக்கிய வேடங்களில் நடிக்க, கொரியன் சூப்பர் ஸ்டார்
ஒருவரும் கேமியோ வேடம் ஒன்றில் நடிக்கிறார்.

பிரேம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானிடம் கீ போர்ட் பிளேயராக பணியாற்றிய சபேஷ்
சாலமோன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். வினோத் பசவராஜ் எடிட்டிங் செய்ய, நாகேந்திர பிரசாத்
பாடல்கள் எழுதுகிறார். ஸ்டார் நாகி நடனம் அமைக்க, செல்வம் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்க, மக்கள்
தொடர்பாளராக கோவிந்தராஜ் பணியாற்றுகிறார்.

ஜெர்மனி, சிங்கப்பூர், லூத்தானியா போன்ற வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ள இப்படம் வித்தியாசமான
திரைக்கதை யுக்தியோடு விறுவிறுப்பான த்ரில்லர் படமாகவும் அதே சமயம் குடும்ப உறவுகளை மையமாக
வைத்த ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லராகவும் உருவாக உள்ளது.

மே 6 ஆம் தேதி எளிமையான முறையில் படப்பிடிப்பை தொடங்கிய ‘ரீவைண்ட்’ குழுவினர், மே 27 ஆம்
தேதி முதல் ஜெர்மனியில் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.

படம் குறித்து இயக்குநரும், ஹீரோவுமான தேஜிடம் கேட்டதற்கு, “4 வருடங்கள் இடைவெளியாகிவிட்டது.
ஆனால், இந்த நான்கு வருடத்தில் என் படம் வெளியாகவில்லை என்றாலும், நான் சினிமாவில் தான்
இருந்தேன். கதை எழுதுவது, வித்தியாசமான முறையில் திரைக்கதை அமைத்தல் என்று நான்கு வருடங்களாக
இப்படத்தை உருவாக்கியிருக்கிறேன்.

தமிழ் சினிமா தற்போது ஹாலிவுட் சினிமாவுக்கு நிகராக வளர்ந்திருக்கிறது. பல இளைஞர்கள் வித்தியாசமான
கதைக்களத்தோடு வெற்றி பெறுகிறார்கள், அந்த வரிசையில் நானும் ‘ரீவைண்ட்’ மூலம் வெற்றி பெறுவேன்.

த்ரில்லர் படம் என்றாலும் அதை குடும்ப பின்னணியில் சொல்லியிருப்பது என் படத்தின் பெரிய பலமாக
கருதுகிறேன். படத்தை பல வெளிநாடுகளில் படமாக்குவதற்கு காரணம், ஹீரோ ஒரு விஷயம் குறித்து
ஆராயும் போது அதனை கண்டுபிடிக்கும் மெடிக்கல் தொழில்நுட்பம், ஜெர்மனியில் இருப்பதை அறிகிறார்.
அதன்படி ஜெர்மனி உள்ளிட்ட சில வெளிநாடுகளுக்கு செல்பவர், அந்த நாட்டு அறிவியல் தொழில்நுட்பங்களை
இந்தியாவுக்கு கொண்டு வந்து அதன் மூலம், இங்கு நடக்கும் கார்ப்பரேட் க்ரைம் தொடர்பான விஷயங்களை
ஆராய்கிறார்.

படத்தில் ஹீரோவுக்கு பத்திரிகை நிருபர் வேடம். அவர் கண்டுபிடிக்கும் சில கார்ப்பரேட் க்ரைம் மூலம் அவரது
குடும்பத்திற்கு பிர்ச்சினைகள் வர, அதில் இருந்து அவர்களை அவர் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
அதன் பின்னணியில் நடக்கும் சஸ்பென்ஸும், த்ரில்லரும் நிச்சயம் ரசிகர்களை கவரும்.” என்றார்.

Share.

Comments are closed.