பொன்னியின் செல்வன் 1 – திரைப்பட விமர்சனம்
பல ஆண்டுகளுக்கு முன்பே படித்து மகிழ்ந்த கதை..
இப்போது பார்த்து மகிழ திரையில் மலர்ந்திருக்கிறது.
பொன்னியின் செல்வன் கதையை படித்து ரசித்தவர்களும்,
படிக்காமல் விட்டவர்களுக்கும் பிடிக்கும்படி இந்த செலுலாயிட் கவிதையை செதுக்கியதுதான் மணிரத்னம் செய்திருக்கும் மேஜிக்.
சோழப் பேரரசர் சுந்தர சோழனின் மகன்கள் ஆதித்த கரிகாலன் மற்றும் அருண்மொழி வர்மன் இருவரும் இருவேறு போர் முனையில் இருக்க, அவருக்கு எதிராக சிலர் சதித்திட்டம் தீட்டுகின்றனர்.
சிற்றரசர்களை சோழ மாமன்னுக்கு எதிராக திசை திருப்பி, அப்போதைய இளவரசர் ஆதித்த கரிகாலனுக்கு முடி சூடாமல் மதுராந்தககனை அரசராக்க திட்டமிடுகிறார் பெரிய பழுவேட்டரையர்.
தந்தைக்கு எதிராக ஏதோ சதி நடக்கிறது என்பதை அறிந்த ஆதித்த கரிகாலன்,இது குறித்து செய்திகளை அறிந்து அதை சோழ மன்னரிடம் தெரிவிக்க தனக்கு நெருக்கமான வந்தியத் தேவனை அனுப்பி வைக்கிறார்.
...
