Friday, November 28

தீயவர் குலை நடுங்க_ விமர்சனம்

Loading

தீயவர் குலை நடுங்க _ விமர்சனம்

காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்த எழுத்தாளர் ஒருவர், முகமூடி அணிந்த மர்ம மனிதனால் கொலை செய்யப்படுகிறார்.

காவல்துறை அதிகாரி அர்ஜுன் இது குறித்து புலன் விசாரணையை தொடங்குகிறார்.

தூங்கும் போது குறட்டை வருவதை தெரப்பி மூலம் கட்டுப்படுத்தும் பணியை செய்து வரும் பிரவீன் ராஜாவை திருமணத் தகவல் மையம் ஒன்றின் மூலம் தொடர்பு கொள்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை அன்போடு கவனித்துக் கொள்ளும் பணியை செய்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், பிரவீன் ராஜாவை திருமணம் செய்து கொள்ளும் முடிவுடன் அவருடன் பழக ஆரம்பிக்கிறார்.

கொலையுண்ட எழுத்தாளருக்கும் தொழிலதிபர் ராம்குமாருக்கும் நட்பு இருப்பது போலீஸ் அதிகாரி அர்ஜுனுக்கு பெரிய வருகிறது.

தொழிலதிபர் ராம்குமாரை விசாரிக்க அர்ஜுனின் உயர் அதிகாரி தடை போடுகிறார்.

இந்த நிலையில் அர்ஜுனை தனியாக கடற்கரையில் சந்தித்து சில விவரங்களை சொல்ல ராம்குமார் வரும்போது, அவரும் கொலை செய்யப்படுகிறார்.

எழுத்தாளரை கொன்றவர்கள்தான் ராம்குமாரையும் கொன்றார்களா?

இந்த இரண்டு கொலைகளுக்கும் இருக்கும் தொடர்பு என்ன? என்பதுதான் தீயவர் குலை நடுங்க திரைப்படம்.

காவல்துறை அதிகாரி வேடத்திற்கு கனகச்சிதமாக பொருந்தி போகிறார் அர்ஜுன்.

அவரது மிடுக்கான தோற்றமும், உடல் மொழியும் அவர் ஏற்ற பாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கின்றன.

கனிவான பார்வை, இதமான பேச்சு என ஆட்டிசம் குழந்தைகளிடம் அன்பு காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ் அப்படியே மற்றொரு அவதாரம் எடுத்தது போல் ஆக்ஷன் காட்சிகளில் ஆக்ரோஷம் காட்டி கவனம் ஈர்க்கிறார்.

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியாக நடித்திருக்கும் அனிதாவின் நடிப்பு மனதைத் தொடுகிறது.

மற்றும் வேலராமமூர்த்தி, ஓ ஏ கே சுந்தர், பி எல் தேனப்பன், அபிராமி போன்றவர்கள் சிறிய வேடங்களில் வந்தாலும் கதை ஓட்டத்திற்கு முக்கியமாக இருப்பதால் நினைவில் நிற்கிறார்கள்.

நகைச்சுவை என்ற பெயரில் பிராங்க் ஸ்டார் ராகுல் செய்யும் அறுவைகளைதான் தாங்க முடியவில்லை.

சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு படத்துக்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது.

லாரன்ஸ் கிஷோரின் படத்தொகுப்பு படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்ல வெகுவாக உதவி இருக்கிறது.

படத்தின் கதையை எழுதி இயக்கி இருக்கும் தினேஷ் வெறும் சஸ்பென்ஸ் திரில்லராக மட்டும் படத்தை கொடுக்காமல் இந்த காலகட்டத்திற்கு தேவையான ஒரு விழிப்புணர்வையும் சேர்த்து கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

படத்தின் இடைவேளை காட்சியை பிரமாதமாக வடிவமைத்திருப்பதுடன் அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துவது போல் அமைத்திருக்கிறார் இயக்குனர்.

சமுதாயத்துக்கு தேவையான கருத்தை சொல்லும் இந்த சஸ்பென்ஸ் திரில்லரை அனைவரும் கண்டு ரசிக்கலாம்.

மதிப்பெண் 3.5/5