![]()
சக்தித் திருமகன் _ விமர்சனம்
மிகச் சாதாரண ஆளாக இருந்து அரசியல் புரோக்கர் ஆக மாறி, அரசு அதிகாரிகளில் ஆரம்பித்து அமைச்சர்கள்வரை கச்சிதமாக காரியங்களை செய்ய வைத்து காசு பார்த்து வருகிறார் விஜய் ஆண்டனி.
இவ்வாறு சம்பாதித்த பணத்தை எல்லாம் ஒரு தொண்டு நிறுவனத்தை போல் தனி ஆளாக நின்று, ஏழை எளிய மக்களுக்கு செலவு செய்து வருகிறார்.
அரசியல் சாணக்கியராக நின்று காய்களை நகர்த்தும் செல்வாக்கு மிக்க பெரும் செல்வந்தரான சுனில் கிருபளானி ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார்.
அவர் அந்தப் பதவிக்கு வராமல் தடுப்பதுடன், ஊழல் அரசியலை ஒழித்துக் கட்ட விஜய் ஆண்டனி என்னவெல்லாம் செய்கிறார் என்பதுதான் சக்தி திருமகன் படத்தின் கதை.
அரசு எந்திரத்தை ஆட்டம் காண வைக்கும் ஆழமான வேடத்தில் இயல்பாக நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி.
ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்த செல் முருகன் விஜய் ஆண்டனிக்கு பக்க பலமாக இருக்கும் சீரியஸ் பாத்திரத்தில் படம் முழுக்க வருகிறார்.
விஜய் ஆண்டனியின் மனைவியாக வரும் திரிப்தி ரவீந்தராவுக்கு அதிகமான காட்சிகள் இல்லை. தோன்றும் சில காட்சிகளிலும் வசனம் அதிகம் இல்லை, என்றாலும் கண்களாலும் முகபாவங்களாலும் நம் கவனத்தை ஈர்க்கிறார்.
சுவர் எழுத்து சுப்பையா என்ற வேடத்தில் வரும் வாகை சந்திரசேகர் சில நிமிடங்களே படத்தில் தோன்றினாலும் நம் மனதில் பதிந்து விடுகிறார்.
ஆயினும் ஊரார் எதிர்ப்பை மீறி எல்லோருடைய வீட்டு சுவரிலும் தன் கொள்கைகளை எழுதுவதும், மூடநம்பிக்கையை எதிர்க்கிறேன் பேர்வழி என வேண்டுமென்றே பூனையை சாலையின் குறுக்கே விடுவதும் ஏற்புடைய காட்சிகள் இல்லை.
விஜய் ஆண்டனியின் இசையில் உருவான மெலடி பாடல் இதயத்தை வருடுகிறது.
படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருப்பது ஷெல்லி ஆர் கேலிஸ்டின் ஒளிப்பதிவு.
படத்தை எழுதி இயக்கி இருப்பவர் அருண் பிரபு. பல காட்சிகள் சமகால அரசியலை நினைவூட்டும் வகையில் துணிச்சலாக அமைத்து பாராட்டுதல்களை பெறுகிறார் இயக்குனர்.
துணிச்சலான அரசியல் விமர்சனத்திற்காகவே சக்தித் திருமகன் படத்தை தாராளமாக கண்டு ரசிக்கலாம்.


