![]()
க்ராணி _ விமர்சனம்
வெளிநாட்டில் வசித்து வந்த ஆனந்த் நாக்_அபர்ணா தம்பதி, தங்கள் இரண்டு குழந்தைகளுடன் தாய்நாடு திரும்பி கிராமத்தில் உள்ள தங்கள் பாரம்பரிய வீட்டில் செட்டில் ஆக திட்டமிடுகின்றனர்.
பார்க்கும்போதே பயத்தை ஏற்படுத்தும் அந்த பிரும்மாண்டமான பாரம்பரிய மாளிகைக்குள் வரும் தினத்தன்றே மிக முதிர்ந்த தோற்றத்தில் மயக்கமடைந்திருக்கும் வடிவுக்கரசியை பார்க்கின்றனர்.
அவர் யார் என்ற விவரம் தெரியாமலேயே வீட்டுக்குள் அழைத்து வந்து முதலுதவி செய்கின்றனர்.
இதைத் தொடர்ந்து சில அமானுஷ்ய விஷயங்கள் அந்த வீட்டில் தொடர்ச்சியாக நடைபெறுகிறது.
வாய் பேச முடியாத, காது கேளாத மாற்று திறனாளிகளான குழந்தைகள் இருவரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகின்றது.
சூனியக்காரியைப் போல் தோற்றமும் நடையுடை பாவனையும் கொண்ட வயதான பெண்மணி வடிவுக்கரசி யார்? அவரது பின்னணி என்ன?
குழந்தைகள் இருவரையும் ஆபத்திலிருந்து பெற்றோரால் காப்பாற்ற முடிந்ததா இல்லையா என்பதுதான் க்ராணி படத்தின் கதை.
நடிப்பை பொறுத்தவரை வடிவக்கரசிக்குதான் முதல் மதிப்பெண்.
பயமுறுத்தும் வகையில் அமைந்த அவரது மேக்கப்பும், உடல் மொழியும் மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது.
குழந்தைகளை காப்பாற்றுவதற்காக போராடும் காட்சிகளில் ஆனந்த் நாக், மற்றும் அபர்ணா இருவருமே இயல்பாக நடித்திருக்கின்றனர்.
கம்பீரமாக வரும் காவல் அதிகாரி திலீபன் மர்மத்தை துப்பு துலக்கவும், பல ஆண்டுகளாகவே தலைமைக் காவலராக பணியாற்றும் சிங்கம் புலி நகைச்சுவைக்கும், சரியான முறையில் படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
ஊர்த் தலைவராக வரும் கஜராஜ் முன் கதை சுருக்கத்திற்கு உதவியாக இருக்கிறார்.
சிறுவன் இசைக்கருவியை வாசித்து கிராணியிடமிருந்து சகோதரியுடன் தப்பிப்பது ரசிக்க வைக்கும் புத்திசாலித்தனம்.
பாரம்பரிய இல்லத்தின் உட்புற வடிவமைப்பில் கலை இயக்குனரின் கைவண்ணம் தெரிகிறது.
மணிகண்டனின் ஒளிப்பதிவும் செல்லையா பாண்டியன் பின்னணி இசையும் பார்வையாளர்களை பயமுறுத்த இயக்குனர் விஜயகுமாரனுக்கு வெகுவாக உதவி இருக்கின்றன.
ஆயினும் திரைக்கதையில் விறுவிறுப்பை கூட்ட இயக்குனர் ஏனோ தவறிவிட்டார்.
திகில் பட ரசிகர்களை கவருவாள் இந்த ‘க்ராணி’.

