சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’!

0

Loading


சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ அதன் தீவிரமான விளம்பரங்கள் மூலம் அனைத்து தரப்பிலும் பேசப்படும் ஒரு விஷயமாக மாறியிருக்கிறது. ஒட்டுமொத்த தமிழ் யூடியூபர் குடும்பமும் தொடர்ச்சியாக அனைத்து சமூக வலைத்தளங்களிலும் தாக்கத்தை அதிகப்படுத்தி வருகிறது. அதில் அதிகம் பேசப்படும் நபர், அனைவரது கவனத்தையும் திசை திருப்பியிருப்பவர் யார் தெரியுமா? அரசியல்வாதியாக இருந்து நடிகராக மாறியிருக்கும் நாஞ்சில் சம்பத் தான். சினிமா பயணத்தை துவங்கும் முன்பே, அவருடைய தன்னிச்சையான கருத்துக்களுக்காக மிகவும் பிரபலமான ஒருவராக இருந்துள்ளார். அவரது முத்திரையான வாக்கியம் “துப்புனா தொடச்சிக்குவேன்” ஒரே இரவில் மிகவும் பிரபலமானது. இந்த பிரபலமான வரிகள் தற்போது டி-ஷர்ட்டிலும் பதிக்கப்பட்டு மிக அதிகமாக விற்பனை ஆகின்றன. 

நாஞ்சில் சம்பத் இதை பற்றி கூறும்போது, “ஒரு செய்தி சேனல் நேர்காணலில் நான் கோபமாக சொன்ன ஒரு விஷயம், எதிர்பாராத விதமாக நகைச்சுவை அம்சமாக திரும்பியிருக்கிறது. இதில் வேடிக்கையான விஷயம் என்னவெனில் நான் இந்த வரிகளை ஒழுங்காக, மிகச்சரியாக சொல்ல, சினிமாவில் பல டேக் எடுக்க வேண்டியிருந்தது” என்றார்.

இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் மீது அதிக மதிப்பை வைத்திருக்கிறார் நாஞ்சில் சம்பத். அவர் கூறும்போது, “அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது கர்ம யோகியாக இருக்கும் அவரது இயல்பு. அது தனது குறிக்கோள்களில் மட்டுமே கவனம் செலுத்தி, என்ன ஆனாலும் அதை நிறைவேற்றும் ஒரு இயல்பு. இந்த காலத்தில் கார்த்திக் போன்ற ஒரு நபரை கண்டுபிடிப்பது எளிதான விஷயம் அல்ல. சமுதாயத்தின் மீது அதிக அக்கறை கொண்டிருக்கும் ஒரு சமூகப் பொறுப்பு உடைய மனிதர் அவர்” என்றார்.

இந்த படத்தில் அரசியல்வாதியாக நடித்திருக்கும் நாஞ்சில் சம்பத், தனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சிவகார்த்திகேயன் மற்றும் மொத்த ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ குழுவுக்கும் நன்றியை தெரிவிக்கிறார். அவர் கூறும்போது, “சிவகார்த்திகேயன் தம்பி ஒரு பரிபூரணமான ஜென்டில்மேன், தனது தொழில் மீது மிகுந்த அர்ப்பணிப்பு உடையவர். ரியோராஜ் அனைவரையும் கவரும் தோற்றத்தை கொண்டிருக்கிறார், அதுவே அவரை அனைவருக்கும் பிடிக்க வைக்கும். அவர் ஏற்கனவே தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் அனைவருக்கும் பிடித்தமானவராக இருக்கிறார். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஒடு ராஜா மூலம் அவர் ஒரு நட்சத்திரமாக மாறுவார்” என்றார்.

சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ஜூன் 14, 2019 அன்று உலகமெங்கும் வெளியாகிறது. ரியோராஜ், ஷிரின் காஞ்ச்வாலா, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், ராதாரவி மற்றும் நாஞ்சில் சம்பத் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஷபீர் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு யுகே செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

 
Share.

Comments are closed.