Wednesday, June 17

‘திரிஷ்யம் 3’ படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு!

Loading


திரிஷ்யம் 3′ தெலுங்கு உரிமை: சென்னை உயர் நீதிமன்றத்தை நாடிய ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்!

மோகன்லால், மீனா உள்ளிட்டோர் நடித்து, ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘திரிஷ்யம் 3’ மலையாளத் திரைப்படத்தின் பிரத்யேக தெலுங்கு உரிமைகளின் முழு மற்றும் ஒரே உரிமையாளரான, ஸ்ரீப்ரியா சேதுபதி மற்றும் ராஜ்குமார் சேதுபதி தலைமையிலான ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தனது அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாப்பதற்காக சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தின் தெலுங்கு உரிமைகளின் மீதான தனது பிரத்யேக உரிமையை உறுதிப்படுத்தும் வகையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது.

இந்த மனுவில், ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனத்தின் எம்.ஜே. ஆண்டனி, இயக்குநர் ஜீத்து ஜோசப், பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் பென் ஸ்டுடியோஸ் ஆகியோரோ அல்லது அவர்களின் முகவர்கள், ஊழியர்கள், உரிமை பெற்றவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களோ, ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தை தெலுங்கு மொழியில் உலகெங்கிலும் எந்த முறையிலும் மறுஆக்கம் செய்யவோ, தயாரிக்கவோ அல்லது வெளியிடவோ கூடாது என்றும், ராஜ்குமார் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் பிரத்யேக பதிப்புரிமையை (Copyright) மீறுவதைத் தடுக்கும் வகையிலும் நிரந்தரத் தடை உத்தரவு (Permanent Injunction) கோரப்பட்டுள்ளது.

இவ்வழக்கு மே 20, 2026 அன்று விசாரணைக்கு வந்தது. ராஜ்குமார் தியேட்டர்ஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞmர் கே. ரவி ஆஜராகி நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்தார். வாதங்களைக் கேட்டறிந்த சென்னை உயர் நீதிமன்றம், எதிர்மனுதாரர்கள் அனைவருக்கும் 3 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

“இந்த சட்ட நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு, எந்தவொரு நபரோ, நிறுவனமோ, தயாரிப்பாளரோ, விநியோகஸ்தரோ, திரையரங்க உரிமையாளரோ, ஓடிடி (OTT) தளங்களோ, அல்லது வேறு தரப்பினரோ ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தின் தெலுங்கு படைப்பாக்க உரிமைகள் அல்லது தெலுங்கு மொழி வெளியீட்டு உரிமைகள் தொடர்பாக ஏதேனும் ஒப்பந்தம், உடன்படிக்கை அல்லது வணிக ரீதியான புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொண்டால், அது முற்றிலும் அவர்களின் சொந்தப் பொறுப்பிலேயே (At their own risk) அமையும். மேலும், அத்தகைய ஒப்பந்தங்கள் அனைத்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டதாகவே இருக்கும்,” என்று ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் தெரிவித்துள்ளது.

***