தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளர்களில் ஒருவர் ஜேஎஸ்கே எனும் ஜே சதீஷ்குமார். இவரது ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பொரேஷன் ஆரோகணம் படம் மூலம் தயாரிப்பைத் தொடங்கியது. கடந்த பத்தாண்டுகளாக தொடர்ந்து பல படங்களைத் தயாரித்தும் விநியோகித்தும் வருகிறது. இரண்டு முறை தேசிய விருதுகளைப் பெற்ற தயாரிப்பாளர் இவர். ராம் இதற்கு முன் இயக்கி தேசிய விருதுகளை அள்ளிய தங்க மீன்கள் இவரது தயாரிப்புதான்.
இதுவரை ஜேஎஸ்கே தயாரித்ததிலேயே உச்சகட்ட எதிர்ப்பார்ப்பைக் கிளப்பிய படம் ராம் இயக்கிய தரமணிதான். இந்தப் படத்தில் ஜேஎஸ்கே ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்தும் உள்ளார்.
படத்தில் காவல் துறை கமிஷனராக வருகிறாரே… அவர் ஜேஎஸ்கேதான். ஒரு புதிய நடிகர் என்று யாருமே சொல்ல முடியாத அளவுக்கு மிகக் கச்சிதமாக நடித்திருந்தார். ஒரு காவல் அதிகாரியின் உடல் மொழி, உச்சரிப்பு அத்தனையும் கச்சிதமாக வெளிப்படுத்தி, ‘யார் இந்த நடிகர்?’ எனக் கேட்க வைத்திருந்தார்.
தனது நடிப்பு அனுபவம் குறித்து ஜேஎஸ்கே கூறுகையில், “இந்தக் கேரக்டருக்கு முதலில் நிறைய நடிகர்களை வரவழைத்துப் பார்த்தார் ராம். அவருக்கு திருப்தியில்லை. கடைசியில் என்னையே நடிக்கச் சொல்லிவிட்டார். ‘எனக்கு புதுமுகமா இருந்தா இன்னும் பெட்டர்… தெரிந்த முகமாக இருந்தால் அவர் மீது கதை செல்வதாக பார்வையாளர்கள் யூகிப்பார்கள். புதுமுகம் என்றால் அதற்கு வாய்ப்பில்லை’ என்றார். இருந்தாலும் தயக்கத்துடன்தான் ஒப்புக் கொண்டேன். இந்தப் பாத்திரத்துக்காக நான் எந்த முன்தயாரிப்பும் செய்யவில்லை. யாரைப் பார்த்தும் ஒத்திகை செய்யவில்லை,” என்றார்.
ஆக, இன்னொரு அழுத்தமான குணச்சித்திர நடிகர் தயார்.. யார் கண்டது.. ஹீரோவாக வந்தாலும் ஆச்சர்யமில்லை!
—