நடிகர் சங்கத்தின் 68-வது ஆண்டு பேரவைக் கூட்டம்!

0

Loading

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-வது ஆண்டு பேரவைக் கூட்டம் செப்டம்பர் 8 ஆம் தேதி சென்னை, காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில், தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோர் பேசியதாவது:_

*பொதுச் செயலாளர் விஷால் பேசுகையில்,*

“பூச்சி முருகன் சாருக்கு ஒரு முறை கை தட்டுங்கள். நான் வெளிப்படையாகவே சொல்கிறேன், எனக்கும், நாசர் சாருக்கும் ஈடுபாடு குறைவாக இருக்கும் போதெல்லாம், ஒவ்வொரு நாளும், 6 முதல் 8 பிரிவுகளில் இருக்கும் வாட்ஸ் – அப் குழுக்களில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை, இவர்கள் வேலை செய்கிறார்கள். இது இவர்களிடம் நான் வியந்து பார்க்கும் விசயம்.
ஒவ்வொரு என் பிறந்தநாளுக்கும் புதிய கட்டிடத்தை பார்க்கும் போது மனதார சந்தோஷப்பட்டேன். கொரோனா பாதிப்பு, வழக்கு உள்ளிட்ட அனைத்தையும் பார்த்த போது, கட்டிடம் இருக்கும் பக்கமே போக வேண்டாம் என்று நினைப்பேன். அந்த பக்கம் போக வேண்டி இருந்தால் கூட, வேறு ஒரு பக்கமாக சென்று விடலாம் என்று தோன்றும். ஆனால், இன்று நம் கட்டிடத்தை பார்க்கும் போது, தமிழ்நாட்டில் மட்டும் அல்ல இந்தியாவிலேயே மிகச்சிறந்த கட்டிடமாக நடிகர் சங்கம் கட்டிடம் வரப்போகிறது.

ஒவ்வொரு வருடமும் நாம் சொல்லிக்கொண்டு இருக்கிறோம், ஆனால் நான் சத்தியமாக சொல்கிறேன், 2025 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நம் சங்க கட்டிடத்தில் தான் நடக்கும், இது சத்தியம். அதற்கான முயற்சிகள், வேலைகள் எல்லாமே போய்க்கொண்டு இருக்கிறது. அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உங்க அனைவருக்கும் நான் சொல்ல வேண்டியது ஒரே ஒரு விசயம் தான், நீங்க வைத்திருக்கும் நம்பிக்கை தான் நாங்கள். நாற்காலியில் உட்கார்ந்து கையெழுத்து போடும் வேலை மட்டும் அல்ல இது. நானும், கார்த்தியும் நிறைய முறை பேசும் போது, கட்டிடம் வந்தால் உதவி செய்வதற்கான நிதி அதிகரிக்கும் என்று பேசுவோம், அது நிச்சயம் நடக்கும்.

இந்த மேடையில் அமைந்திருக்கும் அனைவரும் உங்களுக்காக உழைக்கும் குடும்பம். இது ஒரே குடும்பம். நாங்க மேடையில் அமர்ந்திருப்பதும், நீங்க கீழே அமர்ந்திருப்பதும் சும்மா, இங்கு அனைவரும் சமம் தான். நீங்க தான் எங்களுக்கு பொறுப்பு கொடுத்து உட்கார வைத்திருக்கிறீர்கள், அதை ஏற்று நாங்கள் உங்களின் நன்மைக்காக பணியாற்றுகிறோம். ஒவ்வொரு முறையும் நடிகர் சங்கம் செல்லும் போது எங்கள் மனதில் ஒரு விசயம் தோன்றும். அது என்னவென்றால், நீங்கள் நலமாக இருக்க வேண்டும், எந்த மூலையில் இருந்தாலும், நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும், என்ற எண்ணத்தில் தான் நாங்கள் வேலை செய்கிறோம். இந்த இடத்தில் எவ்வளவு பிரச்சனைகள் வந்தது. தேவையில்லாத சம்பவங்கள் நடந்தது. இல்லை என்றால் கட்டிடம் என்றோ வந்திருக்கும்.
ஆனால் அந்த வேலையை பார்க்க விடாமல், வழக்கு, உச்ச நீதிமன்றம் வரை போனது எல்லாம் தேவையில்லாத விசயம். நம்ம கட்டிடத்தில் ஒரு சாக்கடை இருக்கும். எம்.ஜி.ஆர் ஐயா, சிவாஜி ஐயா, எஸ்.எஸ்.ஆர் ஐயா அவங்க காலத்தில் இருந்தே இருக்கிறது. அதன் வழியாக அனைத்து கெட்டவர்களும் வெளியே போயிட்டாங்க, நல்லவர்கள் மட்டும் இங்கு இருக்கிறார்கள்.

