’பேச்சி’ திரைப்படத்தின் வெற்றி விழா மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா!
வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்ஷன்ஸ் (Verus Productions) சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி எழுத்து இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டு பெற்று, மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது 10 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் இன்று (ஆக.9) சென்னை பிரசாத் லேபில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் பார்த்திபன் பேசுகையில், “பேச்சி வெற்றி விழா மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. சினிமா வர்த்தகமே இன்று நிலையற்ற சூழலில் இருக்கும் போது பேச்சி என்ற சிறு படம் 10 வது நாளை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் நாளில் எங்களுக்கு 18 காட்சிகள் ஒதுக்கப்பட்டது, இரண்டாவது நாளில் சென்னையில் மட்டும் 75 ஸ்கிரீன்ஸ் எங்களுக்கு ஒதுக்கப்பட்டது. இன்று 10 நாட்களை கடந்து 75 சதவீத தியேட்டர்களை நாங்கள் தக்க வைத்துக்கொண்டிருக்கிறோம். பேச்சி படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் பிடித்திருக்கிறது. இதற்கு காரணம், பத்திரிகை மற்றும் ஊடகத்தினர் தான். நீங்கள் கொடுத்த ஆதரவு காரணமாக இந்த படம் மக்களை சென்றடைந்திருக்கிறது, அதற்கு உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் திரைப்பட கல்லூரியில் படித்துவிட்டு, ரத்னவேலு அவர்களிடம் உதவியாளராக சேர்ந்தேன். அப்போது எளிதில் படம் பண்ணிவிடலாம் என்று நினைத்தேன், ஆனால் எனக்கு வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை, பல போராட்டங்களுக்குப் பிறகே இந்த இடத்தில் நின்றிருக்கிறேன். இந்த இடத்தில் நிற்பதற்கான வாய்ப்பை கொடுத்த தயாரிப்பாளர் கோகுல், என் குருநாதர் ரத்னவேலு ஆகியோருக்கு நன்றி. எனக்கு உறுதுணையாக இருந்த கலரிஸ்ட் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. இன்று என்னுடைய ஒளிப்பதிவை குறிப்பிட்டு மக்கள் பாராட்டி வருகிறார்கள், அதற்கு காரணம் இவர்கள் தான், இந்த தருணத்தில் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.
படத்தொகுப்பாளர் இக்னேசியஸ் அஸ்வின் பேசுகையில், “பேச்சி படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிகை மற்றும் ஊடகத்தினருக்கு நன்றி. பேச்சி படம் தொழில்நுட்ப ரீதியாக சிறந்த படம் என்று விமர்சனமும், பாராட்டும் கிடைத்தது. இதற்காக உழைத்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி. இந்த படத்தை மக்களிடம் சரியான முறையில் கொண்டு சேர்த்த வெரூஸ் புரொடக்ஷன்ஸ் முஜிப் சார் மற்றும் சஞ்சய் சார் ஆகியோருக்கு நன்றி. எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் கோகுல் மற்றும் இயக்குநர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு நன்றி.” என்றார்.
நடிகர் நாட்டு ராஜதுரை பேசுகையில், “முதலில் அப்பா, அம்மாவுக்கு நன்றி, பிரபஞ்சத்திற்கு நன்றி. பார்த்திபன், ராம் அண்ணா, கோகுல், விஜய் ஆகியோருக்கு நன்றி. நான் இதில் நடிக்கும் போது முக்கியமான கதாபாத்திரம் என்று தெரியாது, படம் முடிந்த பிறகு தான் அது தெரிந்தது. இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு மிகப்பெரிய நன்றி. தரமான படங்களை மக்களும், பத்திரிகையாளர்களும் பாராட்டி அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்வார்கள் என்பதற்கு இந்த படமும் சான்றாக அமைந்திருக்கிறது. அனைவருக்கும் நன்றி.” என்றார்.
வெரூஸ் நிறுவனத்தை சேர்ந்த சஞ்சய் ஜெய்சங்கர் பேசுகையில், “பேச்சி படத்தை பொருத்தவரை ரியல் ஹீரோ பிரஸ் தான். படம் எடுத்தது ஒரு பக்கம் இருந்தாலும், பத்திரிகையாளர்களின் எழுத்து தான் மக்களை திரையரங்கிற்கு கொண்டு வந்தது, பத்திரிகையாளர்களுக்கு வெயிலோன் மற்றும் வெரூஸ் சார்பில் மிகப்பெரிய நன்றி. என்னுடைய அப்பா அடிக்கடி சொல்வார், நம்ம என்னதான் நடித்தாலும், அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது பத்திரிகையாளர்கள் தான், அவர்கள் எழுதினால் தான் மக்கள் தியேட்டருக்கு வருவார்கள், என்று. அவர் சொன்னது போல் இன்று பேச்சி படம் வெற்றி பெற்றதற்கு பத்திரிகைகள் தான் முதல் காரணம். என் அப்பா மேலே இருந்து பாத்துக்கிட்டு இருக்காரு, நிச்சயம் அவர் மகிழ்ச்சியடைவார். எங்களுடைய முதல் படமே இவ்வளவு பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. இந்த படத்தை எங்களிடம் கொண்டு வந்த சூரி மற்றும் அலிஸுக்கு நன்றி. இந்த படத்தை பார்த்துவிட்டு எங்களிடம் சொன்ன முஜிப், ராஜராஜன் உள்ளிட்ட எங்கள் குழுவினருக்கும் நன்றி. இந்த படத்தை மிக நேர்த்தியாக இயக்கிய இயக்குநர் ராமச்சந்திரன், சிரமமான இடங்களில் படப்பிடிப்பு நடந்தாலும் அதை சிறப்பாக செய்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி. படத்தை சரியான முறையில் விநியோகம் செய்த ட்ரீம் வாரியர்ஸ் குகனுக்கும் பெரிய நன்றி.” என்றார்.
வெரூஸ் நிறுவனத்தை சேர்ந்த முஜிப் பேசுகையில், “இந்த நிகழ்ச்சிக்கு வந்ததற்கு நன்றி. பத்து நாட்களுக்கு முன்பு பேச்சி படத்தின் சிறப்பு காட்சியில் உங்களை சந்தித்தோம். உங்களுடைய எழுத்தால் தான் மக்கள் படத்தை கொண்டாடுகிறார்கள். நான் இந்த குறுகிய காலத்தில் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் குறித்து என்ன புரிந்துக்கொண்டேன் என்றால், படம் பெரியது, சிறியது என்று பார்க்காமல், கண்டெண்ட் நன்றாக இருந்தால், அதற்கான அங்கீகாரத்தை கொடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்கும் வேலையை பத்திரிகையாளர்கள் சிறப்பாக செய்கிறார்கள், அதற்காக மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வெயிலோன் மற்றும் வெரூஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்வதோடு, கடினமாக உழைத்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.” என்றார்.