![]()
யெல்லோ _ விமர்சனம் 3.5/5
ஒரு கவிதையை போல் திரையில் மலர்ந்திருக்கும் டிராவல் ஸ்டோரி என்று யெல்லோ படத்தை ஒரே வரியில் விமர்சனம் செய்து விடலாம்.
காதலி்ல் தோல்வி, வங்கிப் பணியில் ஏற்படும் மன அழுத்தம், உடல் நலம் இன்றி வீட்டிலே முடங்கிக் கிடக்கும் அப்பா என்று பல்வேறு பிரச்சனைகளில் சிக்கிகொண்டிருக்கும் ஆதிரை தற்காலிகமாகவேணும் அதிலிருந்து விடுபட, தன் சிறு வயது தோழமைகளை தேடி கேரளாவுக்கு பயணம் மேற்கொள்கிறாள்.
ஆறு நாட்கள் மட்டுமே பழகிய ஒருவனுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் தன் தோழி ஜெனியை (நமீதா கிருஷ்ணமூர்த்தி) அதிர்ச்சியுடன் எதிர்கொள்கிறாள்.
தன்னைப்போல் பயணம் செய்பவர்கள் தற்காலிகமாக தங்கும் ஹாஸ்டல் போன்ற தங்குமிடத்தில் தோழியின் ஆலோசனைப்படி தங்குகிறார் ஆதிரை.
அங்கே வைபவ் முருகேசன் நட்பு கிடைக்கிறது. இருவருடைய எண்ண அலைவரிசையும் ஒத்துப் போகிறது.
அடுத்து தான் சந்திக்க திட்டமிட்ட நபரை ஆதிரை சந்திக்க புறப்படும் போது வைபவ் முருகேசனும் ஆதிரையுடன் இணைந்து கொள்கிறார்.
இருவரும் இணைந்து பயணத்தை தொடரும்போது கிடைக்கும் அனுபவங்கள் தான் யெல்லோ திரைப்படம்.
நாயகி ஆதிரையாக வரும் பூர்ணிமா ரவி முதிர்ச்சியான நடிப்பை மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
எவ்வளவு கடினமான பிரச்னைகளையும் ‘டேக் இட் ஈஸி’ என்பது போல் கடந்து செல்லும் பாத்திரத்தில் வைபவ் முருகேசன் பிரகாசிக்கிறார்.
மெயின் ஸ்ட்ரீம் படங்களில் இருப்பது போல் எதிர்பாராத திருப்பங்கள், உணர்ச்சிகரமான காட்சிகள் என்று எதுவுமே இல்லாவிட்டாலும் நேர்த்தியான காட்சிகள் மூலம் படத்தை போர் அடிக்காமல் கொண்டு செல்கிறார் படத்தை எழுதி இயக்கி இருக்கும் ஹரி மகாதேவன்.
இதற்காக இவருக்கு பக்க பலமாக நிற்பது ஒளிப்பதிவாளர் அபி அத்விக்தான்.
ஒரு விதத்தில் படத்தின் நாயகன் நாயகி இருவருமே ஒளிப்பதிவாளர் என்று சொன்னால் மிகையாகாது. அந்த அளவுக்கு மிக நேர்த்தியான ஒளிப்பதிவில் முத்திரை பதித்திருக்கிறார் அபிஅத்விக்.
கேரளாவின் இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பிரதேசங்கள், நீர்வீழ்ச்சிகள், படகு போக்குவரத்து என்று அத்தனை அழகான அம்சங்களையும் அப்படியே தன் கேமராவில் அள்ளிக் கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
இந்தப் படத்தை பார்த்த பின் நாமும் இப்படி ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.
அதுதான் இந்த படத்தின் வெற்றி.
வழக்கமான படங்களில் இருந்து வெகுவாக வேறுபட்டிருக்கும் இந்தப்படம் வித்தியாசமான படங்களை ரசிப்பவர்களை நிச்சயமாக கவரும்.
மதிப்பெண் 3.5/5

