![]()
மாய பிம்பம் _ விமர்சனம்
உடல் நலமின்றி தூங்கும் சிறைக் கைதி ஒருவரை அடிக்கிறார் ஜெயிலர்.
சற்று நேரத்தில் ஜெயிலர் சாப்பிடும்போது, உணவு புரையேறி தொண்டைக் குழியில் சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடும் அவரை சவரக்கத்தியில் தொண்டையிலே குத்தி காப்பாற்றுகிறார் அடி வாங்கிய கைதி.
இப்படி ஒரு சுவாரஸ்யமான காட்சியுடன் பிளாஷ் பேக்கில் சொல்லப்படும் ‘மாய பிம்பம்’ திரைப்படம் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துகிறது.
கல்லூரி மாணவரான ஆகாஷ் பேருந்தில் பயணிக்கும் போது, பக்கத்து பேருந்தில் பயணிக்கும் நாயகி ஜானகியைப் பார்த்ததும் ஓர் ஈர்ப்பு ஏற்படுகிறது.
விபத்து ஒன்றில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஆகாஷை ஜானகி அடிக்கடி சந்தித்து பழகும் சூழல் ஏற்படுகிறது.
இந்த சூழலே இருவருக்கும் காதலை ஏற்படுத்த வழி வகுக்கிறது.
ஆனால் ஆகாஷின் நெருங்கிய நண்பர்களில் ஒருவனோ ஆகாஷுக்கு சரியான வழிகாட்டுதலை கொடுக்காமல் அவரை தவறாக வழி நடத்தி விடுகிறார். நாயகனுக்கு இணையான முக்கியமான பாத்திரமாக இது உருவாக்கப்பட்டிருக்கிறது. நடித்த புதுமுக நடிகரும் வெகுவாக இயல்பாகவும் சிறப்பாகவும் நடித்திருக்கிறார்.
ஜானகியின் தாயார் ஒரு பாலியல் தொழிலாளி. ஆகாஷ் ஜானகி இருக்கிடையே இருப்பது காதல் அல்ல காம்ம் என்பது இந்த நண்பனின் எண்ணம்.
நண்பனின் ஆலோசனைப்படி காதலி ஜானகியை தனி அறையில் சந்திக்கும் ஆகாஷ் உடல் ரீதியாக காதலியை அடைய முயற்சிக்கிறார்.
இதன் விளைவு என்ன? என்பதுதான் மாய பிம்பம் படத்தின் கதை.
முற்றிலும் புதியவர்களைக் கொண்டு இப்படி ஒரு தரமான படத்தை தந்த இயக்குனர் கே ஜே சுரேந்தர் அவர்களை முதலில் பாராட்டி விடுவோம்.
சின்ன சின்ன விஷயங்களை அழகாக கோர்த்து, நேர்த்தியான திரைக் கதையாகி படத்தை ரசிக்கும்படி செய்து இருக்கிறார் இயக்குனர்.
பேருந்து பயணத்தில்தான் நாயகியை நாயகன் முதன்முதலாக பார்த்து அவள் மீது ஈடுபாடு கொள்கிறான்.
ஆனால் நாயகி அதற்கு முன்பாகவே பேருந்து நிலையத்தில் நாயகன் செய்யும் ஒரு காரியத்தைப் பார்த்துதான் அவரைப் பற்றிய நல்ல அபிப்ராயம் தோன்றி அவரை காதலிக்கத் தொடங்குகிறார் என பின்னர் வரும் ஒரு காட்சி சிறப்பு.
நாயகன் இரவு சாப்பிடவில்லை என்று தெரிய வரும்போது, அண்ணி இட்லி தட்டை கொண்டு வருவது நெகிழ்ச்சி ஏற்படுத்தும் காட்சி.
நாயகனின் மற்றொரு நண்பன் so called அழகில்லாத பெண்ணை காதலிப்பதும், அதை நண்பர்களே கிண்டல் செய்வதும் நகைச்சுவை என்ற பெயரில் திணிக்கப்பட்ட முதிர்ச்சி இல்லாத காட்சிகள்.
நந்தாவின் இசையமைப்பில் உருவான பாடல்களின் வரிகள் படத்திற்கு வலு சேர்க்கின்றன. ( வெகுஜன ரசனைக்கு தீனி போடுவதற்காக படத்தின் துவக்கத்தில் வரும் குத்து பாடல் விதிவிலக்கு)
யதார்த்தமான காட்சிகள் மூலம் ஒளிப்பதிவாளர் எட்வின் சாக்கு கதைக்குள் நம்மை அழைத்துச் சென்று விடுகிறார்.
ஓரிரு குறைகள் இருந்தாலும் ரசிக்கத்தக்க மாறுபட்ட படம்தான் மாய பிம்பம்.
மதிப்பெண் 3.5/5