நீங்கள் அனைவரும் இங்கு வந்ததில் ரொம்ப சந்தோஷம். பல ஊர்களில் இருந்து இங்கு வந்திருக்கிறீர்கள், உங்களை நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்ததில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஒரு பொதுச் செயலளாராக எப்போதும் உங்களுக்காக பணியாற்றுவேன்.” என்றார்.

மேலும், 2024-25 ஆம் ஆண்டுக்கான சங்கத்தின் வழக்கறிஞராக திரு.கிருஷ்ணா ரவீந்தர் அவர்களையும், தணிக்கையாளராக திரு.ஸ்ரீராம் அவர்களையும் உறுப்பினர்களின் ஒப்புதலோடு பொதுச் செயலாளர் விஷால் நியமித்தார்.

*பொருளாளர் கார்த்தி பேசுகையில்,*

“சங்கம் கட்டிடத்தை தொடங்கும் போது பல சிக்கல்கள் இருந்தது. அப்போது தான் ஜெயந்தி மேடமை சந்தித்தோம், அவங்களை அறிமுகம் செய்து வைத்த ஸ்ரீமன் அவர்களுக்கு நன்றி. அவர்களை சந்தித்த போது, சார் இது மிகவும் கடினமான வேலை, என்று சொன்னார்கள், தெரியும் மேடம் அதனால் தான் உங்களை சந்திக்க வந்திருக்கோம், என்றேன். நம்ம கிட்ட இடம் இருக்கு, அதன் மதிப்பு ரூ.130 கோடியாக இருந்தாலும், அந்த இடத்தில் வருமானத்திற்கான எந்த சாத்தியக்கூறும் இல்லை, அதனால் வங்கிகளில் கடன் வாங்க முடியாது, என்று சொல்லி தான் அவங்க வேலையை எடுத்துக்கிட்டாங்க. இப்போது நம் சங்கம் இருக்கும் அடுக்குமாடி கட்டிடத்திற்கான மாற்று சான்றிதழ் வாங்குவதற்கே மூன்று மாதங்கள் ஆனது, அந்த அளவுக்கு அது மிகப்பெரிய வேலையாக இருந்தது. அதேபோல் நம் சங்கத்தின் சொத்தை வைத்து வங்கியில் கடன் வாங்க வேண்டும் என்றால், வரி கமிஷ்னரிடம் சான்றிதழ் வாங்க வேண்டும். அந்த சான்றிதழ் வழங்க வேண்டும் என்றால் நம் சங்கத்தின் அனைத்து கணக்குகளையும் சரி பார்த்து, அது சரியாக இருந்தால் மட்டுமே வழங்குவார்கள். அந்த வகையில், நம்ம ஆடிட்டர் ஸ்ரீராம் அவர்கள் ஒவ்வொரு நாளும் அதற்கான வேலையில் தொடர்ந்து மூன்று மாதங்கள் ஈடுபட்டு, நமக்கு அந்த சான்றிதழை பெற்றுக் கொடுத்தார். அவருக்கு இந்த நேரத்தில் அனைவரும் கை தட்டுங்கள். 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தான் நமக்கு அந்த சான்றிதழ் கிடைத்தது. பிறகு ரூ.25 கோடிக்கு மேல் கடன் வாங்கினால் அதற்காக அரசாங்கத்திடம் இருந்து ஒரு சான்றிதழ் வாங்க வேண்டும் என்று சொன்னார்கள். இப்படி பல கட்டங்களை கடந்து, அனைத்து பணிகளையும் முடித்து, கடந்த ஜூலை மாதம் தான் எஸ்.பி.ஐ வங்கியில் கடன் பெறுவதற்கான அனைத்து சான்றிதழ்களையும் சமர்ப்பித்தோம். அந்த வங்கி தான் அறக்கட்டளைக்கு கடன் தருகிறார்கள், என்பதால் அந்த வங்கியில் சமர்ப்பித்தோம். இறுதியாக ஜெயந்தி மேடம் அதை ஃபைல் பண்ணாங்க. கடந்த பொதுக்குழுவில் கடன் பெற்றுவிடுவோம் என்று சொன்னாலும், கடந்த ஜனவரி மாதம் தான் நமக்கு கடன் கிடைத்து விட்டது என்பதற்கான சான்றிதழ் கிடைத்தது.

