இந்திய சினிமாவே ஆவலோடு காத்துக்கொண்டிருக்கும் ‘பாகுபலி 2′ படம் திரைக்கு வருவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. இதுவரை எந்த ஒரு இந்தியப் படமும் வெளியாகாத அளவிற்கு அதிகமான திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கிறது பாகுபலி 2.
உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 6000க்கும் அதிகமான திரையரங்களில் இப்படத்தை வெளியிட இருப்பதாகவும், அமெரிக்காவில் மட்டும் சுமார் 1000 திரையரங்களுக்கு மேல் இப்படம் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுவரை அமெரிக்காவில் இவ்வளவு தியேட்டர்களில் எந்த ஒரு இந்தியப் படமும் வெளியானது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் ‘பாகுபலி 2’வின் தெலுங்குப் படம் சுமார் 400 தியேட்டர்களிலும், இந்திப் படம் சுமார் 300 தியேட்டர்களிலும், தமிழ்ப் படம் சுமார் 200 தியேட்டர்களிலும் சுமார் 700
இடங்களில் வெளியாக உள்ளது. கனடாவில் 80 இடங்களில் சுமார் 150 தியேட்டர்கள் வரை படத்தை வெளியிட உள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் பிரமிக்க வைக்கும் ‘ஐமேக்ஸ்’ வடிவில் சுமார் 50 இடங்களில் திரையிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
அமெரிக்காவில் ஒரு நாள் முன்னதாகவே ஏப்ரல் 27ஆம் தேதி பல ஊர்களில் படத்தின் சிறப்பு பிரிவியூ காட்சிகளை நடத்த உள்ளார்கள். அதற்கான முன்பதிவு 21ஆம் தேதியே
ஆரம்பமாக உள்ளதாம். அமெரிக்காவில் மட்டும் ‘பாகுபலி 2′ படம் பல கோடி ரூபாயை வசூல் செய்யும் என்கிறார்கள். இது தவிர உலகின் பல நாடுகளில் எதிர்பார்க்காத அளவிற்கு பிரமாண்டமாக வெளியாகவிருக்கிறதாம் ‘பாகுபலி 2′.