![]()
நடிகர்கள் – சூர்யா, பாலகிருஷ்ணா, பரேஷ் ராவல், அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஊர்வசி, பூ ராமு, மற்றும் பலர்.
இசை – ஜிவி. பிரகாஷ்
ஒளிப்பதிவு – நிகேஷ்
இயக்கம் – சுதா கொங்கரா
தயாரிப்பாளர் – சூர்யா
வாழ்க்கை வரலாறுகளை நல்ல திரைப்படமாக மாற்றுவதற்கு சரியான உதாரணமாக அமைந்திருப்பது சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘சூரரைப் போற்று’.
குறைந்த கட்டணத்தில் எளியோருக்கும் விமானப் பயணம் சாத்தியமாக வேண்டும் என்று போராடி டெக்கான் ஏர்லைன்ஸ் துவக்கி வெற்றி பெற்ற கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு அருமையான திரைக்கதையில் அழுத்தமான படமாகத் தந்திருக்கும் இயக்குநர் சுதாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
ஜேம்ஸ் பாண்ட் 007 படங்களின் துவக்க காட்சியே க்ளைமாக்ஸ் காட்சிபோல் பரபரப்பாக இருக்கும். அப்படி ஒரு பரபரப்பான காட்சியுடன்தான் ‘சூரரைப் போற்று’ படமும் துவங்குகிறது.
விமானப்படையில் விமானியாக பணியாற்றும் சூர்யா, அந்த வேலையை விட்டுவிட்டு, குறைந்த விலையில் விமான பயண சேவை வழங்கும், நிறுவனம் ஒன்றை தொடங்கும் திட்டத்தில் இறங்குகிறார். மலிவான விலையில் விமான சேவை வழங்கி, சாதாரண மக்களுக்கும் விமான பயணத்தை சாத்தியமாகி, அதன் மூலம் நிறுவனம் லாபமும் பெறுவதற்கான சிறந்த திட்டம் ஒன்றை தயாரித்து வைத்திருக்கிறார்.
மூலதனத்திற்காக வென்ச்சர் கேபிட்டல் நிறுவனங்களிடம் முயற்சிக்க, சூர்யாவின் திட்டத்தால் தங்களுக்கு பெரிய இழப்பீடு வரும் என்று எண்ணி, முன்னணி விமான சேவை நிறுவனங்கள் அவரது முயற்சிக்கு முட்டுக்கட்டை போடுவதோடு, அரசு மூலமாகவும் அவருக்கு பல தடைகளை ஏற்படுத்துகின்றனர். அவை அனைத்தையும் எப்படி முறியடித்து, குறைந்த கட்டண விமான சேவையை சூர்யா வெற்றிகரமாக தொடங்குகிறார் என்பது தான் படத்தின் கதை.
ஒரு நல்ல நடிகர் இயக்குநரிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்து விட்டால் எப்படி ஒரு தரமான படம் உருவாகும் என்பதற்கும் ‘சூரரைப் போற்று’ படத்தை உதாரணமாகச் சொல்லலாம். சூர்யாவுக்கு ஈடு கொடுத்து அற்புதமாக நடித்திருக்கிறார் அபர்ணா பாலமுரளி. அவருக்கென அளவெடுத்து தைத்த ஜாக்கெட்போல் அவ்வளவு அழகாகப் பொருந்துகிறது பொம்மி பாத்திரம்.
குரலை உயர்த்தாமல் கர்ஜிக்காமல் கார்ப்ரேட் வில்லன் வேலையை கனகச்சிதமாக செய்திருக்கிறார் பரேஷ் ராவல். கருணாஸ், காளி வெங்கட், பூ ராமு, ஊர்வசி ஆகியோருக்கும் நினைவில் நிற்கும்படியான அருமையான வேடங்கள். ஒரு நல்ல படத்தில் துணை வேடங்களில் நடிப்பவர்களும் மனதில் பதிவது அரிதான ஒன்றல்ல என்றாலும், இந்தப் படத்தில் வரும் பெரும்பாலான சிறிய பாத்திரங்களும் நம் நெஞ்சில் நிறைவது சிறப்பு.
படத்திற்கு மிகப் பெரிய பலமாக அமைந்திருப்பது நட்சத்திரங்கள் மட்டுமல்ல தொழில் நுட்பக் கலைஞர்களும்தான். சோழவந்தானின் கிராமமாகட்டும், விமான ஓடுபாதையாகட்டும் கதைக்கும் காட்சிக்கும் என்ன தேவையோ அதை எப்படி காட்ட வேண்டுமோ அந்த அளவில் மிகச் சரியாக செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் நிக்கேத் பொம்மிரெட்டி.
ஜி.வி.பிரகாஷின் கடுமையான உழைப்பு பின்னணி இசையில் நன்கு பிரதிபலிக்கிறது. “காட்டுப் பயலே…” பாடல் முணுமுணுக்க வைக்கிறது. பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும் ரசிக்கும் விதத்தில் இருக்கிறது. சினிமாத்தனமான ஆட்டங்கள் இன்றி வித்தியாசமான முறையில் பாடல்கள் அமைக்கப்பட்டிருப்பதும் சிறப்பாக அமைந்திருக்கிறது.
சூர்யா விமான நிறுவனம் துவங்க கிராமத்தில் உள்ள முதியவர்களில் ஆரம்பித்து சிறுவர்கள்வரை 500, 1000 என்று முதலீடு தருவது நம்பும்படியாக இல்லை. இதுபோன்ற காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.
இளம் தொழி்ல் முனைவோர் மட்டுமின்றி எல்லோரிடமும் நம்பிக்கை நாற்றுகளை விதைக்கும் சூரரைப் போற்று மத்திய அரசில் துவங்கி பல்வேறு அமைப்புகளிடமும் 2020ஆம் ஆண்டின் சிறந்த படம் என விருதுகளைப் பெறப்போகும் படம். ரேட்டிங் 4/5

