![]()
ரெட்ட தல _ விமர்சனம்
ஆதரவற்ற நிலையில் இருக்கும் சிறுவர்கள் அருண் விஜய் மற்றும் சித்தி இத்தானி இருவரும் நட்புடன் பழகுகின்றனர்.
வேலை நிமித்தமாக வெளியூர் செல்லும் அருண் விஜய், சித்தி இதானியை மணந்து கொள்ளும் திட்டத்துடன் வந்து அவரை சந்திக்கிறார்.
ஆனால் பணத்தாசை பிடித்த சித்தி இத்தானியோ அருண் விஜய் காதலை ஏற்காமல் வெளிநாட்டிற்கு சென்று செட்டில் ஆக விரும்புகிறார்.
இந்த சூழலில் தன்னைப் போலவே இருக்கும் பெரும் செல்வந்தர் ஒருவரை அருண் விஜய் சந்திக்கிறார்.
“அவரைக் கொன்று விட்டு அந்த இடத்துக்கு நீ சென்று விட்டால் நாம் இருவரும் மகிழ்ச்சியாக இருக்கலாம்”என்று அருண் விஜயை தூண்டி விடுகிறார் சித்தி இத்தானி.
இதற்கு ஒத்துக்கொள்ளும் அருண் விஜய் அந்த செல்வந்தரை கொன்று விடுகிறார்.
அந்த செல்வந்தர் கோவாவில் உள்ள மிகப் பெரிய நிழல் உலக தாதா என்றும், அவரைக் கொல்வதற்கு மற்றொரு கும்பல் திட்டம் தீட்டி இருப்பதும் பிறகுதான் தெரிய வருகிறது.
இறந்து போன அருண் விஜய் கொலை குற்றத்துக்காக சிறையில் இருப்பதும், தற்போது ஜாமீனில் வெளியே வந்திருப்பதும் தெரிய வருகிறது.
சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டது போன்ற நிலையில் இருக்கும் அருண் விஜய்யும் சித்தி இத்தானியும் பிறகு என்ன செய்கிறார்கள்?
சிக்கல்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் ரெட்ட தலை படத்தின் கதை.
இரட்டை வேடங்களில் வரும் அருண் விஜய் ஆக்சன் காட்சிகளில் அசத்தி இருப்பதுடன் உணர்ச்சிகரமான காட்சிகளிலும் முத்திரை பதிக்கும் வண்ணம் நடித்திருக்கிறார்.
காதலை விட பணமும் வசதியான வாழ்க்கையுமே முக்கியம் என்று கருதும் காதலி வேடத்தில் சித்தி இத்தானியும் நிறைவாகவே செய்திருக்கிறார்.
கோவா மற்றும் பாண்டிச்சேரியின் அழகை அப்படியே தன் கேமராவில் அள்ளி வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் டிஜோ டாமி.
சாம் சி எஸ் இசையமைப்பில் தனுஷ் பாடிய “கண்ணம்மா… ” பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகின்றது. அது படமாக்கப்பட்ட விதமும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது.
ஆண்டனியின் படத்தொகுப்பு படத்தின் விறுவிறுப்புக்கு வெகுவாகவே உதவியிருக்கிறது.
பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அட்டகாசமான ஆக்சன் படத்தை கொடுக்க வேண்டும் என்று களம் இறங்கிய அறிமுக இயக்குனர் கிரிஷ் திருக்குமரன் அதில் வெற்றி வெற்றி பெற்று விட்டார்.
ஆதரவற்ற நிலையில் இருந்த சிறுமி ஆறு மொழிகளை எப்படி கற்றுத் தேர்ந்தார் என்பது போன்ற லாஜிக்கான கேள்விகளை எல்லாம் மூட்டை கட்டி விட்டு படத்தை பார்த்தால் தாராளமாக ரசிக்கலாம்.
மதிப்பெண் 3.5/5


