ரசிகர்களை இருக்கையிலே இறுகப்பற்றி உட்கார வைக்கும் ‘இறுகப்பற்று’!- ஒளிப்பதிவாளர் கோகுல் பேட்டி!
திறமையான படைப்பாற்றல் கொண்ட இயக்குனர்களை வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களுடன் படங்களை தயாரித்து வரும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘இறுகப்பற்று’.
வடிவேலு நடித்த தெனாலிராமன், எலி ஆகிய படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்ணதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் சிஷ்யரான இவர், பண்ணையாரும் பத்மினியும் படத்தில் துவங்கி சமீபத்தில் வெளியான பர்ஹானா வரை பல வெற்றிப் படங்களில் தனது பங்களிப்பை கொடுத்துள்ளார். குறிப்பாக ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ், பொட்டன்ஷியல் ஸ்டுடியோ தயாரிக்கும் படங்களில் பணியாற்றி வரும் கோகுல் பினாய் #இறுகப்பற்று படத்தில் பணிபுரிந்த அனுபவம் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் கோகுல் பினாய்.
“பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் படங்களில் தொடர்ந்து பணியாற்றி வருவதால் இறுகப்பற்று படத்திற்கும் ஒளிப்பதிவாளராக வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் யுவராஜ் தயாளனும் நானும் இணைந்து பணியாற்றுவது இதுதான் முதல் முறை என்றாலும் அவருடன் படப்பிடிப்பிற்கு முன்னதாக சேர்ந்து பயணித்த அந்த இரண்டு மாதங்களில் ஒரு இயக்குநராக அவர் என்ன விரும்புகிறார் என்பதை உணர்ந்து கொண்டு மொத்த படத்திலும் அதை வெளிப்படுத்தி இருக்கிறேன்.
அவரின் முந்தைய இரண்டு படங்களுடன் ஒப்பிடும்போது, இறுகப்பற்று படத்திற்காக இப்படி ஒரு கதையை உருவாக்கி இருக்கிறார் என்பதை நினைத்து உண்மையிலேயே ஆச்சரியப்பட்டு போனேன். யுவராஜை பொறுத்தவரை இந்த கதையைத் தான் தனது முதல் படமாக இயக்க வேண்டும் என நினைத்து வைத்திருந்தார். சில சூழல்களால் வேறு படங்களை இயக்கும்படியாக ஆகிவிட்டது. இனி அடுத்து வரும் படங்களில் விதவிதமான கதை அமைப்பில் தான் அவரது படம் இருக்கும் என உறுதியாக சொல்லலாம்.
படப்பிடிப்பின்போது ஒவ்வொரு காட்சியையும் யுவராஜ் நடித்து காட்டுவார். இதுவரை நான் பணியாற்றிய படங்களில் இருந்து இது வித்தியாசமாக இருந்தது. சில நேரங்களில் இங்கே காட்சி படமாக்கி கொண்டிருக்கும்போது மானிட்டரின் பக்கத்திலிருந்து அழுகை சத்தம் கேட்கும்.. பார்த்தால் யுவராஜ் தயாளனும் அந்த காட்சியை பார்த்தபடி கண்கலங்கி கொண்டு இருப்பார். அந்த அளவிற்கு இந்த கதாபாத்திரங்களை அவர் வடிவமைத்துள்ளார்
அவர் மட்டுமல்ல படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவருமே இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களை பார்க்கும்போது, அதில் ஏதோ ஒருவராகவே தங்களை தொடர்புபடுத்திக் கொள்வார்கள். இன்னும் சொல்லப்போனால் படத்தில் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ என மூன்று கதாபாத்திரங்கள் இருந்தாலும் கூட படம் பார்க்கும் ரசிகர் படம் பார்க்கும் ரசிகர் அவர்களின் ஒவ்வொருவரின் குணாதிசயங்களையும் தாங்கள் ஒவ்வொரு காலகட்டத்தில் பிரதிபலித்து இருப்பதையும் உணர்வார்கள்.
குறிப்பாக படம் பார்க்கும் தம்பதியினர் நிச்சயமாக ஏதோ ஒரு இடத்தில் கண் கலங்குவார்கள். எடிட்டிங் சமயத்தில் படம் பார்த்தபோது என்னுடன் அமர்ந்திருந்த புதிதாக திருமணமான என் உதவியாளர் சில காட்சிகளில் கண்ணீரை அடக்க முடியாமல் அருகில் இருந்த டிஷ்யூ பேப்பரை எடுத்து அடிக்கடி கண்களை துடைத்துக் கொண்டதை பார்க்கும்போதே இதை உணர முடிந்தது.
விக்ரம் பிரபுவை பொறுத்தவரை இந்த படத்திற்காக வெகு இயல்பாக அந்த கதாபாத்திரத்தை அவர் வெளிப்படுத்தி உள்ளார். அதேபோல மூன்று கதாநாயகிகளும் வெவ்வேறு விதமான கேரக்டர்களை அவர்களுக்கே உரிய பாணியில் நடித்துள்ளார்கள். இதில் நடிகை அபர்ணதியின் பங்களிப்பும் உழைப்பும் அபரிமிதமானது. இந்த படம் வெளியான பிறகு அவருக்கென ஒரு தனி ரீச் கிடைக்கும். நான் இதை ஏன் சொல்கிறேன் என்பது படம் வெளியான பிறகு உங்களுக்கு புரியும்.
குடும்பப் படத்தில் ஆடியன்ஸை உட்கார வைப்பது சிரமம். ஆனால் இறுகப்பற்று படத்தின் கதையும் காட்சிகளும் ரசிகர்களை இருக்கையிலே இறுகப்பற்றி உட்கார வைத்து விடும். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் புரோமோ எப்படி ஒர்க் அவுட் ஆனதோ, அதேபோல படம் வெளியாகும் போதும் நிச்சயமாக ஒர்க் அவுட் ஆகும்” என்று கூறுகிறார்