Saturday, December 14

ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து மணல் மாபியா இளவரசன் அதிரடி நீக்கம்..!

Loading

டாக்டர் இளவரசனை மன்றத்தில் இருந்து அதிரடியாக நீக்கிய ரஜினி

சமீபத்தில் வெளியான பேட்ட திரைப்படத்தில் மணல் மாஃபியாக்களை எதிர்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குரல் எழுப்பியிருக்கிறார். “என் மண்ணையும் மக்களையும் சுரண்டியவர்களுக்கு அழிவு தான் முடிவு” என்றும் அதில் கூறியிருப்பார். அப்படிப்பட்டவரின் மக்கள் மன்றத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவர் பல வருடமாக மணல் கொள்ளையைராக, மணலை திருடி விற்பவராக செவ்வனே செயல்பட்டு வருகிறார் என்றால் நம்பமுடிகிறதா.?

ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில அமைப்புச் செயலாளர் டாக்டர் இளவரசன் விருத்தாசலத்தில் மணிமுத்தாறு, வெள்ளாறு, கோமுகி ஆகிய ஆறுகளில் இருந்து மணலை சுரண்டி விற்று, கோடிகோடியாக சம்பாதிக்கிறார். வன்னியர் சங்கம், பாமக, அதிமுக என்று தொடங்கி. கட்சி கட்சியாக தாவினாலும் தனது ஆதார தொழிலான மணல் விற்பனையை மட்டும் அவர் நிறுத்தவேயில்லை.

கருவேப்பிலங்குறிச்சி, நேமம், மேலப்பாளையூர், மருங்கூர், தொழூர், காவனூர், பவழங்குடி, தேவங்குடி என ஒட்டுமொத்த வெள்ளாறு பாசன பகுதிகளும் வறண்ட பாலைவனமாக மாறி உள்ளது. மணல் முழுவதும் சுரண்டப்பட்டு களிமண் மட்டுமே இருக்கிறது.. கிட்டத்தட்ட 30 அடிக்கு மேல் மணல் சுரண்டப்பட்டு உள்ளது

லாரி மூலமாக கடத்தப்படுவது மட்டுமன்றி, மாட்டுவண்டி மூலமாகவும் ஆற்றோர கிராம மக்கள் வழியாக சாக்கு மூட்டைகள், பாத்திரங்கள் மூலமாகவும் மணல் அள்ளி விற்பனை செய்யப்படுகிறது கட்டட வேலைக்கு சென்ற பெண்களை நாளொன்றுக்கு 400 ரூபாய் சம்பளத்திற்கு அழைத்து வந்து மணல் அள்ளுகிறார்கள். அவர்கள் நான்கு பேர் ஒரு குழுவாக சேர்ந்து, ஒரு நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 5 மாட்டு வண்டிகள் மணல் அள்ள கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்

சொல்லப்போனால் தமிழ்நாட்டிலேயே விருத்தாசலத்தில் தான் அதிகப்படியான மணல் கொள்ளையடிக்கப்படுகிறது. விழுப்புரம் கூத்தக்குடி கிராமத்தை சேர்ந்த மணிசேகர் உள்பட பல புரோக்கர்கள் மணிமுத்தாறு, கோமுகி ஆறுகளில் மணலை அள்ளி அடிக்கடி கைதாகிறார்கள். இவர்கள் அனைவருக்குமே இளவரசன் தான் தலைவர் என்று கூறப்படுகிறது

இந்த மணிசேகர் உள்ளிட்ட புரோக்கர்களை கடந்த ஆகஸ்ட் மாதம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அடுத்தடுத்த மாதங்களில் பல கைதுகள் நடைபெற்றன. ஆலடி சாலையில் கடந்த நவம்பர் மாதம் நடத்திய ரெய்டில் கோபுராபுரத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் ஏராளமான மாட்டு வண்டிகளுடன் கைது செய்யப்பட்டனர் இவர்கள் அனைவருமே மணல் மாஃபியாவாக டாக்டர் இளவரசனைத்தான் சுட்டிக்காட்டியதாக காவல்துறை வட்டாரத்திலேயே பேச்சு அடிபடுகிறது.

மணல் குவாரிகளை தமிழக அரசு தடை செய்தபோது, ஏனைய பகுதிகளில் எல்லாம் மணல் திருடியவர்கள், சில நாட்கள் பொறுமையாக இருக்கலாம் என்று இருந்தபோது, விருத்தாசலத்தில் மட்டும் மாட்டு வண்டி உரிமையாளர்கள் குவாரி அனுமதிக்கு பெரிய போராட்டமெல்லாம் நடத்தினார்கள். அந்த போராட்டங்களை தூண்டி பின்னணியில் செயல்பட்டதே விருத்தாசலம் மணல் மாஃபியா இளவரசன்தான் என்கிறார்கள்.

இவரை பற்றியும் இவரது அடாவடிகள் பற்றியும் ரஜினியின் காதுகளுக்கு தகவல் கொண்டு செல்லப்பட்டது.. இதை அறிந்து அதிர்ந்துபோன ரஜினி உடனடியாக நடவடிக்கை எடுத்து, டாக்டர் இளவரசனை ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளார். மேலும் இளவரசனுடன் ரஜினி மக்கள் மன்றத்தினர் யாரும் என்ற எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனராம்.