5 வருடங்கள் கட்டிட பணி நடக்காமல் போனது நமக்கு மிகப்பெரிய இழைப்பை ஏற்படுத்தியது. நிறைய கம்பிகள் சேதம் அடைந்துவிட்டது. கட்டிடம் நன்றாக இருந்தாலும், விலைவாசி உயர்ந்து விட்டது. 32 முதல் 40 சதவீதம் வரை கட்டுமான பொருட்களின் விலை அதிகரித்து விட்டது. அதேபோல், வங்கியில் நம்ம வாங்கிய கடனுக்கான வட்டி விகிதம் 14.4 ஆக இருந்தது. ஆனால், அது நம்மால் முடியாது என்று சொன்ன பிறகு, வங்கியிடம் பேசி 11.1 ஆக நமக்கு மாற்றிக்கொடுத்தவர் ஜெயந்தி மேடம் தான், அவங்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி. அதேபோல், கடன் வாங்குவதற்கான செயலாக்க தொகை என்று இருக்கிறது. அதை கொடுத்தால் தான் கடன் கிடைக்கும். அந்த தொகை ரூ.34 லட்சமாக இருந்தது. அதையும் பேசி ரூ.22 லட்சமாக குறைத்தோம். அதையும் என் சொந்த பணத்தில் இருந்து கொடுத்தேன், ஆனால் என் கையில் இருந்து அடிக்கடி கொடுக்க முடியாது என்பதால், சங்கத்திற்கு கடனாக கொடுத்து அதை செலுத்தினோம். நம்முடன் பணியாற்றிய பழைய பொறியாளர்களுடன் மீண்டும் இணைய முடியவில்லை என்றாலும், தற்போது ஐஐடி பொறியாளர்கள் சிலர் பணியாற்றுகிறார்கள். காண்டிராக்டர் நம்முடன் தொடர்ந்து பணியாற்றுகிறார். அதேபோல், பூச்சி முருகன் சாரின் உதவியின் மூலம் சி.எம்.டி.ஏவில் பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த பொறியாளர் எந்தவித கட்டணமும் பெறாமல், நம் கட்டிடத்தை பரிசோதிக்கும் பணியை பார்த்துக் கொண்டிருக்கிறார். வங்கியில் கடன் பெற்றதால், அவர்கள் மூலம் நியமிக்கப்பட்ட அதிகாரி மூலம் நம்முடைய செலவுக்கான பில் சரி பார்க்கப்படுகிறது. எந்த ஒரு பொருள் வாங்க வேண்டும் என்றாலும், அது வங்கி அதிகாரியின் பார்வைக்கு சென்று, வங்கி மூலம் அதற்கான தொகை சென்றுவிடுகிறது.

வங்கியிடம் நாம் கேட்ட தொகை ரூ.30 கோடி, ஆனால் அவங்க நமக்கு ரூ.25 கோடி தான் கொடுத்தாங்க. இந்த தொகைக்குள் கட்டிடத்தை சிக்கனமாகவும், வேகமாகவும் கட்டுவதற்கு ஏற்றபடி டிசைனில் சில மாற்றங்கள் செய்ய வேண்டி இருந்தது. அதற்கான பொறியாளர்கள் கிடைப்பதில் கொஞ்சம் தாமதமானது. பிறகு பொறியாளர்கள் கிடைத்து மே மாதம் முதல் பணி வேகமாக நடந்துக் கொண்டிருக்கிறது. இரும்பிலான தூண்கள் கொண்ட கட்டிடம் தான் சங்கரதாஸ் சுவாமிகள் பெயரில் அமைக்கப்படும் கலையரங்கம். அங்கு நாடகங்கள் நடக்கும், அதனால் தான் அந்த கலையரங்கத்தை நாம் உருவாக்கி இருக்கிறோம். நம்ம முன்னோர்கள் நமக்காக கொடுத்த மிகப்பெரிய சொத்து இது, அதுவும் தி.நகர் போன்ற ஒரு முக்கியமான பகுதியில் இது இருப்பது மிகப்பெரிய விசயம். அதை வைத்து நாம் வருமானம் ஈட்ட வேண்டும், வருமானம் இல்லை என்றால் யாரும்கும் உதவி செய்ய முடியாது. நம் கையில் இருந்து தொடர்ந்து பணம் போட முடியாது. அதனால் வருமானம் ஈட்ட வேண்டும் என்பதற்காக இங்கே திருமண மண்டபம் ஒன்றை கட்டுகிறோம். ஏவிஎம் திருமண மண்டபம் அளவுக்கு மிகப்பெரியதாக இருப்பதோடு, 100 கார்கள் நிறுத்தக்கூடிய அளவுக்கு பார்க்கிங் வசதி உள்ளது. இவ்வளவு பெரிய பார்க்கிங் வசதி கொண்ட திருமண மண்டபம் சென்னையில் வேறு எங்குமே கிடையாது. வருடத்தில் 100 நாட்கள் நிகழ்ச்சி நடந்தாலே போதும் நமக்கு மிகப்பெரிய வருமானம் கிடைக்கும். அதே சமயம், நம்ம வாங்கிய கடனுக்கு மாதம் மாதம் வட்டி கட்ட வேண்டி இருக்கும். அதனாலயும் பணியை சீக்கிரம் முடிக்க வேண்டும். அதேபோல் மழை போன்ற இயற்கை பாதிப்புகள் வரும், அதனால் வெளிக்கட்டிட வேலைகளை முதலில் முடித்து விட்டால், மழை காலங்களில் உள்கட்டமைப்பு வேலைகளை பார்த்துக்கொள்ளலாம்.

