வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி – சூரி நடிக்கும் விடுதலை !

0

 169 total views,  1 views today

இயக்குனர் வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. விண்ணைத்தாண்டி வருவாயா, கோ, யாமிருக்க பயமே போன்ற உள்ளடக்கத்தில் சிறந்த பிளாக்பஸ்டர் படங்களைத் தந்த RS Infotainment Pvt Ltd சார்பில் திரு. எல்ட்ரெட் குமாரால் தயாரிக்கப்படும், ‘விடுதலை’ திரைப்படம், இந்திய மொழிகளில் வெளியாக தயாராகி வருகிறது. உலக தரத்தில் இணையற்ற படைப்புகளை உருவாக்குவதில் மிகவும் பிரபலமான திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் இத்திரைப்படத்தின் மீது ரசிகர்களின் கவனம் குவிய, முக்கிய காரணமாக விளங்குகிறார். விடுதலை படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் மேலும் பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், சேத்தன் மற்றும் மிகவும் பிரபலமான நம்பிக்கைக்குரிய பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

மேஸ்ட்ரோ இளையராஜா இந்த படத்திற்கு இசையமைப்பது இத்திரைப்படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் மற்றும் கலை இயக்குனர் ஜாக்கி இந்த படத்தினை இன்னும் அழகுபடுத்தியுள்ளனர். இந்த படத்தின் முதல் ஷெட்யூல் சத்தியமங்கலம் கடம்பூரில் உள்ள அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டது, அதன் பிறகு இரண்டாவது ஷெட்யூல் செங்கல்பட்டிலும், மூன்றாவது ஷெட்யூல் சிறுமலையில் என முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. தற்போது, திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையில் 50 நாட்கள் ஒரே கட்டமாக நான்காவது ஷெட்யூல் படப்பிடிப்பில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது, அங்கு விஜய் சேதுபதி 30 நாட்கள் தொடர்ந்து தனது முழு பகுதிக்கான படப்பிடிப்பை முடித்தார். சூரி மற்றும் பிற நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஜூன் 10 ஆம் தேதிக்குள் முடிவடையும்.

கலை இயக்குனர் ஜாக்கி சிறுமலையின் மேலே மலைகளில் ஒரு பெரிய கிராமப்புற செட்டை அமைத்திருப்பது மிகவும் சுவாரஸ்யமான அம்சமாகும், மிக தத்ரூபமாக ஒரிஜினல் கிராமம் போலவே செட் அமைக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி பங்கேற்கும் முக்கிய அதிரடி சண்டைக்காட்சிகளில் ஒன்று இங்கு படமாக்கப்பட்டது. இதில் சுவாரசியம் என்னவென்றால் இந்த சண்டைக்காட்சியில் விஜய் சேதுபதி டூப் இல்லாமல் தானே நேரடியாக நடித்தார்.

கடந்த 50 நாட்களாக இப்படத்தினை சார்ந்த 450 படக்குழுவினர் சிறுமலை மலைப்பகுதியில் தங்கியுள்ளனர். விஷப்பாம்புகள், காட்டெருமைகள், காட்டு நாய்கள் மற்றும் பூச்சிகளை கடந்து டீம் உறுப்பினர்கள் வனப்பகுதிக்குள் தொலைதூர இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதால், படப்பிடிப்பின் போது, ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் மருத்துவ உதவியை வழங்க வேண்டும் என்பதற்காக 24×7 மருத்துவருடன் கூடிய ஆம்புலன்ஸ் அங்கு இருப்பதை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த 4 ஆம் கட்ட படப்பிடிப்பில் 3 முக்கிய அதிரடி காட்சிகள் மற்றும் ஒன்றிரண்டு பாடல்கள் படமாக்கப்பட்டது.

படப்பிடிப்புகள் முடியும் சமயதில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

Share.

Comments are closed.