![]()
காந்தி டாக்ஸ்_ விமர்சனம்
நட்சத்திரங்கள்: விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அதிதி ராவ்
ஒளிப்பதிவு: கரண் பி. ராவத்
இசை: ஏ ஆர் ரகுமான்
எழுத்து இயக்கம்: கிஷோர் பாண்டுரங் பெலேகர்
தன் வயது முதிர்ந்த தாயுடன் மும்பையில் வசிக்கிறார் விஜய் சேதுபதி.
உடல்நிலை சரியில்லாத தாயாரை குடியிருப்பு பகுதியில் உள்ள பொது கழிப்பிடத்திற்கு தூக்கிச் சென்றுதான் காலைக் கடன் செய்விக்க வேண்டும்.
வருமானமின்றி கஷ்டப்படும் விஜய் சேதுபதி வேலை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்.
இந்த சூழலில் பணக்கார பெண்ணான அதிதி ராவ் ஹைதரியுடன் விஜய் சேதுபதிக்கு காதல் ஏற்படுகிறது.
மற்றொருபுறம் பெரும் செல்வந்தரான அரவிந்த்சாமி புரமோட்டராக இருந்து கட்டி வரும் மிகப்பெரிய குடியிருப்பு பகுதி தீ விபத்தில் சிக்கி, அரவிந்த்சாமிக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது.
வருமானம் இன்றி தவிக்கும் விஜய் சேதுபதி அரவிந்த் சாமி வீட்டில் புகுந்து கொள்ளையடிக்க திட்டமிடுகிறார்.
அரவிந்த் சாமியோ கடன் பிரச்சனையிலிருந்து தப்பிக்க தன் வீட்டை தானே தீ வைத்து கொளுத்த திட்டமிடுகிறார்.
இந்த சூழலில் சின்ன சின்ன திருட்டு வேலை செய்யும் பிக் பாக்கெட் திருடன் ஒருவன் அரவிந்த்சாமி வீட்டில் புகுந்து திருட முயற்சிக்கிறான்.
இந்த மூவரில் யார் வெற்றி பெறுகிறார்கள்?
விஜய் சேதுபதி அதிதி காதல் என்னவாயிற்று? என்பதுதான் ‘காந்தி டாக்ஸ்’ படத்தின் கதை.
படத்தில் வசனமே கிடையாது என்பதால் முழுக்க முழுக்க நடிக நடிகைகளின் நடிப்பை நம்பியே களமிறங்கியிருக்கும் படத்தின் இயக்குனர் கிஷோர் பாண்டுரங் பெலேகர், சரியான கேஸ்டிங் செய்ததால் சுலபத்தில் வெற்றியை பெற்று விடுகிறார்.
தாயாரிடம் காட்டும் பாசம், அதிதிடன் கொண்ட காதல், இன்டர்வியூவில் ஏற்படும் ஏமாற்றம், என்று நடிக்க வாய்ப்பு கிடைத்த அத்தனை இடங்களிலும் அமர்க்களமாக சிக்ஸர் அடித்து ஸ்கோர் செய்கிறார் விஜய் சேதுபதி.
பெரும் செல்வந்தரான அரவிந்த்சாமிக்கு அவரது தோற்றப் பொலிவும் உடல் மொழியுமே பாத்திரத்துக்கு பலம் ஏற்படுத்துகிறது.
பெரும்பாலும் நகைச்சுவைக்கு மட்டுமே பயன்படுத்திருக்கும் பிக் பாக்கெட் திருடனிடம் மட்டும்தான் கொஞ்சம் மிகை நடிப்பு தெரிகிறது.
தப்பான வழிக்கு செல்லக்கூடாது நேர்மையே முக்கியம் என்று தன் காதலர் விஜய் சேதுபதிக்கு புரிய வைக்கும் காட்சியில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார் அதிதி.
ஏ ஆர் ரகுமான் இசையில் உருவான பாடல்கள் நெஞ்சை வருடுவதுடன் அவரது பின்னணி இசை படத்துக்கு உயிரோட்டமாகவும் அமைந்திருக்கிறது.
படத்தின் துவக்கத்தில் வரும் நீதிமன்ற காட்சியை அபாரம்.
வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே, நீதியை விலைக்கு வாங்க நடக்கும் பேரம் பிரமாதம்.
அரவிந்த்சாமியின் குடும்பத்தார் ஒரு விமான விபத்தில் உயிரிழந்திருப்பதை ஒரு புகைப்படத்தின் கிராபிக்ஸ் காட்சி மூலம் இயக்குனர் சொல்லி இருப்பது அசத்தலோ அசத்தல்.
சரியான கழிப்பறை வசதி கூட இல்லாத குடியிருப்புகளுக்கு மத்தியில் அதிதி மாதிரி பணக்காரர்கள் வசிப்பது ஏற்றுக் கொள்ளும்படி இல்லை.
அதேபோல் படத்தின் பின்பகுதியில் அரவிந்த்சாமியின் பங்களாவில் விஜய் சேதுபதியும் பிக்பாக்கெட் திருடனும் சுற்றி சுற்றி வருவதும், அவரது கண்ணில் படாமல் மறைந்து கொள்வதுமான காட்சிகள் திரும்பத் திரும்ப வருவது சற்றே அலுப்பை தருகிறது.
மிக வித்தியாசமான திரை அனுபவத்தை தரும் ‘காந்தி டாக்ஸ்’ அனைவரும் பார்த்து ரசிக்கத்தக்க தரமான படம்.
மதிப்பெண் 3.5/5


