“Once upon an IAS exam” என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னை அடையாறில் உள்ள ஒடிசி புக் செண்டரில் நடைபெற்றது. விழாவில் சமூக அக்கறை மிகுந்த படங்களுக்காக அறியப்பட்ட இயக்குனர் மோகன்ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.
அவர் பேசும்போது, “டாக்டர் விஜய் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் எழுதியிருக்கும் இந்த புத்தகம் நம்மை ஊக்கப்படுத்தக் கூடிய ஒரு புத்தகம். ஐ.ஏ.எஸ் பணி என்பது மிகவும் உன்னதமானது. ஒரு மருத்துவர் சமுதாயத்துக்கு புரியும் சேவையை போல, ஐ.ஏ.எஸ் அதிகாரியாக சேவை புரிந்து தற்போது தனது எழுத்து மூலம் சமுதாயத்துக்கு சேவை புரிய வந்திருக்கிறார். அவர் மிகச்சிறப்பான ஒரு வேலையை செய்திருக்கிறார். இந்த மாதிரியான புத்தகங்கள் நமக்கு வெற்றிக்கான வழியை அடையாளம் காண உதவுகின்றன. இந்த புத்தகம் பல தரப்பு மக்களுக்குமானது. அவரின் கதை நம்மில் பலருக்கு பொருந்த கூடியனவாக இருக்கிறது. அதற்காக எழுத்தாளர் விஜய் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
புத்தகத்தின் ஆசிரியர் டாக்டர் விஜய கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் பேசும்போது, “இந்த புத்தகத்தை வெளியிடுவதற்கு உறுதுணையாக இருந்த ஒடிஸிக்கு நன்றி. இயக்குனர் மோகன்ராஜா, சமூக உணர்வு உடைய ஒரு சில இயக்குனர்களில் முக்கியமானவர். அவரின் ஒவ்வொரு படமும் ஒரு செய்தியைக் கொண்டு வருகிறது. இந்த புத்தகத்தை அறிமுகப்படுத்த அவர் வந்திருப்பது மகிழ்ச்சி. நான் தொடர்ந்து புத்தகங்களை எழுதுவேன், அவை நிச்சயம் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த புத்தகம் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் 25 வயது இளைஞரின் வாழ்க்கையை சுற்றி நடக்கும் காமெடி, உணர்வுகள் மற்றும் திடுக்கிடும் திருப்பங்களை உள்ளடக்கிய ஒரு கலவையாகும்” என்றார்.