![]()
OTT-க்கான சிறந்த இசை ஆல்பம் விருதினை வென்ற இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்!
தியேட்டர்களுக்கு இணையாக தற்போது ஓடிடியும் தனித்துவம் வாய்ந்த பொழுதுபோக்கு அம்சமாக இந்திய ரசிகர்களின் வாழ்வில் மாறிவிட்டது. அந்தவகையில், ஓடிடியில் நேரடியாக வெளியாகும் படங்களுக்கும், இணையத்தொடர்களுக்கும் கடந்த சில வருடங்களாக விருதுகள் வழங்கி வரும் Filmfare நிறுவனம் சமீபத்தில் 2025ஆம் ஆண்டிற்கான OTT விருது வழங்கும் விழாவை மும்பையில் சிறப்பாக நடத்தி முடித்துள்ளது.
ஆலியா பட், விக்கி கெளசல், அனன்யா பாண்டே உள்ளிட்ட பல பாலிவுட் திரை பிரபலங்கள் கலந்து கொண்ட இவ்விழாவில், தமிழ் சினிமா இசையமைப்பாளரான ஜஸ்டின் பிரபாகரன் விருது பெற்றது குறிப்பிடத்தக்க அம்சமாக பார்க்கப்படுகிறது. மாதவன், ஃபாத்திமா சனா ஆகியோர் நடிப்பில் விவேக் சோனி இயக்கி, நெட்பிளிக்ஸ் OTT-ல் நேரடியாக வெளிவந்த Aap Jaisa Koi என்ற பாலிவுட் படத்திற்காக சிறந்த இசை ஆல்பம் (Web original) விருதினை பெற்றுள்ளார் ஜஸ்டின் பிரபாகரன்.
இயக்குநர் விவேக் சோனி – இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் கூட்டணியில் 2021-ல் வெளிவந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்ற பாலிவுட் படமும் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
2014ல் வெளிவந்த ‛பண்ணையாரும் பத்மினியும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஜஸ்டின் பிரபாகரன் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தென்னிந்திய சினிமா மட்டுமின்றி, பாலிவுட் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். தமிழில் பண்ணையாரும் பத்மினியும், ஒருநாள் கூத்து, மான்ஸ்டர், இறுகப்பற்று, அடியே உட்பட பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஜஸ்டின், தெலுங்கில் டியர் காம்ரேட், ராதே ஷ்யாம் போன்ற படங்களுக்கும், மலையாளத்தில் பகத் பாசில் நடித்த பாச்சுவும் அத்புத விளக்கும், மோகன்லால் நடித்த ஹ்ருதயபூர்வம் போன்ற படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
தற்போது தமிழில் ‛சிறை’, மலையாளத்தில் ‛சர்வம் மாயா’, ஹிந்தியில் ‛கோகோ அன்ட் நட்’ போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார் ஜஸ்டின் பிரபாகரன்.

