பார்ட்டி, டிஸ்கோ என பணத்தை தண்ணீராக செலவு செய்யும் பணக்கார வீட்டு இளைஞர்களை பார்க்கும் பொழுது, நடுத்தர இளைஞர்களுக்கு ஒரு விதமான சொல்ல தெரியாத உணர்வு ஏற்படுகிறது. ஆனால் அதை பொறாமை என்றும் சொல்ல முடியாது, கோபம் என்றும் சொல்ல முடியாது…..அத்தகைய கருத்தை மையமாக கொண்டு உருவான பாடல் தான் தப்பு தண்டா படத்தின் ‘டூப்ளிக்கா டோமாரி’. சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியான இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று, தற்போது யூ டூப்பில் பத்து லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது. ‘கிளாப்போர்டு புரொடக்ஷன்’ சார்பில் வி சத்யமூர்த்தி தயாரித்து இருக்கும் ‘தப்பு தண்டா’ படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குநர் சிகரம் பாலு மகேந்திராவின் சீடர் ஸ்ரீகண்டன்.
இசையமைப்பாளர் நரேன் பாலகுமாரின் புது வகையான கானா மெட்டில் உருவாகி இருக்கும் ‘டூப்ளிக்கா டோமாரி’ பாடலை பாடி இருக்கிறார் கானா வினோத். ‘ஆலிவர் பியூட்டி’, ‘அலுங்குறேன் குலுங்குறேன்’ புகழ் அமுதவன் எழுதி இருக்கும் இந்த பாடலை , மும்பையின் புகழ் பெற்ற ‘நியூ எட்ஜ்’ ஸ்டுடியோவில் இலியாஸ் அஹ்மத் மற்றும் ஷதாப் ஆகியோரால் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, தீனா இந்த டூப்ளிகா டோமாரி பாடலுக்கு நடன இயக்குநராக பணியாற்றி இருப்பது மேலும் சிறப்பு.
“டுபாகூர் பையன் என்பது தான் ‘டூப்ளிக்கா டோமாரி’ என்பதற்கு அர்த்தம். நாம் அனைவரும் அப்படிப்பட்ட ஒருவனை என்றாவது ஒரு நாள் நாம் சந்தித்து இருப்போம்…. அவன் பணக்காரன் என்பது நமக்கு பிரச்சனையாக இருக்காது….ஆனால் அவன் பொது இடத்தில் காட்டும் சீன் தான், கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இதை மையமாக கொண்டு நாங்கள் உருவாக்கி இருப்பது தான் ‘டூப்ளிக்கா டோமாரி’ பாடல். வெளியான கொஞ்ச நாட்களிலேயே பத்து லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை ‘டூப்ளிக்கா டோமாரி’ பாடல் கடந்திருப்பது எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது….நாற்பதுக்கும் அதிகமான ஸ்டண்ட் கலைஞர்கள் இந்த பாடலில் நடனமாடி இருக்கிறார்கள். தாளத்துக்கு ஏற்றார் போல் நடனம் ஆட தெரியாத ஒரு நாற்பது பேர், ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தால் எப்படி இருக்கும்…..அந்த சுவாரசியமான காட்சிகளை விரைவில் அனைவரும் காண இருக்கிறார்கள். ரசிகர்களின் ரசனைகளை முழுவதுமாக பூர்த்தி செய்யும் குணங்கள் அனைத்தும் எங்கள் ‘தப்பு தண்டா’ படத்தில் நிறைந்திருக்கிறது என்பதை உறுதியாகவே சொல்லுவேன்….” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் தப்பு தண்டா படத்தின் இயக்குநர் ஸ்ரீகண்டன்.