கடன் கொடுத்த வங்கியும் அதை சாதாரணமாக கொடுக்கவில்லை. கடன் தொகையின் பாதியை நிலையான வைப்பு தொகையாக வங்கியில் செலுத்த சொன்னார்கள். 50 சதவீதம் என்றால் 11.50 கோடி ரூபாய். அந்த தொகையை கேட்டதும் நான் அதிர்ச்சியாகி விட்டேன், இதை எப்படி செய்யப் போகிறோம், என்று தோன்றியது. அப்போது அண்ணாவிடம் பேசிக்கொண்டு இருந்த போது, இவ்வளவு பேர் இருக்கோம், இதை செய்திடலாம், கட்டிடலாம், கோவில் தானே கட்டுகிறோம், அனைவரிடமும் பேசிப் பாரு, என்று சொன்னாங்க. அதன்படி, நான் முதலில் ரூ.1 கோடியை சங்கத்திற்கு கடனாக கொடுத்தேன். பிறகு கமல் சாரை சந்தித்தோம். அவர், எப்போது கட்டுவீங்க, சீக்கிரம் செய்ங்க, என்று சொல்லி ரூ.1 கோடி கொடுத்தார். பிறகு அமைச்சர் உதயநிதியை சந்தித்தோம். அவர் ரூ.1 கோடி கொடுத்ததோடு, அவரது நண்பர்களின் மூலம் ரூ.5 கோடியை பெற்றுக் கொடுத்து எங்களது சுமையை பாதியாக குறைத்தார். விஜய் சாரை சந்தித்தோம், அவர் கடனாக வேண்டாம் நன்கொடையாகவே கொடுக்கிறேன் என்று சொல்லி ரூ.1 கோடி கொடுத்தார். தனுஷை சந்தித்தோம் அவரும் ரூ.1 கோடி கொடுத்தார். நெப்போலியன் சாரிடம் பேசும் போது, எவ்வளவு தேவை என்று கேட்டார், 2 கோடி ரூபாய் தேவை சார், அதற்கான முயற்சியில் இருக்கிறோம், என்று சொன்னேன். அதற்குள் தனுஷ் ஒரு கோடி கொடுத்துவிட்டார். அதன் பிறகு நெப்போலியன் சார் ரூ.1 கோடி கொடுத்தார். இறுதியாக ரூ.50 லட்சம் தேவைப்பட்டது. அதை சிவகார்த்திகேயன் கொடுத்தார். இப்படி தான் அந்த தொகையை பெற்றோம். இந்த பணி முடியவே நான்கு மாதங்கள் ஆகிவிட்டது. கடனாக தான் அனைவரும் கொடுத்தார்கள் என்றாலும், இவ்வளவு பெரிய தொகை கொடுப்பதற்கு மனசு வேண்டும், அதை கொடுத்த அனைவருக்கும் இந்த சமயத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிலம் இப்போ நம்ம கிட்ட இருக்கு, யார் கைக்கும் போகாமல் இருப்பதற்கு பூச்சி முருகன் சார் தான் காரணம். இந்த இடம் சத்யம் தியேட்டரிடம் கை மாறி இருந்தது, அவங்களிடம் பேசி வாங்கியதே பெரும் போராட்டம். இப்போது அவங்க பி.வி.ஆர் கிட்ட கொடுத்துட்டாங்க. அவங்க கிட்ட இருக்கும் போது பேசி வாங்கிட்டோம், இதே கார்ப்பரேட் நிறுவனம் கிட்ட இருந்திருந்தால், என்ன நடந்திருக்கும், என்பதை யோசிக்கும் போதே பயமாக இருந்தது. நம்ம முன்னோர்கள் அடுத்த தலைமுறைக்காக விட்டுட்டு போன இடம், இப்போது நாம நமது அடுத்த தலைமுறைக்காக இந்த கட்டிடத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். நான் வெளியூர்களில் படப்பிடிப்புக்கு செல்லும் போது நிறைய பேர் பென்ஷனை நிறுத்திட்டிங்களே, என்று கேட்பார்கள். பென்ஷன் அரசாங்கம் கொடுக்க வில்லை, சங்கம் தான் கொடுக்கிறது. சுமார் 450 பேருக்கு பென்ஷன் கொடுப்பதால், மாதம் ரூ.8 லட்சம் செலவு செய்துக் கொண்டிருந்தோம். கலை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் வந்த தொகையை செலவு செய்துக் கொண்டிருந்தோம். ஆனால், நிதி இல்லாமல் போனதால் அதை நம்மால் கொடுக்க முடியவில்லை. உங்களிடம் நான் ஒன்றே ஒன்று தான் கேட்டுக்கொள்கிறேன், கட்டிடம் வெற்றிகரமாக முடிய வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள். அது தான் நமது வருமானத்திற்கான ஒரே வழி. அது நடந்தால், பென்ஷன், உறுப்பினர்களின் வாரிசுகளின் கல்வி, மருத்துவ செலவு என அனைத்தையும் தொடர்ந்து கொடுக்க முடியும். நம்ம சங்கத்தில் 50 சதவீதம் பேர் 50 வயதை தாண்டியவர்கள், பலர் சங்கத்தை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். ஒரு அம்மாவுக்கு 80 வயதுக்கு மேல் இருக்கும், அவங்க ஒரு காப்பகத்துல இருக்கேன், என்னை அடிக்கிறாங்க என்று சொல்லி, என்னை நடிகர் சங்கத்துல விட்டுடுங்க என்று கேட்டாங்க. உடனே அவங்களை மீட்டு ஒரு காப்பகத்தில் சொல்லி சேர்த்தோம், இப்போ அங்க அவங்க மகிழ்ச்சியாக இருக்காங்க. இப்படி பலருக்கு பல தேவைகள் இருக்கு. இதை அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டும், நிர்வாகத்திற்கு அடுத்ததாக வருபவர்கள் இதை தெரிந்துக் கொள்ள வேண்டும்.

