![]()
ஹாட் ஸ்பாட் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் ஹாட் ஸ்பாட் 2 மச் என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது.
முதல் பாகத்தில் நான்கு கதைகள் இருந்ததுபோல் இதில் மூன்று வெவ்வேறு கதைகள் இருக்கின்றன.
முதல் கதையே தன் அபிமான நடிகனுக்காக எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருக்கும் சினிமா வெறியர்களுக்கு எதிராக சாட்டையை சுழற்றுகிறது.
எதிரெதிர் துருவங்களாக இருக்கும் வெறித்தனமான சினிமா ரசிகர்களின் நெருங்கிய உறவுகளை கடத்தி, அவர்களை கொலை செய்யப் போவதாக மிரட்டி, அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து திருத்தும் வேடத்தில் எம்எஸ் பாஸ்கர் பிரமாதமாக நடித்திருக்கிறார்.
இரண்டாவது கதையில் தம்பி ராமையாவின் மகள் வெளிநாடு சென்று படித்து விட்டு திரும்பும் போது அரைகுறையாக ஆடை அணிந்து வருவதுடன், விருந்தினர்கள் வரும்போதுகூட வீட்டிலும் அவ்வாறே இருப்பதும் அதை நியாயப்படுத்தி பேசுவதுமாக இருக்கிறார்.
மகளுக்கு கசப்பு மருந்தை கொடுத்து, எப்படி அப்பா தம்பி ராமையா திருத்துகிறார் என்பது இரண்டாவது கதை.
விஞ்ஞான கதையாக வரும் மூன்றாவது பகுதியில், 2025 ஆம் ஆண்டு வசிக்கும் அஸ்வின் குமாருக்கும் 2050 ஆம் ஆண்டில் வாழும் பவானிஸ்ரீக்கும் ஏற்படும் காதலைப் பற்றியது.
“2050 ஆம் ஆண்டு யார் முதலமைச்சர்?” என்று அஸ்வின் குமார் கேட்க அதற்கு “நடிகர் சிவகார்த்திகேயன்… “என்று பவானிஸ்ரீ பதிலளிப்பது சுவாரஸ்யமான காட்சி.
“சரி எதிர்க்கட்சித் தலைவர் யார்?” என்று கேட்டால் “விஜய் சேதுபதி” என்று பதில் தருகிறார் பவானிஸ்ரீ.
ஹாட் ஸ்பாட் முதல் பாகத்தில் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் தயாரிப்பாளர் பாலமணி மார்பனிடம் கதை சொல்ல செல்வது போல், இரண்டாம் பாகத்திலும் அதே தயாரிப்பாளரிடம் கதை சொல்ல பிரியா பவானி சங்கர் வருகிறார்.
மிகச் சிறிய வேடம் என்றாலும் பிரியா பவானி சங்கரின் துடிப்பான நடிப்பும், பேசும் வசனங்களும் அவரை நினைவில் நிற்கும்படி செய்திருக்கின்றன.
குறிப்பாக தயாரிப்பாளரை “மாமா” என்று அழைப்பதும், அதற்கு அவர் கொடுக்கும் ரியாக்ஷனும் ரசமான காட்சி.
இதுபோல் ரசிக்கத் தகுந்த காட்சிகள் பலவும் படத்தில் நிறையவே உண்டு.
சதீஷ் ரகுநாதன் இசையும் ஜெகதீஷ் ரவி மற்றும் ஜோசப் பால் ரெட்டையர்களின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலமாக அமைந்திருக்கின்றன.
ஒப்பீட்டளவில் முதல் பாகம் அளவுக்கு இல்லை என்றாலும் துவக்கம் முதல் இறுதி வரை சற்றும் போர் அடிக்காத வகையில் சுவாரஸ்யமாக படத்தை இயக்குனர் கொண்டு செல்கிறார்.
மதிப்பெண் 3.5/5


