பொன்னியின் செல்வன் 1 – திரைப்பட விமர்சனம்

0

 149 total views,  2 views today

 

பல ஆண்டுகளுக்கு முன்பே படித்து மகிழ்ந்த கதை..
இப்போது பார்த்து மகிழ திரையில் மலர்ந்திருக்கிறது.
பொன்னியின் செல்வன் கதையை படித்து ரசித்தவர்களும்,
படிக்காமல் விட்டவர்களுக்கும் பிடிக்கும்படி இந்த செலுலாயிட் கவிதையை செதுக்கியதுதான் மணிரத்னம் செய்திருக்கும் மேஜிக்.

சோழப் பேரரசர் சுந்தர சோழனின் மகன்கள் ஆதித்த கரிகாலன் மற்றும் அருண்மொழி வர்மன் இருவரும் இருவேறு போர் முனையில் இருக்க, அவருக்கு எதிராக சிலர் சதித்திட்டம் தீட்டுகின்றனர்.

சிற்றரசர்களை சோழ மாமன்னுக்கு எதிராக திசை திருப்பி, அப்போதைய இளவரசர் ஆதித்த கரிகாலனுக்கு முடி சூடாமல் மதுராந்தககனை அரசராக்க திட்டமிடுகிறார் பெரிய பழுவேட்டரையர்.

தந்தைக்கு எதிராக ஏதோ சதி நடக்கிறது என்பதை அறிந்த ஆதித்த கரிகாலன்,இது குறித்து செய்திகளை அறிந்து அதை சோழ மன்னரிடம் தெரிவிக்க தனக்கு நெருக்கமான வந்தியத் தேவனை அனுப்பி வைக்கிறார்.

வந்தியத் தேவன் ஒற்றன் என்பதை அறிந்த பழுவேட்டரையர் அவனை சிறை பிடிக்க முயல்கிறார். ஆயினும் சிக்காமல் தப்பிக்கும் வந்தியத் தேவன் சுந்தர சோழனின் மகள் குந்தவையை சந்திக்கிறான்.

வந்தியத் தேவன் யார் என்பதை உணர்ந்து, நிலைமைகளைப் புரிந்து கொண்ட குந்தவை, இலங்கையில் இருக்கும் தன் சகோதரன் பொன்னியின் செல்வன் என புகழப்படும் அருண்மொழி வர்மனை பத்திரமாக இங்கே அழைத்துக் கொண்டு வரவேண்டும் என்ற பொறுப்பை ஒப்படைக்கிறாள்.

படகுப் பெண் சமுத்திர ராணி படகை செலுத்த வந்தியத் தேவன் இலங்கை செல்கிறான். இதற்கிடையில் சதிகாரர்கள் நயவஞ்சகமாகத் திட்டம் தீட்டி, இலங்கையில் உள்ள அருண்மொழி வர்மனை கைது செய்து தஞ்சைக்கு அழைத்துவர சக்கரவர்த்தி சுந்தர சோழனின் உத்தரவையும் பெற்று விடுகின்றனர்.

இலங்கை சென்ற வந்தியத் தேவன், எந்த சிக்கலுமின்றி பொன்னியின் செல்வனை சஞ்சைக்கு அழைத்து வந்தானா… சதிகாரர்களின் திட்டம் என்னவாயிற்று என்பதையெல்லாம் விறுவிறுப்பான திரைக்கதை மூலம் சொல்கிறார் இயக்குநர் மணி ரத்னம்.

பொன்னியின் செல்வன் படத்தின் மகத்தான வெற்றிக்கு முழு முதற்காரணமாக பொருத்தமான நட்சத்திர தேர்வு என்று தாராளமாகச் சொல்லலாம்.

பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலன் நடை உடை பாவனைகள் இப்படித்தான் இருந்திருக்கும் என நம்மை நம்ப வைக்கும் விதத்தில் நயமான நடிப்பை நல்கியிருக்கிறார் விக்ரம்.

அருண்மொழி வர்மன் வேடம் ஏற்றிருக்கும் ஜெயம் ரவியும் பாத்திரத்தை உணர்ந்து மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். தந்தை உத்தரவாயினும் அரசாணை என்றாலும் அதை என்னால் மீற முடியாது என்று சொல்லும் இடத்தில் சோபிக்கிறார்.

படத்தையே மிகவும் கலகலப்பாக கொண்டு செல்வது கார்த்தி ஏற்றிருக்கும் வந்தியத் தேவன் வேடம்தான். சும்மா சொல்லக்கூடாது…..ஊதித் தள்ளிவிட்டிருக்கிறார்.

சோழ குலத்தை பழி வாங்கும் நோக்கத்துடன் இருந்தாலும், தன் சொல், செயல் எதிலும் அது தெரியாதபடி தேர்ந்த நடிப்பு மூலம் அந்த வேடத்திற்கு நியாயம் செய்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.

முதிர்கன்னி வேடத்துக்கு முற்றிலும் பொருத்தமானவர் த்ரிஷா எனபதை சொல்லவும் வேண்டுமோ?

பாடல்கள் இசை இரண்டிலுமே பின்னி எடுத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். பொன்னியின் செல்வன் படப் பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது. அனைத்தும் அவ்வளவு இனிமையாகவும் வெரைட்டியாகவும் இருக்கின்றன.
நிஜம் எது நிர்மாணிக்கப்பட் அரங்கு எது என்று தெரியாததே கலை இயக்குநர் தோட்டா தரணியின் கைவண்ணம்.

சோழர் காலத்தில் நாம் வாழ்ந்த உணர்வைத் தருகிறது ரவிவர்மனின் ஒளிப்பதிவு. ஒளிப்பதிவாளரும் கலை இயக்குநரும் கை கோர்த்து இயக்குர் மணி ரத்னத்துக்கு துணை நின்று படத்தின் வெற்றிக்கு உதவியிருக்கிறார்கள்.

கண்டிப்பாக ஒவ்வொருவரும் காணவேண்டிய திரைப்படம் பொன்னியின் செல்வன்.
மதிப்பெண் 4.5/ 5

Share.

Comments are closed.