இந்த நேரத்தில் ரஜினி சாருக்கும், கமல் சாருக்கும் மிகப்பெரிய நன்றி தெரிவிக்க வேண்டும். சங்கத்திற்காக கலை நிகழ்ச்சி நடத்தினால் அதில் உற்சாகமாக கலந்துக் கொள்கிறார்கள். ரூ.25 கோடி கடன் வாங்கியிருக்கோம், அதை உடனடியாக அடைக்க வேண்டும். அதற்காக நிச்சயமாக மிகப்பெரிய கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்த வேண்டும். அந்த நிகழ்ச்சிக்காக ரஜினி சார் பல யோசனைகள் சொல்லியிருக்கிறார். மேடையில் அவர் நடிப்பதாகவும் சொல்லியிருக்கிறார். அதேபோல், கமல் சாரும், ரஜினி சாரும் சேர்ந்து மேடையில் தோன்ற இருக்கிறார்கள். இதுபோன்ற நிகழ்ச்சிகளினால் எங்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்த லாபமும் இல்லை என்றாலும், சங்கத்திற்காக இதை செய்ய அனைவரும் தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த நேரத்தில் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கு நான் பலருக்கு நன்றி சொல்ல வேண்டும். கட்டிடம் கட்டும் போது ரூ.3 கோடி வட்டி இல்லாத கடன் கொடுத்த ஏ.சி.சண்முகம் சார், சத்யபாமா பல்கலைக்கழகத்தின் மரியா அவர்கள் மாதம் மாதம் ரூ.1 லட்சம் 10 ஆயிரம் கொடுக்கிறார், அதை வைத்து தான் கட்டிட ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கிறோம். ஐசரி கணேஷ் சார் ரூ.1 கோடி நன்கொடையாக கொடுத்தது இல்லாமல், ரூ.2 கோடி கடனாக கொடுத்தார். திரு.ஆல்பர்ட் அவர்கள் ரூ.50 லட்சம் கொடுத்தார். நம்ம ஆடிட்டர் திரு.ஸ்ரீராம் , அவர் இல்லை என்றால் எதுவும் நடந்திருக்காது. நம்பிக்கை கொடுத்த ஜெயந்தி மேடம், ஸ்ரீமன், எஸ்.பி.ஐ வங்கியின் மேளாளர், கடலோர கவிதைகள் ராஜா சார், அவர் கட்டிட துறையில் இருப்பதால் நமக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறார். கமல் சார், தனுஷ், விஜய் சார், நெப்போலியன் சார், உதயநிதி, சன் ஸ்டார் ஹோட்டல், திரு.செல்வகுமார் அவர்கள், காண்ட்ராக்டர் அனில் அவர்கள், நம்ம செயற்குழு உறுப்பினர்கள், சங்க அலுவலர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியம் மிகவும் குறைவு என்றாலும், அவர்கள் மிக கடுமையாக உழைக்கிறார்கள். கட்டிட பணி முடிந்த பிறகு அவர்களின் ஊதியம் உயர்த்தப்பட வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன். லதா அம்மா, ஹேமா, லலிதா, அப்பல்லோ மருத்துவமனை, டாக்டர் விஜய் சங்கர் இவங்க அனைவருக்கும் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்ம டீம் மிகப்பெரிய பலம் என்று சொல்வேன். ஒவ்வொருவரிடம் ஒரு பலம் இருக்கிறது. விஷால் வந்தால், ஒரே நாளில் அதிராடியாக எதாவது மாற்றத்தை செய்வார். நாசர் சார் நாடக நடிகர்கள், கலைஞர்கள் என்று ஓயாமல் சொல்லிக் கொண்டு இருப்பார். பூச்சி முருகன் சார், யார் என்றெல்லாம் பார்க்க மாட்டார், அனைவருக்கும் ஓடி ஓடி வேலை செய்வார். அவரை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கும். நான் இந்த பொறுப்புக்கு வருவதற்கு முன்பு, நடிகர் சங்கத்திற்கு வந்ததே இல்லை, ஆனால் இங்கு வந்து பார்த்த பிறகு தான் ஒவ்வொருவரும் தங்களது பணத்தையும், நேரத்தையும் சங்கத்திற்காக செலவு செய்வதை பார்த்தேன். சச்சு அம்மா, ஒவ்வொரு முறையும் போன் பண்ணி அப்பா கட்டிடம் வந்துடுமா? என்று கேட்பாங்க, அவங்க இதை அனுபவிக்க போவதில்லை, ஆனால் கட்டிடம் வந்தால் நம்ம உறுப்பினர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற எண்ணம், அதற்காக அவங்க உற்சாகத்தை கொடுப்பாங்க, அவங்க அனைவருக்கும் நன்றி. ஒரே டீமாக இருந்து இவ்வளவு பெரிய வேலையை செய்திருக்கிறோம். இதை வெற்றிகரமாக நாங்க செய்கிறோம் என்றால் அதற்கு நீங்கள் கொடுக்கும் ஆசீர்வாதமும், எங்கள் மீது நீங்க வைத்த நம்பிக்கை, அந்த நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக தொடர்ந்து உழைப்பேன். அடுத்த வரும் நிச்சயம் நமது புதிய கட்டிட திறப்பு விழாவில் உங்களை மீண்டும் சந்திப்பேன், என்று சொல்லிக்கொண்டு விடைபெறுகிறேன், நன்றி.” என்றவர், இந்த பொதுக்கூட்டத்தில் ஆண்டு அறிக்கைக்கும், கணக்குகளுக்கும் நீங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், என்றார், உடனே உறுப்பினர்கள் கை தட்டி ஒப்புதல் அளித்தனர்.

