ஒருவர் தனது வாழ்வின் மிக முக்கியமான நபரை பார்க்க ஜெயிலிலிருந்து கடும் முயற்சிகளுக்கு பிறகு பரோலில் வருவது தமிழ் நாட்டு மக்களிடையே பரபரப்பு செய்தியாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஜெயில் ‘பரோல்’ என்பதை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் தான் ’12-12-1950′. இப்படத்தில் கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ளவர் கபாலி செல்வா. ஜெயில் தண்டனையில் இருக்கும் ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகர், ரஜினியின் ஒரு படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காண பரோலில் வர ஆசைப்பட்டு எப்படி வந்தார் , படத்தின் முதல் கட்சியை பார்த்தாரா இல்லையா என்பது தான் இந்த காமெடி கலந்த ஜனரஞ்சகமான படத்தின் கதை. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து வரும் வாரங்களில் ரிலீசாக தயாராகவுள்ளது. உலகம் முழுவதும் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்களுக்கு சமர்ப்பணமாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் குறித்து கபாலி செல்வா பேசுகையில் , ” ஒரு வருடம் முன்பு செய்தித்தாள் ஒன்றில் பரோலில் வந்த ஒரு சிறை கைதியின் பற்றிய ஒரு சுவாரஸ்யமான செய்தியை படித்தேன். அது தான் ’12-12-1950′ படத்தின் கதை உருவாக காரணமாக இருந்தது. ரஜினி சாரின் மிக பெரிய ரசிகனான எனக்கு அவரது பிறந்த நாளான இந்த தலைப்பை விட சிறப்பான தலைப்பு இருக்காது என தோன்றியது. இப்படத்தில் காமெடி, எமோஷன்ஸ் மற்றும் கலகலப்பு சரியான கலவையில் தரப்பட்டுள்ளது. ரஜினி சார் ரசிகர்கள் மட்டும் இன்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் ரசிக்கக்கூடிய படமாக இருக்கும். ’12-12-1950′ வெகு விரைவில் ரிலீஸாகவுள்ளது ”