கடந்த சில மாதங்களாக சென்னை உயர்நீதி மன்றத்தால் தடை செய்து வைக்கப்பட்டிருந்த ‘ஒளடதம்’ திரைப்படம் அத்தடையிலிருந்து விடுதலை பெற்று வெற்றிகரமாக மே 24ல் வெளியாகிறது.
ரெட் சில்லி ப்ளாக் பெப்பர் சினிமாஸ் சார்பாக நேதாஜி பிரபு தயாரிப்பில் ரமணியின் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘ஒளடதம்’. நான்கு மாதங்களுக்கு முன்னரே சென்சார் செய்யப்பட்டு வெளியிடத் தயாராகப் பத்திரிகைகளில் முறைப்படி தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் சில கயவர்களின் உண்மைக்கு மாறான தவறான சித்தரிப்புகளால் சென்னை உயர் நீதி மன்றம் தடை விதித்தது.
பணத்தாசை பிடித்த அதுவும் சினிமாக்காரர்களை ஏமாற்றி பணம் பண்ணிவிடலாம் என்று எண்ணிய சில விஷக்கிருமிகளால் திட்டமிட்டு செய்யப்பட்ட சதிதான் இத்தடைக்குக் காரணம்.
இப்படத்தைத் தயாரித்த நேதாஜி பிரபு ஒரு சிறிய தயாரிப்பாளர்..அவரே கதை எழுதி கதாநாயகனாகவும் நடித்துத் தயாரித்த படம் தான் ‘ஒளடதம்’. தனது முதல் முயற்சி சிறிய பட்ஜெட் படம் என்றாலும் நல்ல கருத்துக்களுடன் ஒரு தரமான படமாக இருக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்து பாடுபட்டுத் தயாரித்த படம் இந்த ‘ஒளடதம்’.
இப்படத்தின் இயக்குநர் ரமணி மலையாளத் திரை உலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான டி.வி.சந்திரனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.
வெளிநாடுகளில் காலாவதியான மூலப்பொருட்களைக் கொண்டு மருந்து மாத்திரைகளைத் தயாரித்து இந்தியாவில் விற்கப்படும் மோசடிகளைத் தோலுரித்து வெளிச்சம் போட்டுக்காட்டும் திரைப்படம்தான் ‘ஒளடதம்’.
தயாரிப்பாளரே இப்படத்தை வெளியிடத்தயாராய் இருந்த நிலையில் எங்கிருந்தோ வந்த சில விஷக்கிருமிகள்
உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துத் தடை செய்து விட்டனர்…
கஷ்டப்பட்டு ஒரு திரைப்படத்தை எடுத்து முடித்து வைத்திருக்கும் புதிய படத்தைத் தனதாக்கிக் கொள்ளும் ஒரு ஏமாற்று வேலை சமீப காலமாக தமிழ்த்திரை உலகில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்தான் ‘ஒளடதம்’ திரைப்படத்திற்குள்ளும்
எஸ்.அஜ்மல்கான் என்பவர் தலைமையில் விஷக்கிருமிகள் உள்ளே நுழைந்து தங்கள் ஆட்டத்தைத் தொடங்கினர்..
ஒரு ஏமாற்று எம் ஓ யு ஒப்பந்த அடிப்படையில் மூன்று மாதத்திற்குள் படத்தை வெளியிடுவதாகவும் அதற்குள் பேசிய தொகையைக் கொடுத்து விடுவதாகவும் ஒப்புகொண்டு, பணத்தையும் கொடுக்காமல் மூன்று மாதத்திற்கு மேல் பல மாதங்களையும் கடத்தினர்..
சட்டப்படி அவர்களது ஒப்பந்தம் காலாவதியானபின் தயாரிப்பாளர் படத்தைத் தானே வெளியிட முன் வந்திருக்கிறார்.
இந்தச் சமயத்தில்தான் பல லட்சங்களில் ரூபாயைக் கொடுத்து படத்தை வாங்கியுள்ளதாக கதை விட்டனர். முகவரிச் சான்றுக்காக தயாரிப்பாளர் கொடுத்த ஓட்டுநர் உரிமத்தின் ஜெராக்ஸ் நகலில் இருந்த கையெழுத்தை வைத்துப் பொய்ப்பத்திரங்கள் தயார் செய்து, படம் தங்களுக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடி மேற்படி அஜ்மல்கான் கோஷ்டியினர் சென்னை உயர்நீதி மன்றத்தில் தடை வாங்கி விட்டனர்.
தயாரிப்பாளர் அளித்திருந்த லைசென்ஸ் போட்டோ காப்பியில் உள்ள அட்டஸ்டேஷன் கையெழுத்துக்கு மேல் 80 லட்ச ரூபாயைப் பெற்றுக்கொண்டுள்ளதாக எழுதி நீதிமன்றத்தில் காட்டியுள்ளனர்..இப்படிப்பட்ட கிரிமினல் வேலைகள் நடப்பது தமிழ் சினிமாவில் இதுவே முதன்முறை..
எத்தனையோ போராட்டங்களுடன் படத்தை எடுத்து முடித்த நேதாஜி பிரபு சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதி அரசர் முன்னால் தனது பக்கத்தின் நியாயங்களை எடுத்துச் சொல்லி கடந்த நான்கு மாதங்களாகப் போராடி இப்பொழுது வெற்றி பெற்றிருக்கிறார்.
மேலும் குறிப்பிட்ட இந்த நபர் இதைப்போல் இன்னும் சில தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்களையும் ஏமாற்றியிருக்கிறார் என்பதை தக்க சாட்சியங்களுடன் நிரூபித்திருக்கிறார்.
இந்த விஷக்கிருமிகள் இதையே தங்களது தொழிலாக வைத்துக்கொண்டுள்ளனர் என்றும்
இனிமேல் குறிப்பிட்ட இந்த விஷக்கிருமிகளுடன் எந்தவிதத் தொடர்பும் தமிழ்த்திரையுலகினர் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் இவர்கள் கடைந்தெடுத்த ஏமாற்றுக்காரர்கள் எனவும் நீதி அரசர் தனது தீர்ப்பில் எழுதி அவர்களின் செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்..
இவ்வழக்கை சென்னை உயர் நீதி மன்ற வழக்கறிஞர்கள், கே.எஸ்.சாரநாத், வீரா மற்றும் செல்வராஜ் ஆகியோர் மிகத்திறம்பட நடத்தி வெற்றி கண்டுள்ளனர்..
ஒளடதம் திரைப்படம் இதோ மே 24-ல் வெளியாகிறது. அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைத் தொடங்கி விட்டதாகக் கூறுகிறார் நாயகனும்
தயாரிப்பாளருமான நேதாஜி பிரபு.