*தலைவர் நாசர் பேசுகையில்,*

“இங்கு நானும், விஷாலும் செய்ய வேண்டிய வேலையோடு, அவர் செய்ய வேண்டிய வேலைகளையும் சுமந்துக்கொண்டு கார்த்தி பயணிக்கிறார். அவருக்கு இந்த நேரத்தில் என் மனதில் இருந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுடைய மனதில் இருந்து உங்களுக்கு நன்றி. சர்வாதிகாரியாக இருப்பதில், பலனும் இருக்கும், பாதகமும் இருக்கும். அந்த குணத்தோட எங்களுக்கு கிடைத்த நிர்வாகி தான் பூச்சி முருகன். அவர், தலைவர், பொருளாளர், செயலாளர் என்பது எல்லாம் கிடையாது, அதுபோல் நாடக நடிகர்கள், திரைப்பட நடிகர்கள் என்று பாகுபாடு பார்க்காமல், அனைவருக்கும் எந்த நேரத்திலும், எந்த வேலையாக இருந்தாலும் செய்யக்கூடியவர். அவர் மூலம் பயன் அடைந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். நான் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் சங்கத்திற்கு வருவேன், விஷால் உள்ளிட்ட பலர் படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் இங்கு வருவார்கள். ஆனால், பூச்சி முருகன் மட்டும் சென்னையில் இருக்கும் அனைத்து நாட்களிலும் ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேரம் சங்கத்திற்காக ஒதுக்கியிருக்கிறார், அதற்கு அவருக்கு நன்றி. இப்போது நடிகர் சங்கத்திற்கும், தயாரிப்பாளர் சங்கத்திற்கும் ஊழியர்களின் நலனுக்காக பேச்சுவார்த்தை நடந்துக் கொண்டிருக்கின்றன, அதில் குரல் கொடுத்த கருணாஸ் அவர்களுக்கு எனது நன்றி. விஷால், நீ விதைத்தாய், நாங்கள் எல்லோரும் முளைத்திருக்கிறோம், என்பது தான் உண்மை. அதேபோல், என்னுடன் சேர்ந்து பயணிக்கும் செயற்குழு உறுப்பினர்கள், நியமன குழு உறுப்பினர்கள், அவர்கள் எந்த அளவுக்கு பணியாற்றுகிறார்கள், என்பதை வெளிப்படையாக சொன்னால், இந்த சங்கத்திற்கு தலைவரே தேவையில்லை என்று என்னை வெளியே அனுப்பிடுவாங்க. அந்த அளவுக்கு என்னை குழந்தை போல் பார்த்துக்கொண்டு, எனது பணிகளை அவர்களது பணியாக செய்கிறார்கள், அவர்களுக்கு நன்றி. அவர்களுக்கு மட்டும் அல்ல உங்களுக்கும் நன்றி.

