
நாயகன் ஸ்ரீராம் கார்த்திக் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கிறார்.
அப்போது அவரது முகநூல் மெசஞ்சரில் ஒரு தகவல் வருகிறது. தகவல் வருவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை.
ஆனால் அந்த தகவலை அனுப்பியது இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்து போன ஒரு பெண் என்பதுதான் ஸ்ரீராம் கார்த்திக் பேரதிர்ச்சியை தருகிறது.
தொடர்ந்து பல செய்திகளை அனுப்பும் அந்தப் பெண், தான் பக்கத்தில் இருந்தவாறே நாயகன் ஸ்ரீராமை பார்த்து வருவதாகவும் சொல்கிறார்.
இதில் உள்ள மர்மத்தைத் தெரிந்து கொள்வதற்காக இறந்து போன அந்தப் பெண்ணின் ஊருக்கு சென்று அவரது குடும்பத்தாரிடம் விசாரணை செய்கிறார் நாயகன்.
விபத்தில் இறந்து போன அந்தப் பெண்ணின் உடலுடன் அவர் ஆசையாக வைத்திருந்த மொபைல் ஃபோனையும் சேர்த்து புதைத்து விட்டதாக அந்தப் பெண்ணின் தந்தை தெரிவிக்கிறார்.
ஆனால் உண்மையில் புதைக்கப்படாத அந்த போனை அவரது தோழி பயன்படுத்தி வருவது தெரிய வருகிறது.
தொடர்ந்து நடக்கும் விசாரணையில் இறந்து போன பெண் யார் என்பதும், எதற்காக அவர் தொடர்ந்து மொபைல் மூலம் மெசேஜ் அனுப்புகிறார் என்பதும் தெரிய வருகிறது.
இப்படி கதை வித்தியாசமானதாக இருந்தாலும் காட்சி அமைப்பில் விறுவிறுப்பு இல்லாமல் உருவாக்கப்பட்டிருக்கும் படம்தான் மெசேஞ்சர்.
இறந்து போன பெண்ணின் ஆவியுடன் தகவல் தொடர்பில் இருப்பது, ஆவியாக இருக்கும் அந்த பெண்ணையே காதலிப்பது, கல்யாணம் செய்துகொண்டு முதல் இரவு நடத்துவது என்று கலகலப்பான காட்சிகளுடன் படம் நகர்கிறது.
இறுதியில் பார்வையாளர்கள் யாரும் எதிர்பாராத வகையில் ஒரு முடிவை சொல்லுகிறார் இயக்குனர் ரமேஷ் இலங்காமணி.
நாயகன் ஸ்ரீராம் கார்த்திக் மிக இயல்பான நடிப்பில் கவனம் இருக்கிறார்.
அவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் நாயகி மனிஷாஸ்ரீ தன் பாத்திரத்தை உணர்த்து சிறப்பாக நடித்திருக்கிறார்.
பாலகணேசனின் ஒளிப்பதிவும் அபுபக்கரின் இசையும் படத்துக்கு பலம் சேர்க்கின்றன.
ஆவி தொடர்பான கதை என்றாலே நம்ப முடியாத வகையில் அமைந்திருப்பது இயல்புதான் என்றாலும், இயன்றவரை காட்சிகளை எதார்த்தமாக அமைத்து பார்வையாளர்களை நம்பும்படி கொடுத்திருக்கிறார் இயக்குனர் ரமேஷ் இளங்காமணி.
விபத்தில் இறந்த பெண்ணின் ஆவியை காதலிப்பது, கல்யாணம் செய்வது ஏன் குழந்தை பெற்றுக் கொள்வது வரை செல்லும் இந்தப் பட கதையில், மூளை சாவு அடைந்தவரின் உறுப்புகளை தானம் செய்யும் விழிப்புணர்வும் மிக முக்கிய இடம் பிடித்திருக்கிறது.
பல காட்சிகளில் லாஜிக் மீறல்கள் இருப்பதை தவிர்த்து, இன்னும் விறுவிறுப்பான வகையில் திரைக்கதையை அமைத்திருக்கலாம் இயக்குனர் ரமேஷ் இளங்காமணி.


