Wednesday, September 24

குமார சம்பவம் _ விமர்சனம்

Loading

குமார சம்பவம் _ விமர்சனம்

சமூகப் பிரச்சனைகளுக்காக போராடும் இளங்கோ குமாரவேலுக்கு,  தனது வீட்டை வாடகைக்கு கொடுக்கிறார் ஜி எம் குமார்.

அவரது பேரன் குமரன் தங்கராஜுக்கும் இளங்கோவுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன.

திரைப்பட இயக்குனராக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் பேரன் குமரனுக்காக படம் எடுக்க,  தன் வீட்டை விற்று பணம் கொடுக்க நினைக்கிறார் ஜி எம் குமார்.

வீட்டை விற்கும் பணத்தில் ஒரு பகுதியை நண்பன் இளங்கோ குமரவேலுக்கு கொடுக்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்து விடுகிறார்.

இதன் காரணமாக குமரனுக்கு இளங்கோவின் மீது இன்னும் கோபம் அதிகமாகிறது.

இந்த சூழ்நிலையில் இளங்கோ குமாரவேல் மர்மமான முறையில் இறந்து விடுகிறார்.

போலீசின் விசாரணை வளையத்தில் சிக்கிக் கொள்கிறார் குமரன் தங்கராஜன்.

இந்த மர்ம மரணத்தில் உண்மையில் நடந்தது என்ன என்பதை அறிந்து கொள்வதற்காக நண்பர்களுடன் தானே புலனாய்வு மேற்கொள்கிறார் குமரன் தங்கராஜன்.

உண்மையை அவரால் கண்டுபிடிக்க முடிந்ததா? இளங்கோ குமாரவேல் எப்படி இறந்தார் என்பதுதான் குமார சம்பவம்.

சின்னத்திரையில் புகழ்பெற்ற குமரன் தங்கராஜ்  நாயகனாக நடித்திருக்கும் முழு நீள முதல்படம் இது.

முதல் படத்திலேயே நகைச்சுவை, ஆக்சன், காதல் என்று அனைத்து தளங்களிலும் ஸ்கோர் செய்து தன் கவனம் ஈர்த்திருக்கிறார் குமரன்.

அவரது ஜோடியாக வரும் பாயல் ராதாகிருஷ்ணாவும் குறை சொல்ல முடியாத அளவுக்கு நடித்து பாஸ் மார்க் பெறுகிறார்.

எந்தப் பாத்திரம் ஏற்று நடித்தாலும் சோபிக்கும் இளங்கோ குமாரவேல் சமூகப் போராளியாக  குமார சம்பவம் படத்திலும் தன் முத்திரையை பதித்திருக்கிறார்.

படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் நகைச்சுவைதான்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல,  தரமான நகைச்சுவைப் படத்தை பார்த்த திருப்தியை தருகிறது குமார சம்பவம்.

காமெடியில் ஸ்கோர் பண்ண கிடைத்த இடங்களை எல்லாம்  தவறவிடாமல் தனது தனித்துவம் மிக்க நகைச்சுவை மூலம் கைத்தட்டல் பெறுகிறார் பாலசரவணன்.

அச்சு ராஜா மணியின் இசை படத்துக்கு உயிரோட்டமாக அமைந்திருக்கிறது.

ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவு நிறைவாக இருக்கிறது.

இயக்குனர் பாலாஜி வேணுகோபாலுக்கு நகைச்சுவை இயல்பாகவே நன்றாக வருகிறது.

தரமான நகைச்சுவை காட்சிகளுக்காகவே குமார சம்பவம் படத்தை தாராளமாக கண்டு ரசிக்கலாம்.

மதிப்பெண் 3.5