புதிய உயரங்களில் சிறகு விரிக்கும் பார்த்திபன்!

0

 455 total views,  1 views today

வித்தகமும் வர்த்தகமும் ஒருங்கிணைந்த அரியதோர் படைப்பு என்று பார்த்திபனின் படங்களைச் சொல்லலாம். வியாபார ரீதியிலான வெற்றி என்ற வணிகச்சூழலில் சொகுசாகப் பயணித்துக்கொண்டிருந்த படவுலகை, தான் அமைத்த புதிய பாதையில் செலுத்தி வெற்றி பெற்றவர் பார்த்திபன். தானே கதாநாயகனாக நடித்து தன்னை இயக்குநராகவும் அறிமுகப்படுத்திக்கொண்ட முதல் படத்திலேயே மத்திய அரசின் தேசிய விருதில் ஆரம்பித்து அத்தனை அங்கீகாரங்களையும் பெற்றவர்களைப் பட்டியலிட்டால், அதில் முதலிடத்தில் இருப்பவர் பார்த்திபன்.
எதையும் வித்தியாசமாக சிந்தித்து முதலிடத்தை பிடிக்க முயலும் அவரது சாதனை முயற்சிகள் இப்போது சர்வதேச அளவில் அரங்கேறத் தொடங்கியிருக்கின்றன. பார்த்திபன் நடித்து இயக்கித் தயாரித்திருக்கும்
‘ஒத்த செருப்பு சைஸ் 7’ திரைப்படம் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 7 வரை சிங்கப்பூரில் நடைபெறும் தெற்காசிய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.அதிக உற்சாகத்துடன் இருக்கும் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இது குறித்து கூறும்போது, “உண்மையாக சொல்வதானால், SAIFF போன்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன என்ற உண்மையை நான் ஒருபோதும் அறிந்ததில்லை. நான் ஏதோ மிகைப்படுத்தி கூறுவதாகத் தோன்றலாம். ஆனால் இது போன்ற ஒரு மதிப்புமிக்க மேடையில் திரையிடப்படுவதற்கு ஒத்த செருப்பு சைஸ் 7 படம் தகுதியானது என்று நான் நம்புகிறேன். எனது கடின உழைப்பிற்காக நான் இதை சொல்லவில்லை, நான் நினைத்ததைகொண்டு வர அதிக அளவில் முயற்சி எடுத்த ஒட்டுமொத்த குழுவினருக்காக இதை சொல்கிறேன். மேலும், இந்த மாதிரி ஒரு முயற்சி சர்வதேச அரங்கில் கவனிக்கப்பட ஒரு வாய்ப்பாக அமைகிறது என்றார்.சினிமா எப்போதுமே ஆர்ட் பிலிம் மற்றும் கமர்சியல் பிலிம் என்று வகைப்படுத்தப்படுகிறது. குறிப்பாக, ஆர்ட் பிலிம் என்பது விருதுக்காகவே தயாரிக்கப்பட்ட படம் என்றும், வெகுஜன ரசனைக்கு ஏற்ற படமல்ல என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. வழக்கமான வணிக சினிமா பார்வையாளர்களுக்கு இது சரியான தேர்வாக இருப்பதில்லை. ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இது குறித்து தெளிவுபடுத்துகிறார். அவர் கூறும்போது, “அப்படியானால், எனது முதல் படம் புதிய பாதை கலை ரீதியான படமாகவும் இருந்தது, அந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. அதே நேரத்தில் வணிக ரீதியாக வெற்றிப் படமாகவும் இருந்தது. ஒத்த செருப்பு அதை மீண்டும் நிரூபிக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்றார்.

ஒற்றை நபர் மட்டுமே நடிக்கும் இந்தப் படத்தில் அவரே நடித்திருப்பதுடன் தயாரித்தும் இயக்கியிருக்கிறார். உலக சினிமா வரலாற்றில் ஒரு நபர் நடித்த 13 படங்களில் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு ஆகிய மூன்று முக்கிய பொறுப்புகளையும் ஒருவரே ஏற்ற படம், இதற்கு முன் எதுவும் வந்தததில்லை. அந்த வகையிலும் இது மிகப்பெரிய சாதனைப் படமாகும்.

.
விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு கிளப்பின் பாதுகாப்பு காவலர் மாசிலாமணி என்ற கதாபாத்திரத்தை சுற்றி நிகழ்கிறது. அவர் ஒரு கொலையில் சந்தேக நபராக காவல் நிலையத்திற்கு இழுத்து செல்லப்படுகிறார், அதே நேரத்தில் அவரது உடல்நிலை சரியில்லாத மகன் காவல்துறை விசாரணை அறைக்கு வெளியே காத்திருக்கிறார். கதாநாயகனைத் தவிர, மற்ற கதாபாத்திரங்கள் அதன் இருப்பை குரல் மூலமாக மட்டுமே கொண்டிருக்கும். அவை காட்சிக்குள் இருப்பதைப் போல ஒரு காட்சி தூண்டுதலை ரசிகர்களுக்குள் உருவாக்கும்.
உலக சினிமா வரலாற்றுல் ஒற்றை நபர் மட்டுமே நடிக்கும் 13வது சினிமாவாக உருவாகியிருக்கிறது ‘ஒத்த செருப்பு சைஸ் 7’. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பூடான், சிங்கப்பூர், பங்களாதேஷ், ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் 45 படங்களுடன் இந்த படமும் இந்த விழாவில் கலந்து கொள்கிறது.

பயோஸ்கோப் ஃபிலிம் ஃப்ரேமர்ஸ் சார்பில் பார்த்திபன் ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார், சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சி சத்யா பின்னணி இசை அமைக்கும் இந்த படத்தை ஆர் சுதர்ஷன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி மற்றும் அம்ரித் பிரீத்தம் ஒலி வடிவமைப்பு செய்துள்ளனர். விவேக் (பாடல்கள்), விஷ்ணு (புகைப்படம்), பி கிருஷ்ணமூர்த்தி (இணை இயக்குனர்), டி கண்ணதாசன் டிகேடி (பப்ளிசிட்டி), iGene (DI) மற்றும் ஒயிட் லோட்டஸ் (விஎஃப்எக்ஸ்) ஆகியோர் அடங்கிய தொழில்நுட்ப குழு இந்த படைப்பின் பின்னணியில் உழைத்திருக்கிறது.

 
எவரெவர் சிறகுகளுக்கு எவ்வளவு வலிமை உண்டோ, அவரவர் அந்த உயரங்களைத் அடைந்தே தீருவார். புதிய பாதையில் பயணிக்கும் இந்த புதுமைப்பித்தனும் பதிய உயரங்களைத் தொடட்டும்.
 

எவரெவர் சிறகுகளுக்கு

எவ்வளவு வலிமை உண்டோ,

அவரவர் அந்த உயரங்களை அடைந்தே தீருவார்.

புதிய பாதையில் பயணிக்கும் இந்த புதுமைப்பித்தனும் பதிய உயரங்களைத் தொடட்டும்.

 
 
Share.

Comments are closed.