தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகவும், பெருமைக்குரிய தயாரிப்பு நிறுவனமாகவும் கருதப்படும் ‘சத்யா மூவிஸ்’ நிறுவனம் தற்போது தங்களின் ஐம்பது வருட திரையுலக வாழ்க்கையை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது….இதனை ரசிகர்களோடு இணைந்து விமர்சையாக கொண்டாடும் வகையில், ‘சத்யா மூவிஸ்’ தயாரிப்பில் உருவாகி, இன்று வரை ரசிகர்களின் உள்ளங்களில் நீங்கா இடத்தை பெற்று இருக்கும் ‘பாட்ஷா’ படத்தை நவீன தொழில் நுட்பத்தில் மெருகேற்றி, அதனை மீண்டும் வெளியிடுகிறார் ஆர் எம் வீரப்பனின் மகன் தங்கராஜ். இவர் சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து அவரின் வாழ்த்துக்களை பெற்றார். லட்சுமி நாராயணனின் 5.1 ஒலி அமைப்புகளும், ஏனைய நவீன தொழில் நுட்ப வேலைப்பாடுகளும், டிஜிட்டல் பதிப்பில் உருவாகி இருக்கும் ‘பாட்ஷா’ படத்திற்கு பக்கபலம், என்பதை உறுதியாகவே சொல்லலாம்.
“டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேறி இருக்கும் பாட்ஷா படத்தின் டிரைலர், ரஜினி சாரை வெகுவாக கவர்ந்து விட்டது. இந்த முயற்சிக்கு பின்னால் ஆர் எம் வீரப்பன் சாரின் மகனாகிய என்னுடைய பங்கு இருக்கிறது என்பதை அறிந்து கொண்டார். தொழில் நுட்ப ரீதியாக என்னவெல்லாம் செய்ய பட்டிருக்கிறது என்பதை விரிவாக ரஜினி சாருக்கு விளக்கினேன். மேலும் படத்தின் பின்னணி இசையை முழுவதுமாக தேவா சார் புதுப்பித்து இருக்கும் விதத்தை கேள்விப்பட்டதும் மகிழ்ச்சி அடைந்தார். அதுமட்டுமின்றி, பாட்ஷா படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு ஆர் எம் வீரப்பன் சார் கையாண்ட யுக்திகளையும், எடுத்த முயற்சிகளையும் எங்களுக்கு ரஜினி சார் விவரித்தார்.
இந்த டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் உருவாகி இருக்கும் பாட்ஷா படத்தை எவ்வாறு ரசிகர்களிடத்தில் முழுமையாக கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்கின்ற யோசனைகளை எங்களோடு பகிர்ந்து கொண்டார். படம் வெளியீட்டு திட்டங்களை பற்றியும், வெளியாகும் தேதி பற்றிய விவரங்களையும் கேட்டறிந்த ரஜினி சாரிடம், நாங்கள் ஏற்பாடு செய்திருக்கும் பிரம்மாண்ட பிரத்யேக காட்சி மற்றும் நன்கொடைக்காக லண்டனில் ஒளிபரப்படும் சிறப்பு காட்சி பற்றியும், ஜப்பான் ரசிகர்களின் வருகையை பற்றியும் தெரியப்படுத்தினோம். நாங்கள் எடுத்த முயற்சிகளுக்கு உறுதுணையாய் இருந்து, படம் வெற்றி பெற அவருடைய ஆசீர்வாதங்களையும், வாழ்த்துக்களையும் எங்களுக்கு வழங்கினார் ரஜினி சார்.” என்று ‘சத்யா மூவிஸ்’ சார்பில் கூறுகிறார் திரு. தங்கராஜ்.