இங்கு நான் பல விசயங்களை பேச வேண்டும் என்று நினைக்கிறேன். முத்துக்காளை, டில்லி கணேஷ், காத்தாடி ராமமூர்த்தி உள்ளிட்ட பலருக்கு மரியாதை செய்தோம். அப்போது வயது குறைவாக இருக்கும் முத்துக்காளைக்கு ஏன்? என்ற விவாதம் நடந்தது. அதற்கு காரணம், அவர் ஒரு முன் உதாரணமாக இருக்கிறார். நாடக நடிகர்கள் சீசன் இருக்கும் போது சம்பாதிக்கும் பணத்தை மிச்சம் பிடித்து சீசன் இல்லாத நாட்களை ஓட்டி விடுவார்கள். ஆனால், திரைப்பட நடிகர்கள் அப்படி அல்ல, அவர்களுக்கு என்று ஒரு இடம் கிடைக்கும் வரை நரக வேதனை தான். அப்படிப்பட்ட சூழலில் நடிகர் முத்துக்காளை மதுப்பழக்கத்திற்கு ஆளாகி, பிறகு அதற்கு அடிமையாகி விட்டார். அடுத்தக்கட்டம் முடிவு தான் என்ற நிலையில், அவர் புரணமைப்பு மையம் ஒன்றின் மூலம் அந்த பழகத்தில் இருந்து வெளியே வந்துவிட்டார். ஆனால், அதற்காக அவருக்கு மரியாதை செய்யவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் தனது மனமாற்றத்திற்காக படித்து மூன்று பட்டம் பெற்றிருக்கிறார். அவர் நடிகர்களுக்கு மட்டும் அல்ல ஒவ்வொரு மனிதருக்கும் முன் உதாரணமாக இருக்கிறார், அதற்காக அவருக்கு என் வாழ்த்துகளும், நன்றியும்.

செயற்குழு கூட்டத்திற்கு திரைப்பட நடிகர்கள் வருவதில்லை, நாடக நடிகர்கள் தான் வருகிறார்கள் உள்ளிட்ட பலவற்றை குறையாக சொல்கிறார்கள். நடிகர்கள் நிகழ்ச்சிகளில் வராமல் போவதற்கு காரணம், அவர்கள் வெளியூர்களில் படப்பிடிப்பில் இருப்பதால் வந்து போக முடியாது. அவர்கள் வராததற்கான காரணத்தை பற்றி பேசவதற்கு நேரமோ, அவசியமோ இல்லை. ஆனால், அவர்கள் வரவில்லை என்றாலும் சங்கத்தில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துக் கொள்வதோடு, சங்கத்திற்காக நிதி திரட்ட நடைபெறும் கலை நிகழ்ச்சியில் முதல் ஆளாக நிற்பவர்களும் அவர்கள் தான். இன்று கட்டப்படும் கட்டிடத்தின் ஒவ்வொரு சதுர அடிக்கும் அவர்கள் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். வங்கியில் ரூ.11.50 கோடி கட்ட வேண்டும் என்று சொன்ன போது, கார்த்தி அதிர்ச்சியடைந்து விட்டார். ஆனால், அது பற்றி என்னிடம் சொல்லிவிட்டு, நீங்க டென்ஷன் ஆகாதீங்க, இரண்டு நாள் விடுவோம், பிறகு அதைப்பற்றி பேசுவோம் என்று கூறிவிட்டு, பெரும்பாலான நடிகர்களை அவர் தான் சந்தித்து பேசினார். அவரது முயற்சி, மற்றும் நடிகர்களின் பங்களிப்பு ஆகியவற்றால் இன்று கட்டிடம் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆக, அவர்களின் வருகை முக்கியமா அல்லது அவர்களின் உழைப்பு மற்றும் அவர்கள் மூலம் கிடைக்கும் பலன் முக்கியமா, என்பதை யோசிக்க வேண்டும். அவர்கள் வரவில்லை என்றாலும், சங்கத்தில் என்ன நடக்கிறது என்பதை பூச்சி முருகனிடம் கேட்டு அறிந்துக்கொள்கிறார்கள், அவர்களின் சங்கம் இது, அவர்களுக்கு அக்கறை இருக்கிறது. எனவே பொதுக்குழு, செயற்குழுவில் அவர்கள் பங்கேற்கவில்லை என்பதை குறையாக சொல்ல வேண்டாம் என்பது எனது வேண்டுகோள். இன்று நடக்கும் பொதுக்குழுவில் முக்கியமாக நன்றி சொல்ல வேண்டும் என்றால் அது யோகி பாபவுக்கு தான். இன்று நம் மூத்தவர்களுக்கு செய்த மரியாதை மற்றும் அவர்களுக்கு கொடுத்த தங்கம் மற்றும் பரிசு பொருளுக்கு அவர் தான் காரணம், செலவு அனைத்தையும் அவர் தான் கொடுத்தார், அவருக்கு நன்றிகள். தம்பி வருவதாக இருந்தது, ஆனால் அவரால் வர முடியவில்லை.

