Tuesday, September 22

காழ் _ விமர்சனம்

Loading

காழ்: திரை விமர்சனம்

“ஃபாரின் நேசனாலிட்டி வாங்கிட்டா செல்வ செழிப்பில் மிதக்கலாம்!” என்கிற எண்ணம்தான் இங்கே பலருக்கும் இருக்கிறது. ஆனால், அங்கேயும் பிரச்சினைகளை எதிர்கொண்டுதான் நம்மவர்கள் வாழ்கிறார்கள் என்பதை இயல்பான காட்சிகளில் எடுத்துச் சொல்கிறது காழி.

ஆஸ்திரேலிய நாட்டில் தன் மனைவி மிமி லியோனார்டுடன் வாழ்கிறார் யுகேந்திரன் வாசுதேவன். தங்களுக்கென சொந்த வீடு வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள்; அதற்காக கடுமையாக வேலை பார்க்கிறார்கள்.

ஆனாலும் வீடு கட்டத் தேவையான பணம் குறைகிறது. ஆகவே வங்கிக் கடன் பெற முயற்சிக்கிறார்கள்.

ஒரு நபர், தான் கடன் வாங்கித் தருவதாகச் சொல்லி, பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றி விடுகிறார்.

அதன் பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

இன்னொரு பக்கம், நித்யா பாலசுப்பிரமணியன் – சித்தார்த் அன்பரசு ஆகியோரின் காதல் கதையும் ஓடுகிறது.

ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆன, நமது தமிழர்களின் சிரமகரமான வாழ்க்கையை எடுத்துக்காட்டி உள்ளனர். அதுவும் இயல்பான கதையோட்டத்தில்.

இன்னொரு பக்கம் நடக்கும் கொடுமையையும் சொல்லி இருக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த சித்தார்த் அன்பரசை, அவருடன் பணிபுரியும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த அஸ்வின் விஸ்வநாதன் கீழ்த்தரமாக நடத்துவதையும் காண்பித்து உள்ளனர்.
நாடு கடந்து செல்லும்போதும், சாதியை உடன் எடுத்துச் செல்கிறான் தமிழன் என்பதை பட்டவர்த்தனமாக சொல்லி இருக்கிறார்கள்.

யுகேந்திரன் வாசுதேவன், சிறப்பாக நடித்து உள்ளார். வீடு கட்ட எடுக்கும் முனைப்பு, அதை வைத்து ஒரு கயவன் ஏமாற்ற.. கலங்கித் தவிப்பது என அற்புதமாக நடித்து உள்ளார்.

அவரது மனைவியாக வரும் மிமியும் இயல்பாக நடித்து இருக்கிறார்.
சித்தார்த் அன்பரசு – வித்யா பாலசுப்பிரமணியம் ஜோடியும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

வெளிநாட்டில் தமிழனை தமிழனே ஏமாற்றுவது.. ஆஸ்திரேலியர்கள் இருவர் உதவுவது என காண்பித்திருப்பது கவனத்தை ஈர்க்கிறது.

ஹெல்வின் கே எஸ் மற்றும் சஞ்சய் அரக்கலின் இசையும், வசந்த் கங்காதரனின் ஒளிப்பதிவும் படத்துக்கு துணை நிற்கின்றன.

தரமான படத்தைத் தந்த இயக்குநர் மோகன்ராஜ் விஜேவுக்கு பாராட்டுகள்.