![]()
கடத்தல்காரன் – விமர்சனம்
திருச்சிக்கு அருகிலுள்ள நகர் ஒன்றில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் திருட்டை தொழிலாகக் கொண்டவர்கள் என்று அவர்களைப் பற்றி உண்மையும் பொய்யுமாக பல கதைகள் தென் தமிழகத்தில் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நிறைய இருந்தன.
அப்படிப்பட்ட ஒரு ஊரை களமாகக் கொண்டு கதை, வசனம் எழுதி ஒரு வித்தியாசமான படத்தை தர முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் எஸ்.குமார். கதையுடன் திரைக்கதை வசனத்தையும் இவரே எழுதியிருக்கிறார்.
கல்யாண வீடு ஒன்றில் திருடுவதற்காக நான்கு பேர் சேர்ந்து ஒரு காரில் செல்கின்றனர். திருமணம் பிடிக்காத நாயகி காதலனுடன் கம்பி நீட்டுவதற்காக அவன் அனுப்பும் காருக்காக காத்திருக்கிறாள். காதலன் அனுப்பிய கார் என நினைத்து திருடவந்தவர்கள் காரில் ஏறி அவர்கள் ஊருக்கே வந்து விடுகிறாள்.
நாயகியின் அப்பா அந்த ஊருக்கே பொது எதிரி எனத் தெரிந்து அவளை தப்பி செல்ல முடியாமல் ஊர்ப் பெரியவர் சிறை வைக்கிறார். நாயகி தப்பித்தாளா… காதலனுடன் சேர்ந்தாளா என்பதுதான் கடத்தல்காரன்.
சிலைத் திருட்டு தொடர்பான பிளாஷ் பேக் காட்சிகள் படத்துக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்ததால் விறுவிறுப்பைக் கூட்டுகிறது.
நாயகனாக நடித்திருக்கும் கெவின், நாயகியாக நடித்திருக்கும் ரேணு செளந்தரில் ஆரம்பித்து கிராமத்து மனிதர்களாக வருபவர்கள்வரை அனைவரும் இயல்பாக நடித்திருக்கின்றனர். குறிப்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் இருவரும் கவனத்தை ஈர்க்கின்றனர்.நாயகியில் ஆரம்பித்து துணை பாத்திரங்கள்வரை அனைவரையும் புதுமுகங்களாக தேர்வு செய்த துணிச்சலுக்காகவே இயக்குநர் குமாரைப் பாராட்டலாம்.
ஏரியல் வியூ தோற்றத்தில் குளத்தைச் சுற்றி அமைந்திருக்கும் வீடுகளுடன் மொத்த ஊரையுமே எஸ்.ஸ்ரீராமின் கேமரா படம் பிடித்திருக்கும் விதம் அழகு.
எல்.வி.கணேஷ் இசையில் உருவான பாடல்கள் இரண்டும் முணுமுணுக்க வைக்கின்றன.
படத்தின் துவக்க காட்சியில் கல்யாண வீட்டில் கொள்ளையடிக்கப் போகும்போது, நண்பர்கள் ஏதோ ஹாஸ்டலில் சாப்பிடப் போகும் மாணவர்கள்போல சலசலவென சத்தமாகப் பேசிக்கொண்டே போவதைத் தவிர்த்திருக்கலாம். திருடப்போன வீட்டில் இப்படியா ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருப்பார்கள்,
படத்தின் இரண்டாம் பாதியில் இருக்கும் விறுவிறுப்பை முதல் பாதியிலே கொண்டு வந்திருந்தால் நன்றாக அமைந்திருக்கும். வித்தியாசமான கதைக்களனைத் தேர்வு செய்த இயக்குநர் இன்னும் சற்று மெனக் கெட்டிருந்தால் சிறப்பான படமாகவே கொடுத்திருக்கலாம்.