ரோஹிணி அவர்கள் பேசும் போது நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை குறித்து பேசினார். இதுபோன்ற பிரச்சனைகள் நமது துறையில் மட்டும் இல்லை, மருத்துவம், கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இருக்கிறது. ஆனால், திரை துறையில் இருப்பவர்களை பற்றி பேசினால், அது மற்றவர்களிடம் எளிதில் சென்றடையும் என்பதால், நம்மை மிக இழிவாக நடத்துகிறார்கள். ஆனால், இனி நாங்கள் அமைதியாக இருக்கப் போவதில்லை. அதற்காக யாரிடமும் சண்டை போட மாட்டோம். எங்கள் உரிமையை விட்டுக்கொடுக்காமல் நடவடிக்கை எடுப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மீ2 பிரச்சினை வந்த போதே நாங்கள் ‘விசாகா’ என்ற கமிட்டியை அமைத்தோம். அதன் மூலம் பலரது பிரச்சனைகளை தீர்த்தும் வைத்தோம். ஆனால், இது போன்ற பிரச்சனைகளில் புகார் அளித்தவரின் பெயர்களை வெளியிட கூடாது என்பது அடிப்படை சட்டம் என்பதால் அதை சொல்ல வில்லை. இப்போது இந்த பிரச்சனை தீவிரமடைந்திருப்பதால் நாங்கள் GSICC என்ற கமிட்டியை அமைத்திருக்கிறோம். நம் உறுப்பினர்களுக்கு எதாவது பிரச்சனை ஏற்பட்டால், இந்த கமிட்டியில் புகார் தெரிவிக்கலாம். நிச்சயம் உங்களுடைய பிரச்சனைக்கு இதன் மூலம் தீர்வு காண்போம், என்று இந்த கமிட்டியின் தலைவர் ரோஹினி அவர்களின் சார்பில் நானும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களுடன் பயணிப்பதில், பயணித்துக் கொண்டிருப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். இன்றைய தீர்மானம் எதிர்பார்க்காதது, மீண்டும் இதே நிர்வாகம் தான் வேண்டும், என்று நீங்க சொல்லிவிட்டீர்கள், அதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை, அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம். ஆனால், இந்த முறை நிச்சயம் நமது கட்டிட பணி முடிவடைந்துவிடும். பல இன்னல்களை, சோதனைகளை கடந்து வந்தாலும், இந்த முறை நம் கட்டிட பணி நிச்சயம் முடிந்து விடும் என்பதை சொல்லிக் கொள்கிறேன். இந்த சோதனைகள் அனைத்தும் என்னை உறுதிப்படுத்திக் கொள்ளக்கூடிய ஒரு செயல் என்று நாங்கள் ஏற்றுக்கொண்டோம், அதேபோல் எனக்கு தைரியம் கொடுத்து, உற்சாகம் கொடுத்து என்னை பணியாற்ற வைத்த என் குழுவினருக்கு நன்றி. இந்த நிகழ்ச்சி நடைபெற ஒத்துழைப்பு கொடுத்த காவல்துறை, அலுவலக ஊழியர்கள் என அனைவருக்கும் நன்றிகள்.

நடிகர் சங்கம் ஏறக்குறைய 24 மணி நேரம் இயங்குகிறது. எங்களிடம் திட்டு வாங்கிக் கொண்டு, உறுப்பினர்களிடமும் திட்டு வாங்கிக்கொண்டு, அனைத்தையும் ஏற்று சிறப்பாக வேலை செய்துக் கொண்டிருக்கும் சங்க ஊழியர்களுக்கு மிகப்பெரிய நன்றி.”
சம்பளம் வாங்காமல் பணிபுரிந்து வரும் PRO ஜான்சன் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றி, என்றார்.

 

Share.

Comments are closed.