![]()

பூ சாண்டி வரான் – விமர்சனம்
காமெடி செய்து கலகலப்பூட்டிய பேயில் தொடங்கி, கலங்க வைத்து திகிலூட்டிய பல பேய் படங்களைப் பார்த்த ரசிகர்களுக்கு அமானுஷ்ய சக்திகளை மையப்படுத்தி வந்திருக்கும் அசத்தலான படம்தான் பூ சாண்டி.
பூ சாண்டி என்ற சொல் இப்போதும் தமிழகத்தில் புழக்கத்தில் இருப்பதை நாம் பல இடங்களில் காணலாம். சொல் பேச்சு கேட்காத குழந்தைகளை பூச்சாண்டியிடம் பிடித்துக் கொடுத்து விடுவேன் என்று சொல்லி பயமுறுத்தி பணிய வைக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது.
தமிழகத்தை களப்பிரர்கள் ஆண்ட காலத்தை இருண்ட காலம் என்று வரலாற்றியலாளர்கள் குறிப்பிடுவார்கள். சைவர்கள் நெற்றியில் திருநீறு பூசிக்கொண்ட காரணத்தாலேயே கடுமையாக தண்டனை விதிக்கப்பட்ட காலம் அது. சிவனடியார்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடல் முழுவதும் திருநீறு பூசி தெருவில் செல்வார்களாம். அப்படி திருநீறு பூசிக்கொண்ட ஆண்டிகள் சிவனாண்டிகள். பூச்சாண்டி என்ற சொல் எப்படி புழக்கத்திகுக்கு வந்தது என்பதற்கான விடை படத்தின் இறுதியில் சொல்லப்படுகிறது.
மலேஷியாவில் நடக்கும் கதை இது. பழங்கால நாணயங்களை சேகரிக்கும் மாற்றுத் திறனாளியும் அவரது நண்பர்கள் இருவரும் இறந்து போனவர்களின் ஆவியுடன் பேசுகிறார்கள். இதற்கு அவர்கள் பழங்கால நாணயம் ஒன்றை பயன்படுத்துகிறார்கள்.
அப்போது வரும் மல்லிகா என்ற இளம் பெண்ணின் ஆவி, கண்ணுக்குத் தெரியாத நதி ஒன்றில் தான் துரோகத்தில் தான் சிக்கி உயிரிழந்த கதையை சொல்கிறது.
தொடர்ந்து பேசுவதற்கு இவர்கள் சில விவரங்களைக் கேட்க, அதற்கு அந்த ஆவி சில நிபந்தனைகள் விதிக்க, நண்பர்கள் மறுக்கவே விபரீத விளைவுகள் ஏற்படுகின்றன. நண்பர்களில் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழக்கிறார்.
மதுரையிலிருந்து மலேஷியா சென்று அமானுஷ்ய சக்திகள் குறித்து ஆய்வு செய்து கட்டுரை எழுதும் மிர்ச்சி ரமணாவுக்கு இந்த செய்திகள் தெரிய வருகிறது. யார் அந்த மல்லிகா என்று தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறார். உயிரிழந்த நண்பரின் மர்மம் குறித்து உண்மைகளை அறிய அவனது கூட்டாளிகள் இருவரும் மிர்ச்சி சிவாவுக்கு உதவியாக உடன் செல்கின்றனர்.
மல்லிகா குறித்து விசாரிக்கச் சென்ற இடத்தில் மல்லிகாவே இருப்பதைக் கண்டு அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுகிறது. மல்லிகா தன்னிடம் அந்த நாணயம் எப்படி வந்தது என்று சொல்லும் ப்ளாஷ் பேக் கதையிலிருந்து படம் மேலும் விறுவிறுப்பாகிறது. பல்வேறு மர்ம முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழ்கின்றன.
அமானுஷ்ய சக்திகளை ஆய்வு செய்து பத்திரிகையில் எழுதும் பாத்திரத்தில் மிர்ச்சி ரமணா அருமையாக நடித்திருக்கிறார். எந்த ஒரு காட்சியிலும் இவர் நடிப்பதுபோலவே தெரியவில்லை. அவ்வளவு இயல்பாக பாத்திரத்தை உள்வாங்கி நடித்திருக்கிறார்.
மிர்ச்சி ரமணா தவிர மற்ற அனைத்து பாத்திரங்களும் மலேஷியாவைச் சேர்ந்தவர்களாம். மல்லிகா வேடத்தில் வரும் ஹம்சினி பெருமாள் அழகாக இருக்கிறார். இயல்பாக நடிக்கிறார். தமிழ்ப் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தினால் கண்டிப்பாக ஒரு ரவுண்ட் வருவார்.
நடக்க முடியாத மாற்றுத் திறனாளியாக வரும் லோக நாதனும் மறக்க மிடியாத பாத்திரம்தான். சிறுநீர் கழிப்பது தெரியாமல் மலம் கழிப்பது தெரியாமல் அடுத்தவர் தயவை எதிர்பார்த்து வாழும் என் வாழ்க்கையை ஒரு நாள் வாழந்து பாருங்கடா புரியும்….என்று அவர் உடைந்த குரலில் சொல்லும்போது மனதை பிசைகிறது.
படத்துக்கு மிகப் பெரிய பலம் ஓளிப்பதிவு மற்றும் இசையமைப்பும்தான். மலேஷியாவின் நகரத்து வனப்பையும் கிராமத்து அழகையும் ஒரு சேர நம் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அஷலிஷம் பின் முகமது அலி. அதேபோல் அமானுஷ்ய படம் என்பதற்காக அதீத ஒலியில் இசைக்கருவிகளை அலற விடாமல் தேவைக்கேற்ற இடத்தில் சரியான முறையில் பயன்படுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் டஸ்டின் ரிதான் ஷா.
மிகக்குறைந்த முதலீட்டில் அதிகம் பிரபலம் ஆகாத புதுமுகங்களை வைத்து இப்படி ஒரு படத்தைக் கொடுத்ததற்காகவே இயக்குநர் ஜே.கே.விக்கியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
படத்தை பார்த்து முடித்ததும் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதுதான் இந்த படத்திற்கும் இதை உருவாக்கிய படக்குழுவுக்கும் கிடைத்த வெற்றி.
மதிப்பெண் 4/ 5
